மாற்றுச் சிந்தனைக்கும் மாற்று விஷயங்களுக்கும் எப்போதும் வாய்ப்புகள் இருந்துகொண்டே இருக்கும். தங்க நகைக்கு மாற்றாக, சில்க் திரெட் நகைகளை ஃபேஷன் உலகம் போற்றுவதும் அதனால்தான் என்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த கல்பனா.
54 வயதான இவர், சிறு வயதில் பள்ளியில் கைவினை வகுப்புகளில் கைவினைக் கலைகளைக் கற்றிருக்கிறார். திருமணமாகி 2 குழந்தைகளையும் படிக்க வைத்து, நிமிர்ந்து பார்க்கும்போது வயதாகியிருந்தது. கிடைத்த ஓய்வு நேரத்தை சீரியல் பார்ப்பதில் செலுத்தாமல் கைவினை வகுப்புகளுக்குச் சென்றிருக்கிறார். அங்கு கிடைத்த நண்பர்கள் மூலம் கலைக் கண்காட்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
இதோ ஃபேஸ்புக் மூலமும் ஆன்லைனிலும் உலகம் முழுக்க விற்பனை செய்கிறார். கண்ணாடி, பிளாஸ்டிக் மலர்கள் பதித்த சிப்பிகளைக் கொண்டு செய்யும் ஷெல் கிராப்ட்கள், காபி பெயிண்டிங், கேரளா மியூரல்கள், பேப்பர் குவில்லிங்கில் விதவிதமாக போட்டோ பிரேம் என வரவேற்பறை அலங்காரப் பொருட்களுடன் இளம்பெண்களுக்கான சில்க் திரெட் வளையல்கள், தோடு, நெக்லஸ்களும் செய்துவருகிறார்.
யூ-டியூப், ஃபேஸ்புக்கில் ஏதேனும் புதிய டிசைன்களைப் பார்த்தால் உடனே முயற்சி செய்து பார்ப்பேன். எங்கேனும் புதிய கலைப் பொருட்கள் கற்றுத்தந்தால் உடனே அந்தப் பயிற்சி வகுப்பில் சேர்வேன். என்னைப் பார்த்து நிறைய இளம்பெண்கள் இங்கு கைவினைப் பொருட்களை விற்பனை செய்துவருகின்றனர். அத்துடன் நேரம் கிடைக்கும்போது, உடைக்கேற்ற பிரத்யேக டிசைன்களில் நகைகள் செய்து விற்பனையும் செய்கிறேன். மாதம் கிடைக்கும் வருமானத்தை மீண்டும் கைவினைப் பொருட்கள் வாங்கவும் பயன்படுத்திக்கொள்கிறேன் என்பவர் சென்னை மற்றும் பெங்களூருவிலும் இளம்பெண்களுக்குப் பயிற்சி வழங்கிவருகிறார்.
ஆர்வமும் உழைப்பும் கொஞ்சம் படைப்புத்திறனும் இருந்தால் வயது ஒரு பொருட்டே இல்லை என்பதற்கு கைவினைக் கலைஞர் கல்பனா மற்றுமோர் உதாரணம்.
- கல்பனா