பெண் இன்று

நெய்வேலி மகளிர் திருவிழா: கோலாகலப் போட்டிகளும் அட்டகாசமான பரிசுகளும்

செய்திப்பிரிவு

‘தி இந்து - பெண் இன்று’இணைப்பிதழ் சார்பாக நடந்த மகளிர் திருவிழாவில் பிற்பகல் நிகழ்ச்சிகள் ஒவ்வொருவரையும் உற்சாகத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்றன.

மண் மணம் வீசிய கலை நிகழ்ச்சிகள்

ஸ்ரீ அருள்கிருஷ்ணா நாட்டியாலயா கலைக்குழுவினரின் பறையாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற கிராமியக் கலை நிகழ்ச்சிகளும் ‘ஏஞ்சல்’ கலைக்குழுவைச் சேர்ந்த முத்து - ராஜேஸ்வரியின் நாட்டுப்புறப் பாடலும் அரங்கை அதிர வைத்தன. ஏராளமான வாசகிகள் கலைக்குழுவினரின் இசைக்கு ஏற்ப நடனமாடி, எல்லோரையும் உற்காகப்படுத்தினர்.

போட்டிகள்… பரிசுகள்…

மகளிர் திருவிழாவின் ஒரு பகுதியாகப் புதுமையான பல போட்டிகள் வாசகிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பலூன் உடைத்தல், தலையில் ‘ஸ்ட்ரா’ சொருகுதல், பந்து கடத்துதல், ‘கப்’அடுக்குதல், மவுன நாடகம் (மைமிங்), கோலம், பாட்டு போன்ற போட்டிகள் நடைபெற்றன. வாசகிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் விதமாகப் போட்டிகளில் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றிபெற்ற வாசகிகளுக்கு மெகா பரிசுகளும் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இவை தவிர, பொது அறிவு, ‘பெண் இன்று’இணைப்பு குறித்த கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்த வாசகிகளுக்கு ஆச்சரியப் பரிசுகளும் வழங்கப்பட்டன. பிரியா, ஜெயலஷ்மி என்ற இரண்டு வாசகிகள் பம்பர் பரிசுகளைத் தட்டிச் சென்றனர். விழாவில் கலந்துகொண்ட வாசகிகள் அனைவருக்கும் அமைதி அறக்கட்டளை மற்றும் பசுமைத் தாயகம் சார்பில் மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டன. இந்தப் பரிசு மழை வாசகிகளுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்திருந்தது.

காலை நிகழ்ச்சிகளை கேத்தரின் அனிதாவும், பிற்பகல் போட்டிகளைச் சின்ன திரைத் தொகுப்பாளினி தேவி கிருபாவும் சிறப்பாகத் தொகுத்துவழங்கினர். விழாவில் கலந்துகொண்ட வாசகிகள் அனைவருக்கும் சுவையான மதிய உணவும் வழங்கப்பட்டது. ‘தி இந்து’இணைப்பிதழ்கள் ஆசிரியர் அரவிந்தன் நன்றியுரை வழங்க, விழா இனிதே நிறைவு பெற்றது.

மகளிர் திருவிழாவை ‘தி இந்து- பெண் இன்று’ உடன் ‘லலிதா ஜுவல்லர்ஸ்’, ‘தி சென்னை சில்க்ஸ்’, ‘எச்டூஎச் ஆரஞ்ச் இம் பெக்ஸ்’ கரூர், ‘ஜெயா உடோபியா’, ‘தங்கம் நல்லெண்ணெய்’, ‘மை ட்ரீம்ஸ்’, ‘விப்ஸ்’ மற்றும் ‘புதுச்சேரி ஹோட்டல் கார்த்திக் குழுமம்’, ’விழுப்புரம் க்ரீன் ட்ரெண்ட்ஸ்’ போன்ற நிறுவனங்கள் இணைந்து வழங்கின.


படங்கள்: எம். சாம்ராஜ்

SCROLL FOR NEXT