சுழன்று அடித்த வார்தா புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படவில்லை. பரந்து விரிந்து கிளை பரப்பி, நின்றிருந்த மரங்களையும் வேரோடு சாய்த்துவிட்டது. மின்வெட்டு, மொபைல் சேவை பாதிப்பு போன்றவற்றைத் தாண்டி, மறுநாளே சென்னை சாலைகள் ஓரளவு பழைய நிலையை எட்டத் தொடங்கின. இந்த விரைவு நடவடிக்கைகளின் பின்னணியில் சென்னை மாநகராட்சியுடன் கைகோத்திருக்கிறது தீயணைப்புத் துறை.
புயலின் பாதிப்பை முன்கூட்டியே கணித்துப் பெருமளவு சேதத்தைத் தவிர்க்க, தீவிரப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களை வழிநடத்திக்கொண்டிருந்தார் தீயணைப்புத்துறை துணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன். ஓயாத அழைப்பொலிகளுக்கு இடையே நம்மிடம் பேசினார்: “இந்தப் பேரிடர் குறித்து வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, உயர் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களிலிருந்து கூடுதல் வீரர்களைக் கேட்டிருந்தோம்.
காஞ்சிபுரம், திருவள்ளூரைச் சேர்ந்த 800 வீரர்கள் உட்பட மொத்தம் 1,100 வீரர்களையும் 61 இயந்திரங்களையும் வார்தா புயல் மீட்புப் பணியில் ஈடுபடுத்தியிருக்கிறோம்” என்றவரின் தலைமையில் 108 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, சென்னை மாநகரில் 218 இடங்களில் வீரர்கள் முழு வீச்சுடன் செயல்பட்டுவருகின்றனர். இந்தக் குழுவில் 2 துணை இயக்குநர்கள், 3 ஸ்டேஷன் அலுவலர்கள் என 5 பெண் அலுவலர்களும் இணைந்துள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு.
“டிசம்பர் 11-ம் தேதியே நாங்கள் தயார் நிலையில் இருந்தோம். அன்று மாலை முதல் தொடர்ச்சியாக 4 நாட்கள் பணியாற்றிவருகிறோம். யாரும் வீட்டுக்குச் செல்லவில்லை. சென்னையில் இதுவரை 650 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. பொன்னேரி போன்ற தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தோம். இந்தத் தலைமுறையில் முதல் முறையாக இவ்வளவு பெரிய புயலைச் சந்தித்திருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்.
கண்ணாடிகள் பறந்து, மரங்கள் வேருடன் பெயர்ந்துபோனதைக் காண முடிந்தது. எங்கள் வீரர்கள், மக்கள் அழைக்குமிடங்களுக்குச் சென்று, விரைவாக மரத்தை அப்புறப்படுத்தி, கூரைகளைச் சீரமைத்துவருகிறார்கள். நானும் ஒவ்வொரு இடத்துக்கும் சென்று, அவர்களை ஊக்குவித்துவருகிறேன். மரங்களையும் குப்பைகளையும் அகற்றும்போது தீயணைப்பு வீரர்களுக்கு மக்கள் உதவுகின்றனர். கொட்டிவாக்கம், திருவான்மியூர் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர், சாப்பாடு கொடுத்து அன்பாக நடத்துகிறார்கள். எங்கள் பணியை அங்கீகரித்து, மக்கள் பாராட்டுவதைக் காட்டிலும் வேறென்ன பரிசு வேண்டும்? என்று கேட்ட பிரியா ரவிச்சந்திரன், அவசரமாகக் களத்துக்குக் கிளம்பினார்.
பிரியா ரவிச்சந்திரன்