மழையுடன் தொடங்கியிருக்கிறது டிசம்பர். மாலை 5.30 மணிக்கு மெதுவாக ஆரம்பிக்கும் குளிர், காலை 8 மணி வரை முதுகெலும்பைச் சில்லிட வைக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் விட்டுவைப்பதில்லை.
இந்தப் பனிக்கால நோய்கள். நமது அன்றாட வழக்கங்களில் சில மாற்றங்களைப் பின்பற்றினால் இந்த மழை, பனிக்கால நோய்களை விரட்டி விடலாம் என்கிறார் திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் அஷ்ரப்.
பெரியவர்களுக்கு…
பொதுவாகப் பனி அதிகமாக இருக்கும் நாட்களில் பெரியவர்கள் நடைப் பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது. எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கும் பெரியவர்களுக்கும் புளு காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்குத் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளலாம்.
குளிர்காலத்தில் சிலருக்குச் சளித் தொந்தரவு அதிகமிருக்கும். தும்மலும் அதிகமாக இருக்கும் என்பதால் அதிகாலையிலும் இரவு நேரத்திலும் வெளியே செல்வதைத் தவிர்க்கலாம். குறிப்பாக ஆஸ்துமா பாதிப்பு இருப்பவர்கள் ஈரக்காற்றில் வெளியே செல்ல வேண்டாம்.
குழந்தைகளுக்கு…
அதிக நேரம் ஈரக்காற்றில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். சளித் தொந்தரவு ஏற்படலாம். பாக்டீரியா, வைரஸ் காரணமாக வயிற்றுப்போக்கு, காலரா, வாந்தி போன்ற நோய்கள் ஏற்படலாம். குழாய் வழியே வரும் குடிநீர், கழிவு கலந்த குடிநீர் ஆகியவற்றில் வைரஸ், பாக்டீரியாக்கள் கலந்திருக்கலாம். எனவே எப்போதும் தண்ணீரை 100 டிகிரி வெப்ப நிலையில் ஒரு நிமிடம்வரை கொதிக்கவைத்துக் குடிக்க வேண்டும். ஐஸ்கிரீம், குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
ஆன்டிபயாடிக் மருந்துகள் வேண்டாம்
வைரஸ் தொற்றுக் காரணமாகச் சளி, காய்ச்சல் ஏற்பட்டால் உடனே ஆன்டிபயாடிக் மருந்துகள் உட்கொள்ளத் தேவையில்லை. காய்ச்சல், சளி வந்து மூன்று நாட்கள் வரை சரியாகவில்லை என்றால் மட்டுமே ஆன்டிபயாடிக் மருந்துகளை, மருத்துவரின் பரிந்துரையின்படி உட்கொள்ளலாம். எப்போதும் சுடுதண்ணீர் குடிப்பது, ஆவி பிடிப்பது, தொண்டை கட்டியிருந்தால் வெந்நீரில் கொப்பளிப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.