பெண் இன்று

முகங்கள்: பத்தாண்டுகளுக்குப் பிறகு கிடைத்த விருது!

வா.ரவிக்குமார்

இந்தியாவில் சுயசரிதை எழுதிய முதல் திருநங்கை என்ற பெருமைக்குரியவர் லிவிங் ஸ்மைல் வித்யா. ‘நான் வித்யா’ என்ற தலைப்பில் தமிழில் அவர் எழுதிய புத்தகம், கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 2012-ம் ஆண்டுக்கான சிறந்த கன்னட மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது. ஆங்கிலம், மலையாளம், கன்னடம், மராத்தி, அசாமி ஆகிய மொழிகளிலும் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டது.

I AM VIDYA என்னும் பெயரில் ஆங்கிலத்தில் வெளியான நூல், சென்னை ஸ்டெல்லா மேரி தன்னாட்சிக் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலப் பாடத்திட்டத்திலும் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் இளங்கலை பாடத்திட்டத்திலும் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த நூலை ஒட்டிய முனைவர் பட்டத்துக்கான ஆய்வுகள் நடக்கின்றன.

கன்னடத்தில் வெளிவந்த ‘நானு அவனு அல்லா அவளு’ நூலை அடியொற்றி அதே பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்தது. இந்தத் திரைப்படம் 62-வது தேசிய விருதுகளின் பட்டியலில் சிறந்த நடிகர், சிறந்த ஒப்பனை என இரண்டு விருதுகளைப் பெற்றிருக்கிறது. இதே படத்துக்குச் சிறந்த நடிகர் (சஞ்சாரி விஜய்), சிறந்த கதாசிரியருக்கான (லிவிங் ஸ்மைல் வித்யா) கர்நாடக அரசின் மாநில விருதுகள் சமீபத்தில் வழங்கப்பட்டன.

இவர் காந்தள் பூக்கள் உள்ளிட்ட சில குறும்படங்களிலும், அஃறிணைகள், பட்டர்ஃபிளை, நேக்டு வீல்ஸ், இஸ் இட் டூ மச் டு ஆஸ்க் (லீனா மணிமேகலையின் இயக்கத்தில்) ஆகிய ஆவணப்படங்களில் நடித்திருக்கிறார். இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக ‘நந்தலாலா’ திரைப்படத்திலும் இயக்குநர் கோபிநாத்திடம் இணை இயக்குநராக ‘விரதம்’ மலையாளப் படத்திலும் பணியாற்றியிருக்கிறார்.

“உங்களின் சுயசரிதையை எழுதி ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பிறகும், அதைப் படமாக எடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றிருக்கும் விருதை எப்படி உணர்கிறீர்கள்?” என்றோம்.

“பத்தாண்டுகளுக்குப் பின் எனக்குக் கிடைத்திருக்கும் முக்கியமான அங்கீகாரமாக இந்த விருதை நினைக்கிறேன். விருதை வாங்கும்போது, என்னுடைய கடந்த கால நிகழ்வுகள் அத்தனையும் நினைவில் நிழலாடின. என்னுடைய ஒரு பாதி வாழ்க்கைப் போராட்டத்தைச் சொல்லும் இந்தக் கதையின் இன்னொரு பாகமாகத்தான் தற்போதைய என்னுடைய போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது.

இந்த விருதைப் பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் திருநங்கை தாராவின் மரணம் அகாலமாக நிகழ்ந்தது. எங்களுக்கான போராட்டம் தினம் தினம் இப்படித்தான் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த விருதை என்னைப் போன்ற மாற்றுப் பாலின சமூகத்துக்கு காணிக்கையாக்குகிறேன். பாலைவனப் பயணத்தில் எதிர்ப்படும் நீரோடைபோல் இந்த விருது என்னை ஆசுவாசப்படுத்துகிறது” என்கிறார் வித்யா, உதட்டில் புன்னகையைத் தேக்கியபடி.

SCROLL FOR NEXT