இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான ஹீப்ரு மொழிக் கவிஞர்களுள் ஒருவர் லீயா கோல்ட்பெர்க். அவரது குடும்பம் லித்துவேனியாவில் வசித்துவந்தபோது ரஷ்ய நகரமான கோனிஸ்பெர்கில் (தற்போதைய கலினின்கிராட்) 1911-ல் லீயா பிறந்தார். அவருக்கு மூன்று வயது ஆனபோது முதலாம் உலகப் போர் வெடித் ததால் பாதுகாப்பான சூழல் தேடி அவரது குடும்பம் ரஷ்யாவுக்குப் புலம்பெயர்ந்தது. போர் முடிந்த பிறகு மீண்டும் லித்துவேனியாவுக்குப் புலம்பெயர முயன்றபோது அவரது குடும்பத்துக்குப் பெரும் துயரம் நிகழ்ந்தது. லித்துவேனிய எல்லையில் உள்ள ரோந்துப் படையினர் லீயாவின் தந்தையை ‘ரஷ்யாவின் போல்ஷ்விக் உளவாளி’ என்று குற்றம் சாட்டிச் சிறைவைத்ததால் அந்த இடத்தை விட்டு அவர்களால் நகர முடியவில்லை.
திரும்பிவராத தந்தை
தினசரி காலையில் லீயாவின் தந்தைக்கு மரண தண்டனை நிறைவேற்றப் போவதாகச் சொல்லிக் கடைசி நொடியில் அதை ரத்துசெய்வார்கள். இப்படியே ஒரு வாரம் கழிந்த பிறகுதான் குடும்பத்தினரால் தங்கள் குடும்பத் தலைவரைச் சந்திக்க முடிந்தது. லித்துவேனியாவுக்கு அவர்களால் திரும்ப முடிந்தாலும் லீயா தந்தையின் மனநலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. மனநல சிகிச்சைக்காகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்ற லீயாவின் தந்தை கடைசிவரை திரும்பிவரவில்லை.
தத்தெடுத்துக்கொண்ட மொழி
யூதக் குடும்பமாக இருந்தாலும் லீயாவின் சிறுவயதில் அவரது வீட்டில் ஹீப்ரு மொழியில் யாரும் பேசியதில்லை. பத்து வயதுக்குப் பிறகுதான் ஹீப்ருவைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அதாவது ஹீப்ரு அவருக்கு ‘தத்தெடுத்துக்கொண்ட தாய்மொழி’தான். ரஷ்ய மொழி, ஜெர்மானிய மொழி உட்பட ஏழு மொழிகளில் லீயாவுக்கு நல்ல புலமை இருந்தது.
1935-ல் தன் தாயுடன் பாலஸ்தீனத்துக்குப் புலம்பெயர்ந்த லீயா பள்ளி ஆசிரியராகத் தன் பணி வாழ்க்கையைத் தொடங்கினார். விளம்பரங்களுக்கான இலக்கிய நயமுடைய வாசகங்களை எழுதிவந்தார். பிறகு ஹீப்ரு செய்தித்தாள்களின் ஆசிரியராக ஆனார். இஸ்ரேல் தேசத்தின் பிறப்புக்குப் பிறகு 1954-ல் ஜெருசெலேமில் உள்ள ஹீப்ரு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.
சமகால அங்கீகாரம்
கவிதைகள், கட்டுரைகள், நாவல் போன்றவற்றோடு சிறுவர் இலக்கியத்திலும் முழுவீச்சுடன் லீயா செயல்பட்டுவந்தார். அவரது சிறுவர் கதைகள் பல உலகெங்கும் உள்ள சிறுவர்களால் விரும்பிப் படிக்கப்படு கின்றன. ரஷ்ய மொழி, ஜெர்மானிய மொழி, ஆங்கிலம் போன்றவற்றிலிருந்து லீயா ஏராளாமான இலக்கியங்களை மொழி பெயர்த்திருக்கிறார். லியோ டால்ஸ்டாயின் ‘போரும் சமாதானமும்’, ஷேக்ஸ்பியரின் ‘உங்கள் விருப்பத்தின்படி’ போன்ற மொழி பெயர்ப்புகள் இஸ்ரேலில் பெரும் புகழ் பெற்றவை.
லீயா கோல்ட்பெர்க் திருமணம் செய்துகொள்ளவில்லை. கடுமையான புகைப் பழக்கத்தின் காரணமாக ஏற்பட்ட நுரையீரல் புற்றுநோயால் 1970-ல் மரணமடைந்தார். அவரது வாழ்நாளிலேயே பெரும் இலக்கியவாதி என்ற அங்கீகாரம் அவருக்குக் கிடைத்தது. இஸ்ரேலில் இலக்கியத்துக்காக அளிக்கப்படும் மிகப் பெரிய பரிசான ‘இஸ்ரேலி விருது’ லீயாவுக்கு 1970-ல் வழங்கப்பட்டது. 2011-ல் இஸ்ரேலின் பணத்தில் அச்சிடுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு இஸ்ரேலிய மகாகவிகளுள் லீயாவும் ஒருவர். ராபெர்ட் ஃப்ரண்டின் ஆங்கில மொழி பெயர்ப்பில் வெளியான ‘Leah Goldberg: Selected Poems’ என்ற புத்தகத்திலிருந்து இரண்டு கவிதை களின் தமிழாக்கம் உங்கள் பார்வைக்கு.
நதி நோக்கி நிலவு பாடும் பாடல்
நீரில் பலமுகம் எனக்கு
வானில் தனியொருத்தி நான்.
நதியில் தெரியும் எனது பிம்பங்கள்
வான் நோக்கிப் பார்க்கின்றன என்னை.
நீர்நிலைகளில் நான் பொய்மை;
வானில் நான் மெய்மை,
ஒவ்வொரு போலிப் பிம்பமும்
தனது போலித்தனத்தை அளந்துபார்ப்பதற்கான மெய்மை.
நீர்நிலைகளில் முணுமுணுத்தபடி,
வானுயர்ந்த நானோ நிச்சலனத்தில் பொதிந்தபடி,
நதியில் நானொரு பிரார்த்தனை;
வானில் நானொரு கடவுள்.
என் தாயின் வீட்டிலிருந்து…
என் தாயின் தாய்
தன் வசந்தப் பருவத்தில்
இறந்துபோனார்.
தன் தாயின் முகமோ
அவளின் மகளுக்கு நினைவில் இல்லை.
எனது தாத்தாவின் இதயத்தில்
பொறிக்கப்பட்டிருந்த அவளுரு
அவர் மரணத்துக்குப் பிறகு
துடைத்தெறியப்பட்டது
உருக்களின் உலகத்திலிருந்து.
மிஞ்சியிருப்பது
அவளின் கண்ணாடி மட்டுமே,
அதன் வெள்ளிச் சட்டத்தினுள்
மூப்பில் மூழ்கிப்போய்.
அவளின் பேத்தி, நான்,
அவளது சாயலில் இல்லாத நான்,
அதற்குள் உற்றுப் பார்க்கிறேன்
தனது ஆழத்தினுள் பொக்கிஷங்களை
ஒளித்துவைத்திருக்கும்
குளம் ஒன்றை எட்டிப் பார்ப்பது போல.
ஆழத்தில் வெகு ஆழத்தில்
என் முகத்துக்கும் அப்பால் காண்கிறேன்
இளஞ்சிவப்புக் கன்னத்துடன்,
தலையில் சவுரிமுடியுடன்
புன்னகை புரியும்
இளம் பெண் ஒருத்தியை.
தன் செவிமடல் துவாரத்தில் பொருத்துகிறாள்
நீண்ட காதணியொன்றை.
மிருதுத் தசையின் சிறுதுளை வழி
நுழைக்கிறாள் அதை.
ஆழத்தில் வெகு ஆழத்தில்
என் முகத்துக்கும் அப்பால்
மினுக்குகிறது அவள் கண்களின் மிளிர் பொன்.
அவள் மிகவும் அழகு
என்ற குடும்ப ஐதீகம்
சுமந்துகொண்டிருக்கிறது
அந்தக் கண்ணாடி.
(தமிழில்: ஆசை)