ஜெ லலிதாவின் மறைவு தமிழக, இந்திய அரசியலில் மட்டுமல்ல பெண்களின் இதயத்திலும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இந்திய அரசியலில் பெண் தலைவர்கள் மிகக் குறைவு என்ற நிலையிலும் பெண் ஆட்சியாளர்கள் குறைவு என்ற நிலையிலும் ஜெயலலிதாவின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடத்தை நாம் புரிந்துகொள்ள முயல வேண்டும்.
எல்லா அரசியல் தலைவர்களும் ஆட்சியாளர்களும் தங்கள் வெற்றிக்குப் பின்னுள்ள உந்துசக்தியாகக் குறிப்பிட மட்டுமே தங்கள் மனைவி, தாய், சகோதரிகள் போன்றோரை வைத்திருந்த நிலையில் நாங்கள் உந்துசக்திகளாக மட்டுமே இருந்துவிட்டுப் போய்விட மாட்டோம், ஆளும் சக்திகளாகவும் வருவோம் என்ற உத்வேகத்துடன் ஒரு பெண் அலை உத்தரப் பிரதேசத்தின் பெண் முதல்வர் சுசேதா கிருபளானியின் வடிவில் வந்தது. இந்தியாவின் முதல் பெண் முதலைமைச்சர் என்ற பெருமை அவருக்கே உரியது. அதற்கு முன்பு, தேசத்தின் தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸின் தலைவராக 1950-களின் இறுதியில் இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதையும் குறிப்பிட வேண்டும்.
லால் பகதூர் சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு 1966-ல் இந்தியாவின் முதல், ஒரே பெண் பிரதமர் என்ற பெயரை இந்திரா காந்தி பெற்றார். அதற்குப் பிறகு இந்திய அரசியலில் பெண் தலைமை என்பது குறிப்பிடத் தகுந்த விதத்தில் அதிகரித்தது. முதல், ஒரே தலித் பெண் முதலமைச்சராக மாயாவதி ஆனதும் இந்தியாவின் மகத்தான சரித்திர நிகழ்வுதான். இந்திய அரசியலில் பெண் தலைவர்களை இந்த வரலாற்றுப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும். இந்த வரலாற்றின் முக்கியமான ஆளுமைகளுள் ஜெயலலிதாவும் ஒருவர்.
ஜெயலலிதாவின் திரையுலக நுழைவு, ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்குக் கதாநாயகியானது, தொடர்ந்து எம்.ஜி.ஆரோடு பல படங்களில் நடித்ததில் எம்.ஜி.ஆர். ரசிகர்களின் மனதில் ஜெயலலிதாவுக்கும் ஓர் இடம் கிடைத்தது எல்லாம் இன்று வரலாற்று நிகழ்வுகள். திமுக விலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கி, 1977-ல் ஆட்சியைப் பிடித்தார். எம்.ஜி.ஆரின் இந்த அரசியல் வெற்றி ஜெயலலிதா மனதிலும் அரசியல் கனவை விதைக்க, 1982-ல் அதிமுகவில் இணைந்தார். அவரது ஆளுமையையும் ஆங்கிலம் பேசும் அழகையும் கண்டு 1984-ல் ஜெயலலிதாவை மாநிலங்களவை உறுப்பினராக்கினார்
எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு இரண்டாகப் பிரிந்தது அதிமுக. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி தலைமையில் ஓர் அணியும் ஜெயலலிதா தலைமையில் ஓர் அணியும் உருவாகின. 1988-ல் ஜானகி தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றார். ஆனாலும், அவருடைய அரசு வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை. ஆட்சி கலைக்கப்பட்டுக் குடியரசுத் தலைவர் ஆட்சி தமிழகத்தில் அமலானது.
கொஞ்ச காலத்தில் அதிமுக முழுவதும் ஜெயலலிதா வசமாகியது. 1989-ல் ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுக தேர்தலை எதிர்கொண்டது. அந்தத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தாலும் சட்டமன்றத்தில் ஜெயலலிதா துடிப்புடன் செயல்பட்டார். 1991-ல் திமுக அரசு கலைக்கப்பட்டது. அடுத்த சில மாதங்களில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலை ஜெயலலிதா எதிர்கொண்டிருந்த தருணத்தில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட, அந்தத் தேர்தலில் அதிமுக இமாலய வெற்றிபெற்றது. அந்த வெற்றியின் தொடர்ச்சிதான் 2001 தேர்தல், 2011 தேர்தல், 2016 தேர்தல் ஆகியவற்றில் பெற்ற வெற்றிகள்!
இந்தியா முழுக்கவும் சுற்றியடித்த மோடி சூறாவளியைத் தடுத்து நிறுத்தி, தமிழகத்தில் தான் மட்டுமே சூறாவளி என்று சொல்லும் விதத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் பெற்ற மகத்தான வெற்றியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பிரதான எதிர்க் கட்சியான திமுகவில் மு. கருணாநிதி பிரதானமாக இருந்தாலும் மு.க.ஸ்டாலின், க. அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, மு.க. அழகிரி போன்ற செல்வாக்கு மிக்க தலைவர்கள் இருந்தார்கள். அதிமுகவில் அப்படியில்லை. தனிநபர் ராணுவம்தான். அதன் தலைவர், தளபதி எல்லாம் ஜெயலலிதாதான். மற்ற எல்லோரும் அவர் சார்பில் நிற்க வைக்கப்பட்ட பொம்மைச் சிப்பாய்கள் மட்டுமே. மக்கள் ஜெயலலிதாவை வெல்ல வைத்தால் அதற்கு ஜெயலலிதா மட்டுமே காரணம்; தேர்தலில் மக்கள் அவரைப் புறக்கணித்தால் அதற்கும் அவர் மட்டுமே காரணம். இதுதான் ஜெயலலிதா என்ற அரசியல் தலைவரின் பலமும் பலவீனமும்.
எம்.ஜி.ஆரால் வளர்த்து விடப்பட்டதால்தான் ஜெயலலிதாவால் அரசியலிலும் நீடித்து நிற்க முடிகிறது என்ற கருத்து உலவிக்கொண்டிருக்கிறது. அது சிறிதளவுதான் உண்மை. தொடக்கம் எம்.ஜி.ஆர். தந்ததென்றாலும் தனக்கென ஓர் ஆளுமை இல்லையென்றால் ஜெய லலிதாவால் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது என்பதுதான் உண்மை. எல்லாத் துறைகளிலும் ஆண்களின் ஆதிக்கம் மிகுந்திருந்த சூழலில், அரசியலில் ஆண்மையின் அகங்காரத்தைத் தொடர்ந்து வீழ்த்திவருவது ஜெயலலிதாவின் மிகப் பெரிய சாதனை.
எம்.ஜி.ஆரின் கடுமையான போட்டியாளராக இருந்த கருணாநிதியை எதிர்த்து நின்று, வெற்றி பெற்று நீடிப்பதற்கு, எம்.ஜி.ஆர். என்ற பின்னணி மட்டும் போதுமானதல்ல. அசாத்தியமான நெஞ்சுறுதியும் தன்னம்பிக்கையும் வேண்டும். அப்படிப்பட்ட நெஞ்சுறுதியும் தன்னம்பிக்கையும் தன்னிடம் அதிகம் இருக்கிறது என்பதை எத்தனையோ சவால்கள், தோல்விகள் போன்றவற்றுக்குப் பிறகும் ஜெயலலிதா நிரூபித்தார். ஜெயலலிதாவிடம் உங்களுக்குப் பிடித்த குணம் என்ன என்று ஒருமுறை கனிமொழியிடம் கேட்டபோது, ‘துணிச்சல்’ என்று அவர் பதிலளித்தார். அது முற்றிலும் உண்மை.
எம்.ஜி.ஆர். என்ற பெயருக்குத் தாய்மார்கள் மத்தியில் இன்றும் ஈர்ப்பு இருக்கிறதுதான். அதைப் போல ஜெயலலிதா மீதும் ஓர் ஈர்ப்பு உருவாகியிருக்கிறது. ஒரு பெண்ணுக்கு அதிகாரம் கிடைப்பது என்பது காலங்காலமாக அடக்கப்பட்ட பெண்களுக்குப் பெரும் தன்னம்பிக்கையைக் கொடுக்கும் விஷயம். அதனால்தான் ஜெயலலிதாவைத் தங்கள் பிரதிநிதி என்றே பெரும்பாலான தாய்மார்கள் கருதுகிறார்கள். அவரது கொள்கை, செயல்பாடு போன்றவற்றைப் பற்றி ஏதும் தெரியவில்லை என்றாலும் ‘அவரும் நம்மைப் போல ஒரு பெண்’ என்ற உணர்வே ஜெயலலிதாவை அவர்கள் தங்களுடையவராகக் கருதுவதற்கு முதன்மையான காரணம்.
‘நம்மள மாதிரி அவங்களும் ஒரு பொண்ணுதானே’ என்று சொல்லி அவருக்கு ஓட்டு போடும் பெண்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். பள்ளி செல்லும் பெண்களுக்கு இலவச சைக்கிள், இல்லத்தரசிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர் என்றெல்லாம் அவர் கொடுத்த இலவசப் பொருட்களால் அதிகம் பயனடைந்தவர்கள் பெண்களே!
என்னதான் நடைமுறைப் பயன்பாடு இருந்தாலும் மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றைக் கொடுப்பது பெண்களைச் சமையலறையிலேயே வைத்திருப்பதை உறுதிப்படுத்துவதுபோல் இருக்கிறது என்ற விமர்சனம் இருப்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஜெயலலிதாவின் திட்டங்களில் சென்னையைப் பொறுத்தவரை அடித்தட்டுப் பெண்கள், ஆண்கள், வட மாநிலங்களிலிருந்து வந்த தொழிலாளர்கள் எல்லோருக்கும் மத்தியில் மகத்தான வரவேற்பைப் பெற்ற திட்டம் என்றால் அம்மா உணவகத்தைத்தான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவர் அளித்த நலன்களை ஒருங்கே துடைத்தெறியும் விதத்திலான ‘டாஸ்மாக்’கை நாம் மறந்துவிட முடியாதுதான்.
அறிவுஜீவிகளுக்கும் அரசியல் எதிரிகளுக்கும் அவர்மீது கடுமையான விமர்சனம், வெறுப்பு இருந்தாலும் அடித்தட்டுப் பெண்களிடையே அவருக்கு கிட்டியிருக்கும் செல்வாக்கு இனி தமிழகத்தில் எந்தத் தலைவருக்கும் கிடைக்குமா என்பது சந்தேகமே! அவர் மறைவுக்கு உண்மையாகக் கண்ணீர் விடுபவர்கள் அவர்களாகத்தான் இருக்கும். அவர்களுக்கு ஜெயலலிதா நல்லது செய்தாரா இல்லையா என்பதைவிட அவரது ஆளுமையே அவர்களுக்கு ஆசுவாசத்தைத் தந்துகொண்டிருந்தது என்று சொல்ல வேண்டும். அந்த ஆசுவாசம் இப்போது சுவாசத்தை நிறுத்திக்கொண்டுவிட்டது.
படங்கள்: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம்