முன்பெல்லாம் குழந்தைகளை கேமராவில் படம் பிடிக்கவே வீட்டில் உள்ள பெரியவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இன்றோ, “இவன்/இவள் பிறந்த நாளிலிருந்து அவளது சின்னச் சின்ன அசைவுகளை, முதலில் புரண்டு படுத்ததை, பல் முளைத்ததை, தவழ்ந்ததை, தத்தித் தத்தி நடந்ததையெல்லாம் படம் பிடித்து வைத்திருக்கிறேன்” எனப் பெருமையாகச் சொல்லும் பெற்றோர் அதிகம். சிலர் ஒரு படி மேலே போய் கருவிலிருக்கும் சிசுவின் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் படத்தைக்கூட ஃபேஸ்புக்கில் பகிர்ந்து பூரிக்கிறார்கள்.
இன்றைய மழலையர் பேசும் பருவத்தை அடையும்போதே அவர்கள் பெயரில் எக்கச்சக்கமான ஒளிப்படங்களும் வீடியோ பதிவுகளும் சேகரிக்கப்பட்டுவிடுகின்றன. அவை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படுகின்றன. நம் வாழ்வின் அரிய, அழகிய தருணங்களை என்றென்றும் கண்டு கொண்டாட டிஜிட்டல் தொழில்நுட்பம் வழிவகை செய்திருப்பது உண்மைதான். ஆனால் இந்தப் போக்கு வேறு சில சிக்கல்களுக்கு இட்டுச் செல்லும் என்கிற எச்சரிக்கை உணர்வு பெற்றோருக்கு இருக்கிறதா?
ஷேரண்ட்டிங் தேவையா?
தங்கள் குழந்தைகள் தொடர்பான தகவல்கள், ஒளிப்படங்கள், வீடியோ பதிவுகளைச் சமூக ஊடகங்களில் அதிகப்படியாகப் பகிர்ந்துகொள்வதற்கு ‘ஷேரண்ட்டிங்’ (‘Sharenting’) என்கிற புதிய சொல்லாடல் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது எதிர்மறையான பிரயோகம் என்பதில் சந்தேகமே வேண்டாம். தேவைக்கு அதிகமான தகவல்களைப் பெற்றோர்கள் பகிர்ந்துகொள்வதுதான் ‘ஷேரண்ட்டிங்’.
குழந்தை பிறப்பு உள்ளிட்ட அத்தனை தகவல்களையும் உடனுக்குடன் ஆன்லைனில் பதிவிடுவதினால் பல தகவல்கள் கடத்தப்பட்டு போலி டிரைவிங் லைசன்ஸ் உட்பட பல மோசடிகள் உலகெங்கும் நிகழ்கின்றன. போதாததற்கு உருவங்களை வைத்துக் கேலி கிண்டல் செய்யும் வலைத்தளங்கள் ‘அவலட்சணமான குழந்தைகள்’ என்ற பெயரிலேயே உருவாக்கப்படுகின்றன. இதில் தன்னுடைய ஒளிப்படம் இடம்பெற்றிருப்பதைப் பதின் பருவத்தை அடைந்த ஒருவர் பார்த்தால் எப்படி உணர்வார்?
வேண்டாமே விபரீதம்
வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் பலர் இன்று ஆன்லைனிலேயே குழந்தை வளர்ப்பு குறித்து குழு கலந்துரையாடல் நடத்துகிறார்கள். குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், மன வளர்ச்சி ஆகியவை இதில் விவாதிக்கப்படுவதால் இது ஓர் ஆரோக்கியமான நகர்வு எனலாம். ஆனால், குழந்தைகளைப் பற்றிய பெருமைகள் மட்டுமல்லாமல் குறைகளும் இங்கு பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. ஒரு முறை இணையத்தில் பதிவிட்டால் அது காலங்காலமாக உலவிக்கொண்டிருக்குமே! சம்பந்தப்பட்ட குழந்தைகள் வளர்ந்த பிறகு பிற்காலத்தில் இதைப் பார்த்தால் இதனால் அவர்களுக்குத் தாழ்வுமனப்பான்மையோ அல்லது சங்கடமான மனநிலையோ ஏற்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாகக் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயல்பவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் ஒளிப்படங்களும், வீடியோ பதிவுகளும் காணக் கிடைத்தால் அதுவே தூண்டுதலாக அமைந்துவிடக்கூடும்.
முதலாவதாக, குழந்தைகளும் தனிநபர்கள்தான் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பதின் பருவத்தை அடைந்த குழந்தைகளிடம் அவர்களுடைய ஒப்புதலைப் பெறாமல் எதையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடக் கூடாது. குறிப்பாக, அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் அவர்களுடைய ஆண் / பெண் நண்பர்கள் பற்றிய தகவல்களை ஒரு போதும் பகிரக் கூடாது. பகிர்தல் அழகானது. ஆனால் அளவுக்கு அதிகமாகப் பகிர்தல் அபாயகரமானது!