பெண் இன்று

முகம் நூறு: உழைப்பால் விளைந்த சுயமரியாதை

பவானி மணியன்

சென்னை ஆழ்வார்பேட்டையில் இயங்கிவருகிறது ஸ்ரீசக்தி கணபதி அறக்கட்டளை தொழிற்சாலை. பேப்பர் கப், பிளேட், பேப்பர் பை, வாழ்த்து அட்டை, செயற்கைக்கல் நகைகள், பிளாக் பிரின்ட் ஃபேப்ரிக்ஸ், அலங்கார விளக்குகள், வரவேற்பறைப் பொருட்கள், தரைவிரிப்புகள் போன்றவற்றை இங்கே நேர்த்தியாகச் செய்பவர்கள் மனவளர்ச்சி குன்றியவர்கள்.

“ஆசிர்வதிக்கப்பட்டவர்களுக்குத்தான் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பார்கள் என்று சொல்வார்கள். நிஜமாகவே நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்தான்” என்று பேச ஆரம்பித்தார் ஷியாமளா.

“2005-ம் ஆண்டில் மனவளர்ச்சி குன்றியவர்கள், அவர்களின் பெற்றோருக்காக நடத்திய பேப்பர் கப் தொழிற்பயிற்சியில் கலந்துகொண்டோம். அங்கேயே நான்கு குழந்தைகளின் அம்மாக்கள் சேர்ந்து ஒரு சின்ன யூனிட்டாகச் செயல்படத் தொடங்கினோம். ஒரு பேப்பர் கப் மெஷின் வாங்கி, அதனை நான்கு தனித்தனி பாகங்களாகப் பிரித்து ஒருவர் அடிப் பாகம், ஒருவர் மேல் பாகம், ஒருவர் ஒட்டுவது, மற்றொருவர் இறுதி வடிவம் கொடுப்பது என்று செயல்பட்டோம். 2011-ல் இந்த எண்ணிக்கை எட்டாக உயர்ந்தது. இன்னொரு மெஷின் வாங்கி தையல், பேப்பர் கப் போன்றவற்றைச் செய்ய ஆரம்பித்தோம். இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால் எங்களின் யூனிட்டை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியிருந்தது. மனவளர்ச்சி குன்றியவர்கள் என்றதும் இடம் தர மறுத்தனர். 2012-ம் ஆண்டு சரோஜினி வரதப்பன், ஆழ்வார்பேட்டையில் இந்த இடத்தை எங்களுக்கு வாடகையின்றி கொடுத்தார்,” என்கிறார்.

தற்போது 14 குழந்தைகளும் அவர்களின் அம்மாக்களும் இங்கு வேலை செய்கிறார்கள். குறைந்த லாபத்துடன் இயங்கினாலும் இந்தக் குழந்தைகளின் எதிர்காலமே இதில்தான் இருக்கிறது. இன்னொரு நிர்வாகியான விஜயா, “மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை ஒரே இடத்தில் அடைத்துவைப்பது மிகப் பெரிய கொடுமை. பயிற்சி கொடுத்தால், அவர்களாலும் மற்றவர்களைப் போல பல விஷயங்களைச் செய்ய முடியும் என்பதை எங்கள் தொழிற்சாலையில் நிரூபித்திருக்கிறோம். இங்கு பணிபுரியும் குழந்தைகள் அவ்வளவு மகிழ்ச்சியாக வேலைக்கு வருகிறார்கள்’’ என்கிறார்.

“மற்றவர்களைவிட இந்தக் குறைபாடுடையவர்கள் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வதற்கு நேரமாகும். ஆனால் சொல்லிக் கொடுத்துவிட்டால் வேகமாகப் புரிந்துகொள்கிறார்கள்,” என்ற லட்சுமி, இவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தொழிற்சாலைக்குத் தினமும் வருகிறார்.

தன் மகள் விஜயலட்சுமியிடம் அடிப்பாகத்தைச் சரியாகப் பொருத்தச் சொல்லிக் கொடுத்தபடி பேசுகிறார் சாந்தி. “முன்பெல்லாம் என் மகளை வெளில கூட்டிட்டுப் போகும்போது நிறையப் பேர் கேலி செய்வாங்க. ஒருமாதிரி பார்ப்பாங்க. அதுக்காகவே எங்கேயும் போறதில்லை. ஆனா இவள் கப் செய்றதுல காட்டுற ஆர்வத்தைப் பார்த்து, தினமும் கூட்டிட்டு வந்துட்டிருக்கேன்,” என்கிறார்.

“எங்களோட மற்றொரு யூனிட் தி.நகரில் இயங்குது. தொடர்ச்சியான ஆர்டர் இல்லன்னாலும் வர்ற வருமானத்தை எல்லாரும் பகிர்ந்துக்கறோம். வீட்டுல சும்மா இல்லாமல் இங்க வந்து வேலை செய்து, தானே சம்பாதிப்பது இவங்களுக்குச் சுயமரியாதையைக் கொடுக்குது. எங்களுக்கு அப்புறம் இவங்க யாரையும் நம்பி இருக்கக் கூடாது. அதற்காக ஒரு இல்லம் அமைக்கும் திட்டமும் இருக்கு’ என்று விடைகொடுக்கிறார் ஷியாமளா.

படங்கள்: எல்.சீனிவாசன்

SCROLL FOR NEXT