பெண் இன்று

வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்: இணையத்தில் இடம் வாங்கிப் போடலாமா?

காம்கேர் கே.புவனேஸ்வரி

பத்தாம் வகுப்பு முடித்து, ஒரு போட்டோ ஸ்டூடியோவில் கட்டராகப் பணியில் சேர்ந்தார் அவர். புகைப்படங்களை லே அவுட் செய்யும் அளவுக்கு முன்னேறி, 10,000 ரூபாய் சம்பளம் வாங்கிய நிலையில் திடீரென ஒருநாள் அந்தப் பணியை உதறினார். வீட்டில் இணைய இணைப்புடன் கூடிய கம்ப்யூட்டர் வாங்கி, அதே பணியைச் செய்து மாதம் 25,000 ரூபாய் சம்பாதிக்கும் நிலைக்கு உயர்ந்தார்!

உங்கள் திறமையை வீட்டுக்குள்ளேயே வெளிப்படுத்திவருகிறீர்களா? ஏதேனும் ஓர் இடத்தை வாடகைக்கு எடுத்து, அலுவலகம் அமைத்து தொழில் செய்துகொண்டிருக்கிறீர்களா? இனிதான் உங்கள் திறமையை தொழிலாக்க வேண்டுமா? எதுவானாலும் உங்களுக்குத் தேவை, ஆன்லைன் அலுவலக மான வெப்சைட்.

துணி வாங்கவேண்டும் என்றால் துணிக் கடைகளின் பிரம்மாண்டமான கட்டிடங் களைவிட, நம்மை ஈர்ப்பது அவற்றின் பெயர்கள்தான். பிரபல கடைகள் எல்லாம் இன்று பிராண்ட் ஆக மாறியுள்ளன. அவர்களின் வெப்சைட் பெயர்களும் அதே பிராண்ட்டில் இருப்பதைக் கவனியுங்கள். எனவே உங்கள் வெப்சைட்டின் பெயரே உங்கள் அடையாள மாக வேண்டும் என்பதை நினைவில் வைத்து, வெப்சைட் பெயரைத் தேர்ந்தெடுங்கள்.

இணையத்தில் வாடகைக்கு இடம்

வெப்சைட்டுக்குப் பெயரைத் தேர்ந்தெடுத்து பதிவுசெய்த பிறகு, இணையத்தில் இடம் வாங்க வேண்டியதுதான் உங்கள் அடுத்த வேலை. ஆன்லைனில் உங்கள் தொழிலுக்கு வாடகைக்கு இடம் வாங்க பல நிறுவனங்கள் உள்ளன. வெப்சைட்டின் பெயரைப் பதிவுசெய்த இணையதள சேவை நிறுவனத்திடமே இணையத்தில் உங்கள் தொழிலுக்கான இடத்தையும் கட்டணம் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம்.

இணையத்தில் வெப்சைட்டுக்கான இடத்தின் அளவுக்கு ஏற்ப வாடகையிலும் மாற்றம் இருக்கும். வெப்சைட்டுகளின் இடம் 100 GB, 200 GB, 500 GB என்ற அளவுகோலில் விற்பனை செய்யப்படுகின்றன. நம் தொழிலுக்குத் தேவையான இடத்தைக் கட்டணம் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம். வெப்சைட் முகவரியைப் போலவே, வெப்சர்வரில் நாம் எடுத்துள்ள இடத்துக்கும் ஆண்டுதோறும் கட்டணம் செலுத்த வேண்டும்.

இடத்தை எப்படித் தேர்வு செய்வது?

வீட்டில் உள்ள நபர்களுக்கும் பொருட்களுக்கும் ஏற்ப எப்படி வீடு பார்க்கிறோமோ, அதைப்போல நம் வெப்சைட்டில் நாம் பதிவு செய்ய இருக்கும் தகவல்களுக்கும் புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் ஏற்ப இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

எங்கு வாங்கலாம்?

இணையத்தில் வெப்சைட் பெயரைப் பதிவு செய்தல், வெப்சைட்டுக்கான இடத்தை வாடகைக்குத் தருதல், வெப்சைட்டை வடிவமைத்தல் என்று வெப்சைட் தொடர்பான அனைத்துப் பணிகளையும் செய்து தரும்

www.bigrock.in, www.goddaddy.com போன்ற சேவை நிறுவனங்களை அணுகினால், பெயரைப் பதிவுசெய்துகொள்வதுடன் தேவையான இடத்தையும் வாங்கிக் கொள்ளலாம். உங்கள் தேவையைச் சொன்னால் எவ்வளவு இடம் தேவை என அவர்களே உங்களுக்கு ஆலோசனையும் வழங்குவார்கள்.

வாடகை எவ்வளவு?

இணையத்தில் இடத்தை வாடகைக்குக் கொடுக்கும் வெப் சர்வீஸ் புரொவைடர்கள் அவரவர் விற்பனை மற்றும் வியாபாரக் கொள்கைகளுக்கு ஏற்ப வாடகையை நிர்ணயம் செய்திருப்பார்கள். உதாரணத் துக்கு, 100GB அளவுள்ள இடத்துக்கு ஆண்டு வாடகை 2,000 ரூபாய், 200 GB அளவு இடத்துக்கு 3,000 ரூபாய், அளவில்லாமல் எவ்வளவு இடத்தை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்

என்ற ‘அன்லிமிடெட் ஸ்பேஸ்’க்கு வாடகை 10,000 ரூபாய் என்று இருக்கலாம். நாம்தான் நல்ல நிறுவனமாகப் பார்த்து,

இணையத்தில் இடத்தை வாடகைக்கு எடுக்க வேண்டும்.

ஆண்டுதோறும் குறிப்பிட்ட தேதியில் மறக்காமல் இணைய இடத்துக்கான வாடகையைச் செலுத்த வேண்டும். முதலில் உங்கள் மொபைலிலும் இமெயிலிலும் நினைவூட்டுவார்கள். ஒருசில நிறுவனங்கள் தொலைபேசி மூலமும் நினைவூட்டுவார்கள். அப்படியும் கட்டணம் செலுத்தாவிட்டால்,

ஒரு வாரத்துக்குள் உங்கள் வெப்சைட்டில் உள்ள தகவல்கள் அனைத்தையும் இணையத்தில் இருந்து எடுத்துவிடுவார்கள். வெப்சைட்டின் பெயரை நீங்கள் டைப் செய்து பார்த்தால் THIS WEBSITE NOT FOUND என்று வரும்.

(சம்பாதிப்போம்)
கட்டுரையாளர், தனியார் மென்பொருள் நிறுவன நிர்வாக அதிகாரி
தொடர்புக்கு: compcare@hotmail.com

SCROLL FOR NEXT