பெண் இன்று

கண்ணீரும் புன்னகையும்: தாய்மையிலிருந்து பெண்மை

ஷங்கர்

புதுடெல்லியைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரும், கவிஞருமான த்ருப்தி சரண், தனது மருத்துவ அனுபவங்களை ‘க்ரானிக்கிள்ஸ் ஆப் கைனகாலஜிஸ்ட்’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். தனது மருத்துவமனைக்கு வருபவர்களை நோயாளிகளாகப் பார்க்கவில்லையென்றும், ஒவ்வொருவரையும் ‘உணர்வுகளாக’ப் பார்ப்பதாகவும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவம் செய்வது வாழ்வதற்கான உத்வேகத்தைக் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். இந்தியப் பெண்களின் மிகச் சிக்கலான பிரச்சினைகளை இந்தப் புத்தகம் வழியாகப் பகிர்ந்துகொள்வதாகவும் கூறியுள்ளார். மருத்துவமனைக்கு வரும் பெண்கள், தாய்மைப் பேற்றை அடைவதற்காக அவரிடம் வந்தாலும், பெண்மைதான் தன்னை எழுதுவதற்குத் தூண்டியதாகக் கூறியுள்ளார்.

திருமண விருந்தில் கொலை

பஞ்சாப் மாநிலம் பதின்டாவில் கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி நடந்த திருமண விருந்து நடனத்தில் ஆடிக்கொண்டிருந்த குல்விந்தர் கவுர், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். உள்ளூர் அரசியல்வாதியின் மகனான விஜய் கோயல், மது அருந்திய நிலையில் குல்விந்தரை ஆட அழைத்ததால், கவுர் அதை மறுத்தார். அதனால், தான் கொண்டுவந்திருந்த ரிவால்வரைக் கொண்டு சுட்டுவிட்டார். 22 வயதான குல்விந்தர் கவுர், இரண்டு மாதக் கர்ப்பமாக இருந்தார். போதையில் ஏற்பட்ட விபத்து என்று முதலில் இந்த வழக்கு மூடி மறைக்கப்பட்டது, லூதியானா ஆர்க்கெஸ்ட்ராஸ் அசோசியேஷனின் தொடர் போராட்டத்தை யடுத்து, கொலை செய்த கோயல் உள்ளிட்ட நான்கு பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர். மறுபடியும் ஒரு ‘ஜெசிகா லால்’ படுகொலை!

வலுவான பெண்கள் இயக்கம் தேவை

இந்தியாவில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க அருமையான சட்டங்கள் இருப்பதாகவும் அவற்றை அமல்படுத்துவதில்தான் சுணக்கம் இருப்பதாகவும் ஐ. நா. சபையின் மகளிர் பிரிவின் செயல் இயக்குநர் பூம்ஜிலே லாம்போ நூகா தெரிவித்துள்ளார். இந்திய வர்த்தகர் சபையுடன் பெண்கள் தன்னிறைவை வளர்த்தெடுக்கும் வண்ணம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட அவர் இந்தியா வந்திருந்தார். 2013-ல் அமலாக்கப்பட்ட பணியிடப் பாலியல் வன்முறைத் தடுப்புச் சட்டத்தைப் பாராட்டினார். பாலின ரீதியான வன்முறைகளுக்கு எதிராகப் பெண்கள் அதிகமாகக் குரல்கொடுக்கும் சூழல் உருவாகியுள்ளதைக் குறிப்பிட்ட அவர், இந்தியாவில் வலுவான பெண்கள் இயக்கத்துக்கான தேவை இருப்பதாகக் குறிப்பிட்டார்

SCROLL FOR NEXT