பெண் இன்று

வாழ்க்கை: எது மகத்தான பரிசு?

ஷங்கர்

இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த மகத்தான மன நல மருத்துவர்களில் ஒருவரான விக்டர் பிராங்கல், யூத வதைமுகாம்களிலிருந்து தப்பிப் பிழைத்தவர். அந்த அனுபவங்கள் குறித்து அவர் எழுதிய ‘வாழ்வின் அர்த்தம் - மனிதனின் தேடல்’ என்ற நூல் (சந்தியா பதிப்பகம்), படிப்பவரின் வாழ்க்கையையே மாற்றக்கூடிய வல்லமையுடைய உண்மையான சுயமுன்னேற்றப் புத்தகம்.

ஒரு நாள் நள்ளிரவில் பிராங்கலுக்கு ஒரு பெண்ணிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக அந்தப் பெண் அவரிடம் சொன்னார். பிராங்கல் தொலைபேசியைத் துண்டிக்காமல், அந்தப் பெண்ணின் துக்கங்களையெல்லாம் கேட்டார். மரணத்தை விடுத்து, வாழ்க்கையைத் தொடர்வதற்கான வழிகளையும் காரணங்களையும் ஒவ்வொன்றாக அவரிடம் சொன்னார். கடைசியில் அந்தப் பெண் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதில்லையென்றும், தன் வாக்கைக் காப்பாற்றுவேன் என்றும் பிராங்கலிடம் உறுதியளித்தார்.

சில காலம் கழித்து பிராங்கல், நள்ளிரவில் பேசிய அந்தப் பெண்ணைச் சந்தித்தார். தான் சொன்ன எந்தக் காரணம் அந்தப் பெண்ணை வாழ்வதற்குத் தூண்டியது என்று கேட்டார். “எதுவுமே இல்லை” என்று அந்தப் பெண் பதிலளித்தார். “அப்படியென்றால் எதுதான் உன்னைத் தற்கொலை எண்ணத்திலிருந்து விடுவித்தது?” என்று பிராங்கல் கேட்டார்.

“ஒரு நள்ளிரவில் நீங்கள் எனது பிரச்சினைகளைக் காதுகொடுத்துக் கேட்டதுதான்” என்றார் அந்தப் பெண்.

இந்த உலகில் இன்னொருவரது வலியைக் கேட்பதற்கு யாரோ ஒருவர் தயாராக இருக்கிறார் என்பதுதான், இந்த உலகம் வாழ்வதற்குத் தகுதியானது என்ற எண்ணத்தை அந்தப் பெண்ணுக்குத் தந்தது. புத்திசாலித்தனமான வாதம் ஒன்றால் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாமல் போகலாம். ஆனால் ஒருவர் பேசும்போது, அதைக் காதுகொடுத்து கேட்பதே மகத்தான பரிசாக அமையலாம்.

SCROLL FOR NEXT