வசனமில்லா நடிப்பின் மூலம் காண்பவர்களை எல்லாம் தன்னுடைய ரசிகர்களாக மாற்றிவிடுகிறார் பவித்ரா. நடிப்பு மட்டுமின்றி, நேர்மறையாகச் சிந்திக்கும் கலையையும் தன்வசப்படுத்தியிருக்கிறார்.
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது தனக்குள்ளிருந்த நடிப்புத் திறமையை பவித்ரா உணர்ந்தார். நிறைய கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பொதுத்தேர்வில் 1140 மதிப்பெண்கள் பெற்று, சென்னை எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்தார்.
“அங்குதான் எனக்குள் இருந்த இன்னொரு திறமை வெளிவந்தது. ‘மைம்’ (mime) எனப்படும் வசனங்களற்ற நடிப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். ஒரு நிகழ்ச்சிக்கு ‘மைம்’ கோபி சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவர் என் நடிப்பைப் பார்த்து, ‘இந்தப் பெண் சிறப்பாக வருவார்’ என்று மேடையில் சொன்னபோது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை” என்று சொல்லும் பவித்ராவின் முகம் பெருமிதத்தால் ஒளிர்கிறது.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதற்காக மைம் கோபி நடத்திய ‘மா’ மைம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பவித்ராவுக்கு அழைப்பு வந்தது. இதில் கல்லூரிப் பேராசிரியர்களிடமிருந்தும் மாணவிகளிடமிருந்தும் வாழ்த்துகள் குவிந்தன. பின்னர் மைம் கோபியின் ஸ்டூடியோவில் பவித்ராவுக்கு முறையான பயிற்சியும் அளிக்கப்பட்டது.
“என் வாழ்க்கையின் முக்கியமான மாற்றங்கள் அந்த ஸ்டூடியோவில்தான் நிகழ்ந்தன. என் மீது பரிதாபப் பார்வை வீசுபவர்களையும் உன்னால் என்ன செய்ய முடியும் என்று சொன்னவர்களையுமே அதிகமாகச் சந்தித்திருந்தேன். அதனால் என்னிடம் தன்னம்பிக்கை குறைவாகவே இருக்கும். ஆனால், மைமிங் குழுவில் என்னை ஒரு மனுஷியாக நடத்தினார்கள், என்னையும் அப்படி உணரவைத்தார்கள். இழந்த தன்னம்பிக்கையை மீட்டெடுத்தேன். அன்பானவர்களைச் சம்பாதித்தேன். வெற்றிக்கு உருவம் தடையல்ல என்பதைச் சாதித்துக் காட்டிய கின்னஸ் பக்ருதான் என் ரோல் மாடல்” என்று சொல்லும் பவித்ரா, திரைப்படத்திலும் சின்னத் திரையிலும் நடித்திருக்கிறார்.
தன் வாழ்நாளின் மறக்க முடியாத நிகழ்வாக, தான் படித்த எத்திராஜ் கல்லூரிக்கே சிறப்பு விருந்தினராகச் சென்றதைக் குறிப்பிடுகிறார்.
“நிலையற்ற மனித வாழ்க்கையில் இல்லாததை நினைத்து வீணாக வருந்தக் கூடாது. ஒருகாலத்தில் என் உயரத்தைக் குறையாகக் கருதிய உலகத்தை, இன்று என் திறமையால் நிறைவாகக் கருத வைத்துவிட்டேன். இனி எனக்கு எல்லாமே ஜெயம்தான்” என்கிறார் பவித்ரா.