நடிகை சபர்ணாவின் மரணம் சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டையும் மீண்டும் கலங்க வைத்திருக்கிறது. திரை வழியே பார்வை யார்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்துவரும் நடிகர், நடிகைகளே தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படுவது வேதனையளிக்கிறது என்று ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்துவருகிறார்கள். இதற்கு நடுவே சபர்ணாவின் மரணம் குறித்து நடிகை ரேகா பத்மநாபனின் ‘ஃபேஸ்புக் லைவ்’ பதிவு கடந்த சில நாட்களாக அதிக அளவில் கவனிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டுவருகிறது.
“ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கும்போது அவங்களோட பிரச்சினையோட உச்சத்தில் நின்னுக்கிட்டு அந்த வலியில் மட்டும் சிக்கித் தவிக்கிறாங்க. அந்த அழுத்தத்தால உயிரோட மதிப்பைப் பத்தி யோசிக்க முடியாம தற்கொலை வரைக்கும் போயிடறாங்க. உடல்நிலை சரியில்லைன்னா அதைக் கவனிக்காம விடுறது எவ்வளவு ஆபத்தானதோ அதே மாதிரிதான் மனதின் உளைச்சலைக் கவனிக்காம விடுவதும். ஒருவரின் மன உளைச்சலைப் புரிந்துகொண்டு அவரிடம் மனம் விட்டுப் பேச இங்கு பலருக்கும் நேரம் இருப்பதில்லை. அப்படியே பேசி மன உளைச்சலில் இருப்பவர்களை மருத்துவர்களிடம் அழைத்துச்செல்ல முற்பட்டாலும் அதற்கு அவர்கள் தயாராக இருப்பதில்லை. இப்படியான சூழலில் குறைந்தபட்சம் மற்றவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வேலையை நாம் செய்யாமல் இருப்பதே நல்லது. மரணம் என்றால் என்ன என்று 13 வயதில் ரமண மகரிஷி தனக்குள் ஆழமாகக் கேட்டு, வாழ்க்கையின் ரகசியங்களை உடைத்து மகான் ஆனார். நாம் மகான் ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை, மன உளைச்சலுக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்வோம். இதைத்தான் என் ஃபேஸ்புக் பதிவிலும் சொல்லியிருக்கிறேன்!’’ என்கிறார் ரேகா பத்மநாபன்.
ஒரு டஜன் சீரியல்!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப் பாகிவரும் ‘வாணி ராணி’ தொடரில் நடித்துவரும் கீதாஞ்சலி, தன் சொந்த ஊரான காரைக்குடியை விட்டு சென்னையில் வந்து தங்கி நடித்து வரும் முதல் சீரியல் இதுதானாம்.
“இதுக்கு முன் நடித்த ‘நாதஸ்வரம்’ சீரியல் முழுக்க எங்க ஊர் காரைக்குடியில நடந்தது. ஆபீஸ் போகுற மாதிரி காலையில ஷூட்டிங் போயிட்டு மாலை திரும்பிடுவேன். புது இடம், புது ஊர்னு இந்தச் சென்னை அனுபவம் வித்தியாசமாத்தான் இருக்கு. இந்த சீரியலுக்குள்ள வந்து எட்டு மாதம் ஆச்சு. ஓடினதே தெரியலை. சீரியல் ஆரம்பிச்சதுல இருந்து ராதிகா மேடம்கூட சேர்ந்து நடிக்கிற காட்சிகள் இல்லை. கதைப்படி அதுவும் சீக்கிரமே நடக்கப்போகுது. காரைக்குடியில இருந்து வந்து அப்பப்போ சென்னையில தங்கி நடிக்கறதால மற்ற சீரியல் வாய்ப்புகளை ஏற்க முடியவில்லை. விரைவில் அம்மா, தங்கைகளோட சென்னைக்கு வந்துடுவோம். அதுக்குப் பிறகு டஜன் டஜனா சீரியல், சினிமாதான்!’’ என்கிறார் கீதாஞ்சலி.