மொகலாய ஆட்சியில் பெரிதும் செல்வாக்கு செலுத்திய பெண் நூர்ஜஹான் என்றால், அந்த ஆட்சியின் அந்திமக் காலத்தில் செல்வாக்கு மிகுந்த பெண்ணாகத் திகழ்ந்தவர் அவருடைய பேத்தி முறை கொண்ட இளவரசி ஜஹானாரா பேகம் (1614-1681).
அரண்மனைப் பெண்கள் பொது இடங்களுக்கு வருவது தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில், அதிகாரமும் சுதந்திரமும் பெற்றவராக ஜஹானாரா திகழ்ந்தார். இரண்டு மொகலாயப் பேரரசர்களின் ஆட்சியில் அவர் செல்வாக்கு செலுத்தினார்.
கலை இலக்கிய ஆர்வம்
ஜஹானாரா பேகம், புகழ்பெற்ற மொகலாயத் தம்பதி ஷாஜஹான் – மும்தாஜின் முதல் மகள். ஜஹானாரா என்றால் ‘உலகை அலங்கரிப்பவர்’ என்று அர்த்தம். அஜ்மீரில் பிறந்து, தலைநகர் ஆக்ராவில் வளர்ந்தார். பெர்சிய, துருக்கிய, இந்திய இலக்கியங்கள், சமய நூல்களைப் படித்தார். கலை, எழுத்து, கவிதையில் தனியாட்சி செலுத்தினார்.
ஜஹானாரா வடிவமைத்த தோட்டங்களும், மசூதிகளும் இன்றளவும் பார்ப்பவர் மனதைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன. பழைய டெல்லியின் அடையாளமாகத் திகழும் சாந்தினி சௌக் கடைத்தெரு அவர் வடிவமைத்ததே. தாஜ்மஹாலின் வடிவமைப்பிலும் அவருக்குப் பங்கிருக்கிறது.
முதன்மைப் பெண்
பதினான்காவது குழந்தையைப் பெற்றெடுக்கும்போது ஏற்பட்ட சிக்கல்களால் அவருடைய அம்மா மும்தாஜ் இறந்தார். அந்த இழப்பால் உடைந்துபோன ஷாஜஹானை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தார் ஜஹானாரா. மூன்று மனைவிகள் இருந்தபோதும், ஆட்சியின் முதன்மைப் பெண்ணாக ஜஹானாராவை ஷாஜஹான் அறிவித்ததிலிருந்தே அவருக்குக் கொடுக்கப் பட்ட முக்கியத்துவத்தை உணரலாம். முதன்மைப் பெண்ணாக உயர்த்தப்பட்டபோது, அவருக்கு 17 வயது. அதற்குப் பின் ‘இளவரசிகளின் இளவரசி’ என்று புகழப்பட்டார்.
ஆட்சி நிர்வாகம் தொடர்பாக ஜஹானா ராவுடன் ஷாஜஹான் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. முதன்மைப் பெண் என்பதால் அரசவைக்கு அவர் வருவது வழக்கம். அரச முத்திரையைப் பதிக்கும் அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவரது வலியுறுத்தலின் பேரிலேயே ஏழைகள், கணவனை இழந்தவர்கள், ஆதரவற்றவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை ஷாஜஹான் மேற்கொண்டதாகச் சொல்கிறார்கள்.
நம்பிக்கையும் மீண்டெழுதலும்
அவரது காலத்தில் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட ஃபிரெஞ்சுப் பயணி ஃபிரான்சுவா பெர்னியர், “தனக்குப் பிடித்த முதல் மகள் ஜஹானாரா மீது ஷாஜஹான் தீவிர நம்பிக்கையைக் கொண்டிருந்தார். அதேபோல ஷாஜஹானுக்கான உணவை அரண்மனையில் தனது மேற்பார்வையில் தயாரிக்க ஜஹானாரா உத்தரவிட்டிருந்தார்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அனைவருக்கும் பிடித்த இளவரசியாக ஜஹானாரா திகழ்ந்ததாக இத்தாலியப் பயணி நிக்கோலா மானுக்கி குறிப்பிட்டிருக்கிறார்.
1644-ல் அவரது 30-வது பிறந்தநாளில் ஏற்பட்ட தீ விபத்தில் உடைகள் எரிந்து ஜஹானாரா தீக்காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட உடல் நலிவிலிருந்து அவர் தேறிவருவது மிகவும் சிக்கலாக இருந்தது. அவருக்குப் பார்க்கப்பட்ட மருத்துவம் குறித்து குழப்பமான குறிப்புகள் இருந்தாலும், கடைசியில் ஆங்கில மருத்துவத்தால்தான் அவர் பிழைத்தார் என்று கூறப்படுகிறது.
இந்தக் காலத்தில் அஜ்மீரில் உள்ள க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி தர்காவுக்கு அவர் போனார். அந்த தர்காவின் பளிங்குக் கூடம் அவர் கட்டியதே. அவர் எழுதிய ‘முனிஸ் அல் அர்வா’ எனப்பட்ட மொய்னுதீன் சிஷ்டியின் சரிதை, இலக்கியத் திறனுக்காகப் புகழ்பெற்றது.
சமரசவாதி
அவருக்குப் பல காதல்கள் இருந்தாலும் கடைசிவரை திருமணம் செய்துகொள்ள வில்லை. அதற்குக் காரணம் மொகாலாய இளவரசிகள் திருமணம் செய்துகொள்ள அக்பர் காலத்திலிருந்து விதிக்கப்பட்டிருந்த தடை. சகோதரர் தாரா ஷிகோவின் மீது ஜஹானாரா பாசம் வைத்திருந்தார். தான் மன்னரானால் திருமணத் தடையை விலக்குவதாக தாரா உறுதியளித்திருந்தார்.
ஆனால், மன்னர் பதவி தாராவுக்குப் போவதை விரும்பாத அவுரங்கசீப், தாராவை எதிரியாகக் கருதினார். கடைசியில் தாரா கொல்லப்பட்டு, ஷாஜஹானை ஆக்ரா கோட்டையில் சிறை வைத்துவிட்டு அவுரங்கசீப் தன்னை அரசராக அறிவித்துக்கொண்டார். ஒரு புறம் வாரிசுப் போட்டியில் தாராவின் பக்கமும் வீட்டுச் சிறைவைக்கப்பட்ட தந்தையைக் கவனித்துக்கொள்வதிலும் அக்கறையாக இருந்த ஜஹானாரா, மற்றொருபுறம் அவுரங்கசீப்பின் பாசத்தைப் பெறவும் தவறவில்லை.
ஷாஜஹானின் இறப்புக்குப் பிறகு அரசவையின் முதல் பெண்ணாக ஜஹானாராவை அவுரங்கசீப் நியமித்தார். தனி மாளிகையிலும் அவர் தங்க வைக்கப்பட்டார். இது வேறு யாருக்கும் வழங்கப்படாத சலுகை.
சூஃபி வழி
ஒரு கட்டத்துக்குப் பிறகு இஸ்லாமிய மெய்யியலில் ஜஹானாரா ஆழ்ந்துபோனார். அவருக்கு ஆன்மிக வழிகாட்டியாக இருந்த முல்லா ஷாவின் வாழ்க்கையைப் பற்றி ‘ரிசலாஹி சாஹிபியாஹ்வாஸ்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். 1681 செப்டம்பர் 16-ம் தேதி ஜஹானாரா இறந்தார். அவரது கல்லறை அவர் பின்பற்றிவந்த சூஃபி துறவியான நிசாமுதீன் அவுலியாவின் தர்கா வளாகத்தில் (டெல்லி) உள்ளது.
சென்னையில் பேகம் சாஹிப் தெரு (அரசவையில் ஜஹானாரா அப்படித்தான் அழைக்கப்பட்டார்) அல்லது பூபேகம் தெரு என்றொரு சிறிய தெரு திருவல்லிக்கேணியில் உள்ளது. இது ஜஹானாரா பேகத்தை கௌரவப்படுத்தும் வகையில் வைக்கப்பட்டதே.