பெண் இன்று

மொழியின் பெயர் பெண் - அன்னா ஸ்விர்: துயரத்தின் பென்சில்!

ஆசை

இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண் கவிஞர், அன்னா ஸ்விர் என்றழைக்கப்படும் அன்னா ஸ்விர்ஸ்சின்ஸ்கா (1909–1984). போலந்துக்காரரான அன்னாவின் அப்பா ஒரு ஓவியர். அன்னாவின் குழந்தைப் பருவம், இளம் பிராயம் எல்லாமே அப்பாவின் ஓவியக் கூடத்திலேயே கழிந்தது. மிகவும் வறுமையான சூழல். தாயின் சாமர்த்தியத்தால் அவர்கள் வாழ்க்கை மிகுந்த சிரமத்துக்கிடையேயும் ஓடியது. குடும்பச் சூழல் காரணமாக இளம் வயதிலேயே வேலைக்குப் போக வேண்டியும்வந்தது.

1930-களிலேயே அவரது கவிதைகள் வெளிவர ஆரம்பித்தன. இந்தக் கட்டத்தில் இரண்டாம் உலகப் போர் வந்து போலந்தையும் அன்னாவின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது. ஒரு கட்டத்தில் சித்திரவதை முகாமில் மரணத்தை எதிர்நோக்கி ஒரு மணி நேரம் அவர் காத்திருந்திருக்கிறார். 1944-ல், வார்ஸா கிளர்ச்சியின்போது தற்காலிக மருத்துவமனையொன்றில் அன்னா ராணுவச் செவிலியராகப் பணிபுரிந்தார்.

“போர் என்னை வேறொரு மனுஷியாக மாற்றியது. அப்போதுதான் எனது வாழ்க்கையும் எனது சம காலத்தவர்களின் வாழ்க்கையும் என் கவிதைக்குள் நுழைந்தன” என்கிறார் அன்னா. எனினும், அவரது பெரும்பாலான கவிதைகள் அக உலகத்தைச் சார்ந்தவை. அவரது பல கவிதைகளில் அவரது ‘உடல்’ ஒரு முக்கியமான கருப்பொருளாக இருக்கிறது.

அன்னா ஸ்விரின் கவிதைகளை போலிஷ் மொழியிலிருந்து மொழிபெயர்த்து ஆங்கில உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் நோபல் பரிசு பெற்ற போலிஷ் கவிஞர் செஸ்வாஃப் மிவோஸ் (Czesaw Miosz). லெனார்டு நாதனுடன் சேர்ந்து அவர் மொழிபெயர்த்து வெளியிட்ட புத்தகம் ‘டாக்கிங் டூ மை பாடி’. அன்னா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்புதான் செஸ்வாஃப் மிவோஸ் அன்னாவின் கவிதைகளைத் தான் மொழிபெயர்க்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார். துயரங்கள் நிரம்பிய அன்னாவின் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் அது அவருக்குச் சிறிய மகிழ்ச்சியையாவது கொடுத்திருக்கும் என்று நம்பலாம்.

பிறவாநிலைப் பெண்

இன்னும் பிறக்கவில்லை நான்,

நான் பிறப்பதற்கு ஐந்து நிமிடம் இருக்கிறது.

இப்போதும்

செல்ல முடியும் என்னால்

என் பிறவாநிலை நோக்கி.

இப்போது, பத்து நிமிடங்களுக்கு முன்பு,

இப்போது என் பிறப்புக்கு ஒரு மணி நேரம் முன்பு.

திரும்பிச் செல்கிறேன்,

என் இன்மை-வாழ்வில்

நுழைகிறேன்.

விசித்திரக் காட்சிகளின் குகைவழிப் பயணம்போல்

என் பிறவாநிலை வழி நடக்கிறேன்.

பத்தாண்டுகள் முன்னதாக,

நூற்றைம்பது ஆண்டுகள் முன்னதாக,

நடக்கிறேன், அழுந்தப் பதியும் காலடிகள் சத்தமிட,

அற்புதப் பயணம்,

நான் என்பதே இருந்திராத

யுகயுகங்களூடே.

எவ்வளவு நெடியது, என் இன்மை-வாழ்க்கை,

அச்சுஅசப்பில் நித்தியத்துவம் போன்றே

இருத்தலின்மை!

இப்போது ரொமான்டிஸக் காலம், அதில் நானொரு

முதிர்கன்னியாக இருந்திருப்பேன்,

இப்போது மறுமலர்ச்சிக் காலம்,

அதில் கொடுமைக்காரக் கணவனொருவனின்

அழகற்ற, நேசிக்கப்படாத ஒரு மனைவியாய்

இருந்திருப்பேன்,

இடைக்காலங்கள், விடுதியொன்றில் நீர்

சுமந்துகொண்டிருந்திருக்கலாம் நான்.

இன்னும் இன்னும் நடக்கிறேன்,

என்னதிந்த எதிரொலி,

என் காலடிகள் சப்திக்கின்றன,

என் இன்மை-வாழ்க்கையினூடாக,

வாழ்வின் பின்னோக்குத் திசையினூடாக.

ஆதாம் ஏவாளைச் சென்றடைகிறேன்,

பார்ப்பதற்கு ஏதுமில்லை இனி, ஒரே இருட்டு.

இப்போது என் இன்மையும் இறந்துபோய்விடுகிறது,

கணித நாவல்களில் நிகழும் மிகுசராசரித்தன்மை

கொண்ட மரணங்களைப் போல்.

நான் நிஜமாகப் பிறந்திருந்தால் என் மரணம்

எவ்வளவு சராசரித்தன்மை கொண்டிருக்குமோ

அவ்வளவு சராசரித்தன்மையுடன்.

மகிழ்வு!

என் ரோமத்துக்கு மகிழ்வு

என் சருமத்துக்கு மகிழ்வு

என் சருமம் துடிக்கிறது மகிழ்வால்.

மகிழ்வை சுவாசிக்கிறேன், காற்றுக்குப் பதிலாக,

மெதுவாக, ஆழமாக,

உயிராபத்தைத் தவிர்த்த ஒரு மனிதன் போல.

கண்ணீர் வழிந்தோடுகிறது என் முகத்தில்,

என்னையறியாமல்.

எனக்கொரு முகம் இருப்பதும் மறக்கிறது எனக்கு.

சருமம் பாட,

நடுக்கமுடன் நான்.

காலத்தின் நீட்சி உணர்கிறேன்

மரண தருணத்தில் அதை உணர்வதுபோல்.

எனது காலஉணர்வு மட்டுமே இவ்வுலகை கிரகிப்பதுபோல்,

இருத்தல் என்பது காலம் மட்டுமே என்பதுபோல்.

பயங்கர பிரம்மாண்டத்துள் மூழ்கி,

மகிழ்வின் கணம் ஒவ்வொன்றையும் உணர்கிறேன்,

அது வரும்போது, நிறைக்கும்போது, தன்னியல்பில் ஒரு

பூவாய் விரியும்போது,

ஒரு கனிபோல் அவ்வளவு நிதானமாய் அது,

ஒரு தெய்வம் போல் அவ்வளவு அதியற்புதமாய் அது.

ஓலமிடத் தொடங்கிறேன் இப்போது.

ஓலமிடுகிறேன். என் உடல் விட்டு நீங்குகிறேன்.

நான் மனித இனத்தவள்தானா, தெரியவில்லை எனக்கு,

மகிழ்வில் ஓலமிடும் எவருக்கும் எப்படித் தெரியும் அது.

இருந்தும், அப்படியொரு ஓலத்தால் இறப்பவரும் உண்டு,

அவ்வாறே இறந்துகொண்டிருக்கிறேன் நான் மகிழ்வால்.

என் முகத்தில் இனியேதும் கண்ணீரில்லை,

என் சருமம் இப்போது பாடுவதை நிறுத்தியுமிருக்கலாம்.

எனக்கு இன்னும் சருமம் இருக்கிறதா என்றும் அறியேன் நான்,

எனக்கும் எனது சருமத்துக்கும் இடையே

அறிந்துகொள்ள முடியாதபடி

தூரம் மிக அதிகம்.

விரைவில் நான் போய்விடுவேன்.

நடுக்கமேதும் இல்லை எனக்கு,

சுவாசமும் இல்லை எனக்கு,

எதை சுவாசிப்பேன்

என்றும் தெரியவில்லை எனக்கு.

காலத்தின் நீட்சி உணர்கிறேன்,

எவ்வளவு துல்லியமாய் உணர்கிறேன் காலத்தின் நீட்சியை.

மூழ்குகிறேன்

காலத்துள் மூழ்குகிறேன்.

என் துயரம்

என் துயரத்தால்

பயனுண்டு எனக்கு.

பிறரின் துயரங்களைப் பற்றி எழுதும்

அனுகூலம் அது தருகிறதெனக்கு.

என் துயரம் எனது பென்சில்

அதைக் கொண்டே எழுதுகிறேன் நான்.

(கவிதைகளின் ஆங்கில வழி தமிழ் மொழிபெயர்ப்பு: ஆசை)

SCROLL FOR NEXT