லிமா பயந்தது போலவேதான் நடந்தது. அவளுடைய கணவன் அலெக்ஸுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது உறுதியானது. அலெக்ஸ் வேலைபார்க்கும் அலுவலகத்துக்குச் சென்றாள் லிமா. எதிரில் வந்த பன்னீர் செல்வம், “என்ன அண்ணி ஏதும் விசேஷமா? அண்ணன் ஒரு மணிக்கே வீட்டுக்குக் கிளம்பிட்டாரே?” என்றார். லிமாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏதோ சொல்லிச் சமாளித்துவிட்டு, வீடு வந்து சேர்ந்தாள் லிமா.
தன் கணவன் பல நாட்கள் சாப்பிட வராமல், கேன்டீனில் சாப்பிடுவதாகச் சொன்னதெல்லாம் அவள் நினைவுக்கு வந்தன. அலெக்ஸுடன் பணிபுரிந்து இறந்துபோன சேகரின் மனைவியுடன் தொடர்பு இருப்பதாக வந்த தகவல்களை எல்லாம் நம்ப விரும்பாமல், காலத்தைக் கழித்துவந்ததையும் நினைத்துப் பார்த்தாள். கடந்த இரண்டு வருடங்களாகத் தன்னை மனைவியாகக்கூட நடத்தாமல் இருந்ததையும் எண்ணிக் கலங்கினாள்.
குழந்தைகளைப் பாதிக்கும் குடும்பச் சண்டை
வீட்டுச் செலவு, குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், மருந்து, மாத்திரைகள் என்று எந்தச் செலவானாலும் பல நாட்கள் கோரிக்கை வைத்த பிறகே பணம் கிடைத்தது. அலெக்ஸிடம் சண்டைபோடவும்கூட வலுவிழந்து கொண்டிருந்தாள் லிமா. 13 வயது மகனுக்கும் 15 வயது மகளுக்கும் இவர்களின் இந்த சண்டை வெறுப்பையும் வேதனையையும் ஏற்படுத்தியது. குடும்பத்தின் மகிழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்துகொண்டிருக்க, அலெக்ஸ் மட்டும் நாளுக்கு நாள் தன் இளமையை அதிகரித்துக்கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்.
ஞாயிற்றுக் கிழமைகளிலும் வேலை என்று வெளியே போய்விடுவான். அடிக்கடி சண்டை. தனக்கும் லிமாவுக்கும் சரிப்பட்டு வராது என்று அலெக்ஸ் வீட்டுக்கு வருவதை நிறுத்தி ஒன்றரை மாதங்களாகிவிட்டன. மாமியார், மாமனாரிடம் கேட்டால், “எங்கள் பேச்சைக் கேட்குமளவு அவன் சிறுவனில்லை. நீயே பார்த்துக்கொள்” என்று தங்கள் இயலாமையை ஒப்புக்கொண்டனர்.
மணவிலக்குதான் தண்டனை
வழக்கறிஞராக இருக்கும் தோழி கவிதாவைச் சந்தித்தாள் லிமா. நடவடிக்கை எடுப்பதென்றால் விவாகரத்து (Divorce) அல்லது மணவிலக்கு (Judicial Seperation) என்று இரு வாய்ப்புகள் இருக்கின்றன. காவல்துறை புகாரின் மூலம் திருத்துவதோ, சட்டப்பூர்வமான தண்டனை பெற்றுத் தருவதோ முடியாது என்பதையும் கவிதா மூலம் அறிந்துகொண்டாள் லிமா.
தங்களின் இயலாமையால்தான் பெண்கள் இரண்டாவது தாரமாகவோ, திருமணம் செய்யாமல் சேர்ந்தோ வாழ்கிறார்கள் என்பதால், அவர்களையும் ஒரு வகையில் பாதிக்கப்பட்ட பெண்களாகக் கருதுகிறது சட்டம். இதனால் அந்தப் பெண்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்.
திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவில் ஈடுபடும் ஆண்களுக்குத் தண்டனை பெற்றுத்தரச் சட்டத்தில் மனைவிக்கு வழியில்லை. அதிகபட்சம் தகாத உறவு வைத்துக்கொள்ளும் கணவன், மனைவிக்குக் கொடுமை இழைத்ததற்காக மணமுறிவையோ மணவிலக்கையோதான் பெற முடியும்.
தெளிவு தந்த தோழி
ஜீவனாம்சம் மனு தாக்கல் செய்வதுதான் லிமாவுக்குச் சரியான தேர்வாக இருந்தது. மணமுறிவைக் கோரி வழக்குப் போட்டால், அலெக்ஸ் வசதியாக வழக்குக்கு வராமல் இருந்துவிட்டு, பிறகு அந்தப் பெண்ணையே திருமணம் செய்துகொண்டு, சட்டப்படி உறவை அங்கீகரிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே சேர்ந்து வாழும்படியான கோரிக்கையுடன் வழக்கு போட்டால், அலெக்ஸை லிமா சந்தேகப்பட்டுக் கொடுமைப்படுத்துவதாகவும் எதிர்த் தரப்பு வழக்காடக்கூடும். இன்னொரு பெண்ணுடன் அவனுக்கு இருக்கும் தொடர்பை அவ்வளவு எளிதாக நிரூபிக்கவும் முடியாது.
எனவே மணமுறிவும் கோராமல், சேர்ந்து வாழவும் கோராமல், முதலில் ஜீவனாம்சம் என்ற வாழ்க்கைப் பொருளுதவி மனு போடலாம் என்றும் மாதந்தோறும் கணவனின் வருமானத்தி லிருந்து அதிகபட்சம் மூன்றில் ஒரு பாகம் ஜீவனாம்சமாகப் பெறச் சட்டத்தில் இடமிருக்கிறது என்றும் கவிதா சொன்ன போது, லிமாவுக்கும் சரியென்று பட்டது.
சட்டப்படி உரிமையோடு ஜீவனாம்சம் கேட்க முடியும் என்பதும் மருத்துவம், கல்வி, வாடகை ஆகியவற்றையும் சேர்த்தே கணக்கில் எடுத்துக்கொண்டு உத்தரவு வழங்கப்படும் என்பதும் லிமாவுக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. பிரிவு 125 சி.ஆர்.பி.சி-ன்படி தனக்கும் தன் இரு பிள்ளைகளுக்கும் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடுத்தாள் லிமா. ஓராண்டுக்குள் உத்தரவும் வந்தது.
எது கணவனின் கடமை?
உத்தரவு வந்த பின்னர், தான் திருந்தி விட்டதாகவும் வேறொரு பெண்ணுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அழுதான் அலெக்ஸ். மனுவைத் திரும்பப் பெறுவதற்குத்தான் இப்படி நடித்தான் என்பது லிமாவுக்குப் புரியவில்லை. கணவன் கதறுவதைப் பார்த்து மனம் இறங்கியது. தேவாலயத்தில் பிள்ளைகள் மீது சத்தியம் செய்யுமாறு கேட்டாள். மறுத்தான் அலெக்ஸ்.
அவனுடைய அப்பா, அம்மாவுக்குப் பணம் தரும்படிக் கேட்டாள் லிமா. அலெக்ஸுக்கு கோபம் அதிகமானது. “என் பணத்தையெல்லாம் பிடுங்கிக்கொண்டு நிர்கதியாக நிற்க வைக்கப்பார்க்கிறாயா?” என்று கத்தினான். இத்தனை நாட்கள் அவன், தன் மனைவி, பிள்ளைகள், பெற்றவர்களை எல்லாம் நிர்கதியாக விட்டதை வசதியாக மறந்து போனான்.
கடைசியாக வீட்டை விட்டுக் கிளம்பும்போது, “ உத்தரவு வாங்கினால் மட்டும் என்ன கிழிக்கப் போகிறாய்?” என்றான். ஏற்கெனவே, சம்பளத்தைப் பிடித்தம் செய்ய மனு போட்டதை லிமா சொல்லவில்லை. வழக்கறிஞரைப் பார்த்தாள். இந்த முறை அலெக்ஸின் பெற்றோர் சார்பாகவும் மனு செய்தாள். ஆம், தன் வயதான பெற்றோரையும், மனைவி, பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு கணவனுக்கும் உண்டு.
சம்பளப் பணம் பிடித்தம் செய்ய வழியில்லாத வழக்குகளில், ஜீவனாம்சம் தராத கணவனைக் கைது செய்து, சிறையிலடைக்கவும் வழி செய்கிறது சட்டம். வாழ்க்கையில் படும் சிரமங்களை விட, சட்டத்தை நடைமுறைப்படுத்துவது இந்தச் சமூகத்தில் எளிமையானது என்பதைப் பெண்கள் உணர வேண்டும். அப்போதுதான் தங்கள் உரிமைகளை இழந்து பெற்றோரும், மனைவியும், குழந்தைகளும் அல்லல்பட மாட்டார்கள்.
கட்டுரையாளர், வழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com