பெண் இன்று

போகிற போக்கில்: தூரிகையால் பேசும் காரிகை

எம்.ஹர்ஷிக்கா

கோலம் போடும் கைகள் தூரிகை பிடித்தால், பல மாயங்கள் செய்யலாம் என்கிறார் ரம்யா சதாசிவம். சென்னையில் நடைபெறும் ஓவியக் கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள் தவறாமல் இடம்பெறுகின்றன.

சிற்பங்கள், இயற்கைக் காட்சிகள் ரசிப்பவர்களைத் தாண்டி, யதார்த்த நிகழ்வுகளை ஓவியமாகப் பதிவு செய்து அதில் வெற்றிபெறுகிறவர்கள் வெகு சிலரே. சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ரம்யா, கலானந்த் போட்டியில் இந்த ஆண்டுக்கான பிரபுல்லா தனுகர் விருது நிகழ்வில் ‘சிறந்த ஓவியருக்கான மாநில விருது’, ‘ஸ்பந்தன் சிறந்த ஓவியக்கலைஞர் விருது’ என விருதுகள் வென்று யதார்த்த ஓவியர்களில் தனி முத்திரை பதித்திருக்கிறார்.

கண்கவரும் கண்காட்சி

“நான் படித்தது பி.எஸ்சி. பயோடெக்னாலஜி. மேற்கத்தியக் கலையில் டிப்ளமோ பெற்றேன். சிறுவயது முதல் பென்சில் ஓவியங்கள் வரைவேன். அதன்பிறகுதான் ஆயில் பெயின்டிங் மீது கவனம் திரும்பியது. இந்தியக் கலாச்சாரம், கிராம, நகர வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளைப் பதிவு செய்யத் தொடங்கினேன். ஓவியம் கருத்தைச் சொல்வதைவிட கதை சொல்வதாக இருக்க வேண்டும். உழைக்கும் பெண்களே எப்போதும் என் விருப்பத் தேர்வு. அவர்களை கவுரவிப்பதற்காகவே வண்ணங்களைத் தீட்டுகிறேன்” என்று சொல்பவர் சில கண்காட்சிகளில் பங்கேற்றதுடன், தானும் நிறைய ஓவியக் கண்காட்சிகள் நடத்தியுள்ளார்.

“பொழுதுபோக்காக ஆரம்பித்ததுதான். சக ஓவியக் கலைஞர்கள் பெண் கலைஞர்களை நன்றாக ஊக்குவிக்கின்றனர். கலை என்பது மனதுக்குத் திருப்தி அளிப்பதாக மட்டுமல்லாமல், நமக்கு வருமானம் ஈட்டித்தரவும் வேண்டும். அதனால் ஃபேஸ்புக், இணையதளம் என ஆன்லைனில் ஓவியங்கள் விற்பனை செய்கிறேன். நன்றாக வரையும்போது, கலைத்திறன் நிறைந்த ஓவியங்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். இதனால் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். இதற்கு என் அண்ணனும், அப்பாவும் உதவி செய்துவருகின்றனர்” என்கிறார் ரம்யா.


ரம்யா சதாசிவம் | படம்: எல்.சீனிவாசன்

SCROLL FOR NEXT