பெண் இன்று

சேனல் சிப்ஸ்: பாசமான பாராட்டு!

மகராசன் மோகன்

சின்னத்திரையில் குணச்சித்திரப் பாத்திரங்களில் அறிமுகமாகி, இன்று நாயகியாக வளர்ந்திருக்கிறார் காயத்ரி. விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடர், ஜீ தமிழில் ‘மெல்லத் திறந்தது கதவு’ தொடரின் நாயகி என்று பம்பரமாகச் சுழன்றுவருகிறார்.

“சின்னத்திரைக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ‘பொன்னூஞ்சல்’, ‘தென்றல்’ போன்ற தொடர்கள் எனக்கு முறையான பாதைகளை அமைத்துக் கொடுத்தன. மெல்லத் திறந்தது கதவு தொடரில் நாயகி செல்வி மக்களை ரொம்பவே ஈர்த்துவிட்டார். கோயில், ஷாப்பிங் என்று எங்கே போனாலும் ‘செல்வி... செல்வி…’ என்று பாசமாகப் பாராட்டுகிறார்கள். ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் சரவணனைத் திருமணம் செய்துகொள்ளப் போவது மீனாட்சியா இல்லை நானா என்ற போட்டியோடு நகரும் கதைக் களம். பரபரப்புக்குப் பஞ்சமே இல்லாமல் பயணிக்கும் இந்தச் சின்னத்திரைப் பயணத்துக்கு, சினிமாத் துறையில் இருக்கும் என் கணவர் யுவராஜும் முக்கியக் காரணம்” என்கிறார் காயத்ரி.

‘அதிர்ஷ்ட லட்சுமி’ அர்ச்சனா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அதிர்ஷ்ட லட்சுமி, ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சிகளை வழங்கிவருகிறார் ‘காமெடி டைம் அர்ச்சனா. ‘‘சின்ன இடைவேளைக்குப் பிறகு சின்னத்திரைக்குள் வந்தேன். நிஜமாகவே அதிர்ஷ்ட லட்சுமி என்னைத் தேடி வந்துவிட்டார். இப்போ வாழ்க்கை ரொம்பப் பரபரப்பா நகர்ந்துகிட்டே இருக்கு. அதிர்ஷ்ட லட்சுமி நிகழ்ச்சியை 121 வாரங்கள் சிறப்பா நடத்தியாச்சு. காமெடி டைம் அர்ச்சனா என்ற பெயர் மாறி, இப்போ ‘அதிர்ஷ்ட லட்சுமி’ அர்ச்சனாவாகவே மாறிட்டேன்.

அதுக்குப் பரிசா கிடைச்ச மாதிரி, இப்போ ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியின் நடுவராகவும் இருக்கேன். தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 24 குட்டி நடிகர்கள் அவ்வளவு அசத்தலான நடிப்பை வெளிப்படுத்துறாங்க. சினிமா ஜாம்பவான்களுடன் இணைந்து கலகலப்பா நிகழ்ச்சியைக் கொடுத்துட்டு இருக்கேன்” என்கிறார் அர்ச்சனா.

பல அவதாரம்

நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘நம் உலகம்’ நிகழ்ச்சியின் அறிவிப்பாளர் நந்தினி, செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குறும்பட நடிகை என்று பல அவதாரங்களில் வட்டமடித்துவருகிறார்.

“ஈரோடுதான் சொந்த ஊர். விவசாய குடும்பம். மீடியா மீது பெரிய காதல். பொறியியல் படிப்பை முடித்ததும் சென்னைக்குப் பறந்து வந்துவிட்டேன். சின்னப் பொண்ணு மாதிரி இருக்கேன் என்று இந்தத் துறைக்குள் நுழைவதற்கு தடைகள் இருந்தன. அதையெல்லாம் உடைத்து, ‘நம் உலகம்’ என்ற பெயரில் சர்வதேச செய்திகளைத் தொகுத்து வழங்கிவருவதைப் பெருமையாக நினைக்கிறேன். மீடியாவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஓடியாச்சு. ‘டைம் அவுட்’ என்ற குறும்படத்திலும் நடிச்சிருக்கேன். சீரியல் வாய்ப்புகளும் வரத் தொடங்கியுள்ளன” என்று புன்னகை செய்கிறார் நந்தினி.

SCROLL FOR NEXT