பெண் இன்று

சட்டமே துணை: பொது இடங்கள் பெண்ணுக்கு இல்லையா?

பி.எஸ்.அஜிதா

நவம்பர் 25 – டிசம்பர் 10: பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான காலம் என ஐநா அறிவித்துள்ளது

சரிகா ஷாவும் அவருடைய தோழிகளும் எத்திராஜ் கல்லூரிக்கு எதிரே இருந்த பழரசக் கடைக்குச் செல்வதற்காகச் சாலையைக் கடந்தார்கள். அப்போது ஆட்டோக்களில் வந்த இளைஞர்கள், பெண்களைப் பார்த்து உற்சாகம் பொங்கக் கூக்குரலிட்டார்கள். பாட்டில்களில் இருந்த தண்ணீரைப் பெண்கள் மீது ஊற்றினார்கள். பயந்து போன பெண்கள் வேகமாக நடந்தபோது, அதில் ஒருவன் பெண்கள் மீது விழுந்தான். அதில் கீழே விழுந்து தலையில் அடிப்பட்ட சரிகா ஷா, சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

பட்டப் பகலில் பலபேர் முன்னிலையில் நடந்த கொடூரம் இது. 1998-ம் ஆண்டு ஜூலை 18 அன்று உயிரிழந்த சரிகா ஷாவைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பெண்கள் மீதான துன்புறுத்தல்கள் தடைச் சட்டத்தை இயற்றியது. ஆரம்பத்தில் பாலியல் சீண்டல்களைத் தடை செய்யும் சட்டம் (ஈவ் டீசிங் தடுப்புச் சட்டம்) என்ற பெயரில் இயற்றப்பட்டது. பின்னர் பெண்களைத் துன்புறுத்தும், அச்சுறுத்தும், தொல்லை தரும் குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்கும் சட்டமாகப் பெயரும் உள்ளடக்கமும் மாற்றப்பட்டன.

வேண்டாமே காதல் முலாம்

தமிழ்நாட்டில் இயற்றப்பட்ட இந்தச் சட்டம், பொது இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு தொல்லைகள் குறித்துப் பேசுகிறது. பொது இடங்கள் என்பது பேருந்து, ரயில், திரையரங்கம், கண்காட்சி, கோயில், திருவிழாக்கள் என்று அனைத்தையும் உள்ளடக்கியது. சரிகா ஷா எந்தத் தவறும் செய்யாமலேயே இறந்துபோனார். அந்த இளைஞர்களுக்கும் கொலை செய்யும் நோக்கமில்லை. ஆனால் பெண்களைப் பார்த்ததுமே, ஏதோ இதுவரை கண்டிராத அபூர்வத்தைப் பார்ப்பது போல அவர்களைச் சீண்டி, தொட்டுப் பார்த்துவிட வேண்டும் என்ற மலினமான ஆணவ, எள்ளல் மனநிலை ஆண் சமூகத்தின் பொதுப்புத்தியில் மண்டிக் கிடக்கிறது.

இன்றுவரை திரைபடங்களில் பெண் போகப் பொருளாகக் காட்டப்பட்டுவருகிறாள். கதாநாயகியை அடைந்தேதீர வேண்டும் என்று நினக்கிறவனை, கதாநாயகனாகச் சித்தரிக்கும் அவலமும் தொடர்கிறது. பெண்களுக்குப் புத்தி குறைவு என்பதாகச் சித்தரிக்கப்படுகிறது. பெண்களைக் காதலிப்பதற்காக ஏமாற்று, நடி, திருடு, பொய் சொல் என்று மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. பின்தொடரும் குற்றத்தைக் கதாநாயகனைச் செய்ய வைத்து, அந்தக் குற்றத்துக்குக் காதல் என்ற முலாம் பூசி, சிந்திக்க முடியாத மரமண்டைகளாக இளைஞர்களையும் யுவதிகளையும் கட்டிப் போடுகிறது.

பேருந்தில் உரசினால் கைது

சரிகா ஷா இறப்புக்குப் பின்னர் வந்த சட்டம், பொது இடங்களில் அச்சம் ஊட்டுதல், அவமானப்படுத்துதல், மிரட்டுதல் போன்றவற்றைப் பெண்களைத் துன்புறுத்தும் செயல் என்று வரையறுக்கிறது. பேருந்தில் ஒரு பெண்ணிடம் வேண்டுமென்றே நெருங்கி நிற்பது, உரசுவது, அநாவசியமாகப் பேசுவது, பாலியல் ரீதியான கோரிக்கைகள் விடுப்பது, மிரட்டுவது, சைகை செய்வது, பாடுவது, திரைப்பட வசனங்களைப் பேசுவது போன்றவையும் பொது இடங்களில் பெண்கள் மீதான தொல்லைகள் தடைச் சட்டத்துக்குள் அடங்கும்.

ஒரு பெண் இப்படிப்பட்ட தொல்லை களுக்கு ஆளானால், நடத்துநரிடம் புகார் செய்யலாம். அவர் பேருந்தைப் பக்கத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு ஓட்டிச் செல்லும்படி ஓட்டுநரிடம் சொல்ல வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் மீது புகார் கொடுத்து, கைது செய்ய உறுதுணையாக இருக்க வேண்டும். அப்படி ஒரு நடத்துநர் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைக் கேட்காமலோ, கண்டுகொள்ளாமலோ, இது தன் வேலை இல்லை என்று சொன்னாலோ பாதிக்கப்பட்ட பெண், நடத்துநர் மீதும் புகார் தர வேண்டும். குற்றத்துக்குத் துணை போகும் நடத்துநரையும் குற்றவாளி என்றே சட்டம் கருதுகிறது.

திரையரங்கத்தில் பெண்களுக்கு ஏற்படும் சீண்டல்கள், தொல்லைகள் எதுவாக இருந்தாலும் திரையரங்க மேலாளரிடம் புகார் கொடுக்கலாம். மேலாளர் காவல் நிலையத்துக்குப் புகார் கொடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், அவர் குற்றத்துக்குத் துணை போகிறவராக, அவர் மீது புகார் தருவது அவசியம்.

பெண்ணுக்குத் துணை நிற்போம்

சம உரிமையை நோக்கியும் சமூக வளர்ச்சியை நோக்கியும் சமூகம் முன்னேற இருபாலருக்கும் பொது இடங்களில் பாதுகாப்பும் சுதந்திரமும் வேண்டும். பொது இடங்களைப் பயன்படுத்திக்கொள்ள ஏதுவான சூழ்நிலையும் அவசியம்.

பெண்கள் மீதான துன்புறுத்தல் தடைச் சட்டம் (Tamil Nadu Prohibition of Women Harassments Act) என்ற நம் மாநிலத்தின் பிரத்யேக சட்டத்தை அமல்படுத்த, 2000-2002 ஆண்டுகளில் வெள்ளைப் படையணி என்று காவல்துறையில் சிறப்புப் பெண்கள் பிரிவை ஏற்படுத்தியிருந்தனர். இந்தப் பெண் காவலர்கள் சாதாரண மக்களைப் போல உடை அணிந்து, பள்ளி, கல்லூரி நேரங்களில் பேருந்துகளிலும் ரயில்களிலும் குற்றவாளிகளைப் பிடித்தனர். அப்போதும்கூட, பொதுமக்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் நின்று, குற்றம் செய்யும் ஆண்களைப் பிடிக்கவோ, காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லவோ முன்வரவில்லை.

உடலைத் தாண்டி மனம், அறிவு, ஆற்றல், குணநலன், வாழ்க்கை லட்சியங்கள் போன்ற தொலைநோக்கைப் பற்றியும் திரைப்படங்கள் வரும்போது, உடல் ஈர்ப்புக்கு வெளியிலும் ஆண்-பெண் உறவுகள் வளரும்போது வன்முறைகள் குறையும். பெண்கள் மீதான வன்முறையைத் தடுக்கும் சட்டத்தைத் திரும்பத் திரும்ப அதிக அளவில் பயன்படுத்தினால்தான், பொது இடங்களில் பெண்கள் மீதான வன்முறைகள் குறையும். அறிவார்ந்த சமூகமாக மாறுவதற்கு நடைமுறையில் சட்டத்தைப் பயன்படுத்த பலரும் முன்வர வேண்டும். நடைமுறைக்கு வராத எந்தச் சட்டமும் பலனைத் தராது.

கட்டுரையாளர், வழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

SCROLL FOR NEXT