நீரைக் கிழித்துப் பாயாமல் மென்மையாக நீரின் மேலே தவழ்ந்து சென்ற அந்த மோட்டார் படகில் உட்கார்ந்தபடியே பச்சை நிற நீரும் இளநீல வானும் தொட்டுக்கொள்வதைப் பார்க்கப் பரவசமாக இருந்தது. நடுவில் கம்பீரமாக நின்ற பசுமலைக் குன்று ஏரியை இரண்டாகப் பிரித்தது மேலும் அழகூட்டியது. தைவான் தேசத்தின் அற்புதங்களில் ஒன்றான சன் மூன் லேக்கில் (Sun Moon Lake) படகுச் சவாரி தந்த அற்புத அனுபவம் இது. மலையடிவாரத்தில் படகு எங்களை இறக்கிவிட, மலை மேல் இருக்கும் சுவான் சாங் (யுவான் சுவாங்) நினைவு மண்டபத்தை நோக்கி நடந்தோம். உலகின் மகத்தான பயணியான சுவான் சாங் இந்தியா வந்த கதையை, தைவானில் கேட்கும்போது மெய்சிலிர்த்தது.
நகரம் தந்த ஏற்றம்
ஆசியாவின் இதயம் என்று வர்ணிக்கப்படும் தைவானின் ஆண்களும் பெண்களும் மேற்கத்திய உடைகளைத்தான் அணிந்திருந்தார்கள். கடந்த அறுபது ஆண்டுகளில் தைவானில் நகரமயமாதல் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. கல்வி கற்று வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்திருக் கிறது. சாய்ங்வென் (Tsai Ing-wen) என்ற பெண்தான் தைவானுக்கும் ராணுவப் படைகளுக்கும் அதிபராக இருக்கிறார்! ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்புவரை தைவான் பெண்களுக்குப் பல அடிப்படை உரிமைகள்கூட முற்றிலுமாக மறுக்கப்பட்டன என்பதே நிதர்சனம்.
தேநீர் முட்டைகள்
சுவான் சாங்கின் நினைவு மண்டபத்தைப் பார்வையிட்டுத் திரும்பும்போது ஒரு கடையில் அப்படியொரு கூட்டம். கடந்து போனவர்களின் கைகளில் பழுப்பு நிற முட்டைகள். சீனக் காளானோடு தேநீரில் சமைக்கப்படும் தைவான் சிறப்பு உணவுதான் இந்தத் தேநீர் முட்டை.
மூதாட்டி ஒருவர் தேநீர் முட்டைகளை விற்றுக்கொண்டிருந்தார். “கடந்த 50 ஆண்டு களாக இந்த அடர்த்தியான மலைக் காட்டில் தேநீர் முட்டைகளை விற்க அனுமதி பெற்ற ஒரே நபர் சோ ஜிம் பெர்ன் என்ற இந்தப் பாட்டி மட்டுமே” என்றார் வழிகாட்டி ஹுயாசுன். 87 வயதிலும் பல கட்டுப்பாடுகளையும் தடைகளையும் எதிர்கொண்டுதான் சோ ஜிம் வாழ்ந்துகொண்டிருக்கிறார் எனச் சொல்லாமல் சொல்லின அவருடைய சுருங்கிய சிறிய கண்கள்.
தைவானின் சிறப்பு உணவு வகைகளில் ஒன்றான தேநீர் முட்டையை நீங்களும் செய்து சுவைத்துப் பாருங்கள்.
தேவையான பொருட்கள்
முட்டை – 12
நட்சத்திர சோம்பு பூ – 3
ஷெஸ்வன் மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
லவங்கப்பட்டை – 1
டார்க் சோயா சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
லைட் சோயா சாஸ் – 5 டேபிள் ஸ்பூன்
சமையல் வைன் – 3 மூடி (தேவைப்பட்டால்)
உப்பு – 1 டீஸ்பூன்
சர்க்கரை- 2 டீஸ்பூன் (தேவைப்பட்டால்)
சீனக் காளான் – 15 - 20 (சிறியது)
தேயிலைத் தூள் – 2 டேபிள் ஸ்பூன் அல்லது பிளாக் டீ பேக் – 6
எப்படி செய்வது?
முழு முட்டையைத் தண்ணீரில் எட்டு நிமிடங்கள் வேக வைத்துக்கொள்ளுங்கள். ஒரு ஸ்பூனால் முட்டையின் ஓடுகளைத் தட்டி விரிசல் ஏற்படுத்துங்கள். எல்லா மசாலாப் பொருட்களையும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, முட்டைகளைப் போட்டு, மூன்று மணி நேரம் மிதமான சூட்டில் வேகவையுங்கள். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, இரவு முழுக்க அப்படியே வையுங்கள். அடுத்த நாள் காலை தானாக ஓடு உதிர்ந்துவிடும். தைவான் தேநீர் முட்டை தயார்.