உலகம் முழுவதும் பள்ளிச் சிறுமிகளிடையே இன்றும் புகழ்பெற்றிருக்கும், ‘லிட்டில் விமன்’ கதைப் புத்தகத்தின் ஆசிரியர் லூயிசா மே ஆல்காட். 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நிலவிய அடிமை முறையை ஒழிப்பதற்காகப் போராடிய மனிதஉரிமைப் போராளி. இவரது பிறந்த நாளான நவம்பர் 29-ம் தேதியை முன்னிட்டு, கூகுள் இணையதளம் இவரது ‘லிட்டில் விமன்’ கதையில் வரும் சகோதரிகளை மையமாக வைத்து ஒரு சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
ஊக்கம் தந்த கல்விமுறை
லூயிசாவின் இளமைப் பருவமும் அவர் வளர்ந்த கதையையும் பிரதிபலிக் கும் கதைதான் ‘லிட்டில் விமன்’. பென்சில்வேனியாவில் நான்கு பெண்களில் இரண்டாவதாகப் பிறந்தவர். அவருடைய பெற்றோர் புதுமையான கல்வி முறையை வளர்த்தெடுப்பதில் நம்பிக்கை கொண்டு பாஸ்டனுக்கு இடம்பெயர்ந்தனர். பகுத்தறிவு மற்றும் ஆன்மிகத்துக்கு எதிராக மனிதர்களின் உள்ளார்ந்த நல்லெண்ணத்தையும், இயற்கையையும் நம்பும் டிரான்சென்டென்டலிஸ்ட் (transcendentalist) இயக்கத்தைச் சேர்ந்த அறிவுஜீவிகளுடன் சேர்ந்து வளர்ந்தார்.
குடும்பத்திலிருந்த பொருளாதாரப் பிரச்சினைகளால், இளம் வயதிலேயே ஆல்காட் பல்வேறு பணிகளைச் செய்யவேண்டியிருந்தது. தையல் கலைஞர், ஆசிரியர் என பல்வேறு பணிகளில் ஈடுபட்ட அனுபவம் அவரது எழுத்துகளில் பிரதிபலித்தது.
1861-ல் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் மருத்துவ தாதியாகச் சேவையாற்றிய போதும், போர் முடிந்த பின்னரும் அடிமை முறைக்கு எதிரான கட்டுரைகளையும் புத்தகங்களையும் அவர் எழுதிக்கொண்டேயிருந்தார். இருப்பினும் குழந்தைகளுக்காக அவர் எழுதத் தொடங்கியபோதே, அவருக்குப் புகழும் வெற்றியும் கிடைத்தன.
போராடி வென்ற சகோதரிகள்
எளிமையான பின்னணியில் வளரும் நான்கு சகோதரிகள், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தனித்துவமானவர்களாக வளரும் கதைதான் ‘லிட்டில் விமன்’. இன்று இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது, கொஞ்சம் பழந்தன்மையுடன் இருந்தாலும்,
19-ம் நூற்றாண்டுப் பின்னணியில் அந்தப் படைப்பு புதுமையானது என்பதை உணர முடியும். சம்பிரதயமான குடும்பப் பின்னணியிலும், அந்தச் சகோதரிகள் தங்களது தேர்வுகளுக்காக வலிமையுடன் போராடும் விதம் இன்றைய பெண்களையும் கவரக்கூடியது.
அவரது கதைகளில் வரும் கதாபாத்திரங்களைப் போலவே ஆல்காட் திருமண பந்தத்துக்குள் போகவேயில்லை. “எந்த ஆணிடமும் காதலில் விழவில்லை. அதனால் திருமணத்துக்குள் செல்லவில்லை” என்று அவர் சொல்லியிருக்கிறார். கூகுள் டூடுலில் பறக்கும் காகிதங்களுக்கு மத்தியில் ஓடியாடிக்கொண்டிருக்கும் கதாபாத்திரம் வேறு யாரும் அல்ல, ஆல்காட்தான்!