பெண் இனத்தை அடக்கி ஆள, அதிகாரம் செய்ய ஆண் இனம் எடுத்த அறிவாயுதம்தான் பிரித்தாளும் சூழ்ச்சி. உலகெங்கும் பெண் சமூகத்தை, ஆண் சமூகம் ஒருவிதக் காழ்ப்புணர்வோடுதான் பார்த்துவந்திருக்கிறது. மதத் தலைவர்கள், ஆட்சியாளர்கள், மாவீரர்கள், புகழ் பெற்ற படைப்பாளிகள் என்று இதுக்கு யாரும் விதிவிலக்கு அல்ல.
‘கடவுளே! உமக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன்,
என்னை ஒரு பெண்ணாகப் படைக்காததற்கு ’
என்கிறது ஓர் ஆணின் வழிபாடு.
மாவீரன் நெப்போலியன் போனபார்ட், “பெண்கள் நம் சொத்து. ஆனால், நாம் அவர்கள் சொத்து அல்ல. அவர்கள் நமக்காகப் பிறந்தவர்கள். பெண்கள் பிள்ளைப் பெற்றுத்தரும் இயந்திரமே தவிர, வேறு ஒன்றும் இல்லை. ஆண், பெண் சமத்துவம் என்பது ஒரு பைத்தியக்காரக் கருத்தாக்கம்” என்கிறார்.
“எப்போதெல்லாம் ஒரு பெண் இறக்கிறாளோ, அப்போதெல்லாம் உலகத்தில் ஒரு சண்டை குறையும்” என்கிறது ஜெர்மன் பழமொழி.
“ஆண் ஆணையிடுகிறான், பெண் அதற்கு அடிபணிந்து போக வேண்டும்” என்கிறார் லார்ட் டென்னிசன்.
இவற்றுக்குச் சற்றும் குறைந்ததல்ல தமிழ்ப் பழமொழிகள்.
‘பெண் புத்தி பின் புத்தி’
‘அடுக்களைக்கு ஒரு பெண்ணும்
அம்பலத்திற்கு ஒரு ஆணும்’
‘அடுப்பே திருப்பதி
அகமுடையானே குலதெய்வம்’
‘பெண்ணை அடித்து வளர்க்கணும்
முருங்கை மரத்தை ஒடித்து வளர்க்கணும்’
என்றெல்லாம் கூறிப் பெண்ணைப் பிற்படுத்துகின்றன தமிழ்ப் பழமொழிகள்.
‘பெண்ணே பெண்ணுக்கு எதிரி’ என்பது ஆண்கள் கட்டிவிட்ட கட்டுக் கதை.
‘மாமியார் மெச்சிய மருமகள் இல்லை, மருமகள் மெச்சிய மாமியாரும் இல்லை.’
‘மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்.’
‘தன் மகன் போனாலும் குற்றம் இல்லை, மருமகள் தாலி அறுக்க வேண்டும்.’
‘ஊரையே விழுங்கின்ற மாமியாருக்கு, அவரையே விழுங்குகின்ற மருமகள்.’
என்றெல்லாம் பெண்ணைப் பெண்ணுக்கு எதிரியாக்குகின்றன பழமொழிகள்.
திருமண நிகழ்வின்போது, பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டு வாங்குவது மணமகனின் தாய்தான் என்று எல்லா இடங்களிலும் கூறப்படுகிறது. மாப்பிள்ளைக்கு வரதட்சணை வாங்க வேண்டாம் என்ற எண்ணம் இருந்தால், அதைத் தீவிரமாக மறுக்க வேண்டும். அதை விடுத்து, தாயைக் கேட்கவிட்டு, ஒன்றும் அறியாத அப்பாவிபோல் இருப்பது கோழைத்தனம். தன் பேராசையைத் தாயின் அறியாமையைப் பயன்படுத்திச் சாதகமாக்கிக்கொள்வது எந்த விதத்தில் நியாயம்? அதுபோன்று, மாப்பிள்ளையின் அப்பாவுக்கு வரதட்சணை வாங்குவதில் உடன்பாடில்லை என்றால், அதைத் தீவிரமாக எதிர்த்திருக்க வேண்டும். அவரும் தன் ஆசையை மனைவி மீது போட்டுவிட்டுப் பேசாமல் இருப்பது பாசாங்குத்தனம். இதில் இரு சூழ்ச்சிகள் உளளன. ஒன்று, ஆண்கள் சமூகத்தில் தங்களை நல்லவர்கள்போல் காட்டிக்கொள்வது. மற்றொன்று, நாளைக்குத் திருமணமாகி வரும் பெண் தங்களிடம் மதிப்பும் மரியாதையும் காட்ட வேண்டும் என்ற எண்ணம். நம் வீட்டு ஆண்கள் கோபப்படாதவர்களும் அல்ல; வீட்டில் பெண்களை அடக்கியாளாதவர்களும் அல்ல.
புகுந்த வீட்டுக்குள் பெண் நுழையும் போதே, தங்கள் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டு வாங்கியது தன் மாமியார்தான் என்ற எண்ணம் படிந்துவிடுவதால், மாமியார் அவளுக்கு உடனடியாக நேரடி எதிரியாகிவிடுகிறார். புது மணப்பெண் இது குறித்து சற்றுச் சிந்தித்தால் இதற்குக் காரணம் யார் என்று புரிந்துவிடும்.
தன் தாயை, மருமகள் எதிரியாகப் பார்த்தவுடன், அவள் மீது உடனடியாக வெறுப்பு கொள்பவள் அந்த வீட்டில் பிறந்த பெண். கணவனும் மகனும் ஆதரவாக இல்லாத நிலையில் தன் நிலையை மகளிடம் சொல்லித் தீர்க்கும் தாய், அதைத் தட்டிக் கேட்கும் மகள், இதனால் கோபம் கொள்ளும் மருமகள் மூவரும் மும்முனையில் எதிரிகளாகிவிடுகின்றனர்.
பெண்களே, இது பற்றிச் சிந்தியுங்கள். அறியாமை நிறைந்த மாமியார் ஆபத்தானவர் அல்லர். ஆனால், அறிவார்ந்த அவள் கணவனும் மகனும்தான் என்றும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவர்கள். தங்களைப் பகடைக் காயாக எண்ணி, உருட்டி விளையாடும் ஆண்களுக்கு எதிராகப் பெண்கள் ஓரணியில் திரள வேண்டும். ‘சகோதரித்துவம் ’ என்பது மகத்தானது. பெண்கள் ஒருவருக்கொருவர் எதிரிகள் அல்லர். தாங்கள் ஒருவருக்கொருவர் சகோதரிகள் என்பதைப் புரிந்துகொண்டால், வீட்டில் நிலவும் பல நூற்றாண்டு கால ஆணாதிக்க அடக்குமுறையை முறியடித்து விட முடியும்.
- கட்டுரையாளர், பேராசிரியை
தொடர்புக்கு: premakarthikeyyan@gmail.com