பெண் இன்று

திரைக்குப் பின்னால்: கலையில் பாகுபாடு கிடையாது

செய்திப்பிரிவு

கலை மீது ஆர்வம் கொண்டவர்கள் பெண்கள். ஒரு படத்தின் கலை இயக்குநராக ஒரு பெண் பணியாற்றினால் எப்படி இருக்கும்? தமிழ்த் திரையுலகில் ஒரே ஒரு பெண் கலை இயக்குநராக இருக்கிறார் ஜெயஸ்ரீ.

கலை இயக்குநராக வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

ஒளிப்பதிவாளர் அல்லது கலை இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஒரு நண்பர் மூலமாக ராஜீவனிடம் கலை இயக்குநருக்கான இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற்றேன். சாபுசிரில், ப்ரியா ஆகியோரிடம் உதவியாளராகப் பணிபுரிந்தேன். சென்னையில் பெண் கலை இயக்குநர்கள் கிடையாது. 2013-ம் ஆண்டிலிருந்து தனியாக விளம்பரங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றிவருகிறேன்.

முதல் படமான ‘பிசாசு’ வாய்ப்பு எப்படி கிடைத்தது?

ஒளிப்பதிவாளர் ரவிஷங்கர், “ஒரு இயக்குநர் புதிய கலை இயக்குநரைத் தேடி வருகிறார், அவரைச் சந்திக்க முடியுமா” என்று கேட்டார். அந்த இயக்குநர் மிஷ்கின் என்று என்னிடம் சொல்லவில்லை. பிறகு அவரைச் சந்தித்துப் பேசினேன். உடனே வாய்ப்பு கொடுத்துவிட்டார்.

‘சார்லி’ படத்துக்காக கேரள அரசின் விருது கிடைத்திருக்கிறதே?

மலையாளத்தில் சார்லி எனக்கு மூன்றாவது படம். அந்தப் படத்துக்காக கேரள அரசின் விருது, விமர்சகர்கள் தேர்வு விருது என்று இரண்டு விருதுகள் கிடைத்தன. என் குருநாதர் சாபுசிரில் வாங்கியிருக்கும் விருதை, நானும் வாங்கியபோது, மிகவும் சந்தோஷப்பட்டேன். சார்லி படத்தில் பணியாற்றியபோது இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. பலரின் பாராட்டுகளையும் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்.

பெண்கள் இந்தத் துறைக்கு வரலாமா?

தாராளமாக வரலாம். இதுவரை ஒரு பெண் நம் பணியைச் சரிசெய்யச் சொல்கிறாரே என்று யாரும் நினைத்தது கிடையாது. எனக்கு முன் தென்னிந்தியாவில் கலை இயக்குநராகப் பெண்கள் இருந்ததில்லை. இங்கே ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது.

இயக்குநர் விஜய் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறீர்கள். ஏன் இவ்வளவு இடைவெளி?

இடையில் நிறையப் படங்கள் வந்தன. நான் பணியாற்றும் படங்கள் புதுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புவேன். கலை இயக்குநர் என்ற துறை, தமிழ்த் திரையுலகில் பெரிய அளவுக்கு இல்லை. இந்தியில் கலை இயக்குநரை, தயாரிப்பு வடிவமைப்பாளர் என்றுதான் சொல்வார்கள். முழுப் படத்துக்கான கலர் வடிவமைப்பிலிருந்து எந்த மாதிரி படம் வெளிவர வேண்டும் என்பதுவரை தயாரிப்பு வடிவமைப்பாளரின் பணியாக இருக்கும். இயக்குநர் விஜய் அனைத்து விஷயங்களிலும் மிகவும் மெனக்கெடுவார். அவரோடு நான் ஒரு விளம்பரத்தில் பணிபுரிந்திருக்கிறேன். அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். என் திறமையை நிரூபிக்கக்கூடிய ஒரு படமாக இந்தப் படம் அமையும் என்று நம்புகிறேன்.

குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள்?

என் வளர்ச்சி அவர்களுக்கு சந்தோஷம். உதவியாளராகப் பணிபுரியும்போதே, “நீ எப்போ கலை இயக்குநராகப்போறே” என்று ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருப்பார்கள். சினிமாவையும் என் வேலையையும் புரிந்துகொள்கிற குடும்பம் என்பதால், வாழ்க்கை நிம்மதியாகவும் சுவாரஸ்யமாகவும் போகிறது

SCROLL FOR NEXT