1999-க்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று அசத்தி இருக்கிறது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. இந்தப் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 111 பந்துகளில் 143* ரன்கள் எடுத்தார். இதில் 18 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் அடங்கும். சதம் அடிக்கும் வரை நிதானமாக விளையாடியவர், கடைசி 11 பந்துகளில் மட்டும் 43 ரன்கள் எடுத்து மிரட்டியிருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக அதே மண்ணில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்கிற சாதனையையும் தன்வசப்படுத்தியிருக்கிறார். சபாஷ் கேப்டன்!
ஹிஜாப் தேர்வு பெண்ணின் உரிமை இல்லையா?
பொது இடத்தில் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்பதற்காக 22 வயதுப் பெண் மாஷா அமினியை ஈரான் சிறப்புப் படை போலீசார் கைதுசெய்து தாக்கினர். கோமா நிலைக்குச் சென்ற அவர், செப்டம்பர் 16ஆம் தேதி உயிரிழந்தார். மாஷா அமினியின் மரணம் ஈரான் மட்டுமன்றி உலகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வீதியில் இறங்கிய ஈரான் பெண்கள் ஹிஜாபை எரித்தும் கூந்தலைக் கத்தரித்தும் போராட்டம் நடத்திவருகின்றனர்.
1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு கடந்த 20 ஆண்டுகளில் ஹிஜாபுக்கு எதிராகச் சில போராட்டங்களை ஈரான் பெண்கள் முன்னெடுத்து நடத்தியுள்ளனர். ஈரானில் ஹிஜாபுக்கு எதிரான குரல் வலுத்துவரும் நிலையில், கர்நாடக மாநிலத்தில் மாணவிகள் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டதும் விவாதப் பொருளானது. ஹிஜாப் அணிய வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவதும், ஹிஜாப் அணியக் கூடாது எனத் தனிநபர் உரிமையைப் பறிப்பதும் பெண்ணுரிமைக்கு எதிரானது எனவும் ஹிஜாப் அணிய வேண்டுமா வேண்டாமா எனத் தேர்வு செய்வது அவரவர் விருப்பம் என்பதாகவும் சமூக வலைத்தளங்களில் விவாதம் நீண்டது.
- ரா. கார்த்திகா