பெண் இன்று

முகம் நூறு: ஸ்வர்ணலதா - எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள்

ஆர்.கிருஷ்ணகுமார்

ஆடி கார் நிறுவனத்தில் வாடிக்கையாளர் பிரிவு தலைவராக இருந்தார் ஸ்வர்ணலதா. அன்பான கணவர், இரண்டு வயதில் மகன் என வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியால் நிரம்பியிருந்தது. 2009-ம் ஆண்டு வந்த ஒரு காய்ச்சல் இவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. இனி எழுந்து நின்று, நடப்பதே சிரமம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட ஸ்வர்ணலதா, தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.

பெங்களூருவைச் சேர்ந்த ஸ்வர்ணலதா எழுத்தாளர், புகைப்படக்காரர், பாடகர், மெஹந்தி டிசைனர், ஃபேஷன் நகை தயாரிப்பாளர், பொம்மலாட்டக் கலைஞர் என்று பன்முகத் திறமை கொண்டவர். காய்ச்சலின்போது செய்த பரிசோதனையில், தண்டுவட மரப்பு நோயால் (multiple sclerosis) பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த நோய்க்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இதனால் கால்களும் கைகளும் வலுவின்றிப் போயின. நடக்க முடியாது. ஒரு போனைக்கூட கைகளால் எடுக்க முடியாது.

துயர் துடைக்கும் சேவை

எப்படியாவது மீண்டுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ஸ்வர்ணலதா. கணவரின் ஊக்கம், கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சை போன்றவற்றால் ஓரளவு தேறினார். அப்போதுதான் தன்னைப் போல் தண்டுவட மரப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருப்பதைப் பார்த்தார்.

“என்னைவிட மோசமான நிலையில் இருப்பவர்களைப் பார்த்தேன். 18 முதல் 40 வயதுக்கு உட்பட்ட பெண்களை இந்த நோய் அதிகம் தாக்குகிறது என்பதைத் தெரிந்துகொண்டேன். இனி வழக்கம்போல் வேலைக்குச் செல்வதோ, குழந்தைகளைப் பராமரிப்பதோ என்னால் முடியாது என்பதை உணர்ந்தேன். அந்தத் தருணம், என் வாழ்வின் போக்கை மாற்றியது” என்று சொல்லும் ஸ்வர்ணல்தா, தன்னைப்போல பாதிக்கப்பட்டர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்ட முடிவு செய்தார். தன் வலியை மறந்து, அவர்களது வலியையும் மறக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். பலருக்கும் அது உதவியாக இருந்தது. தமிழ், ஆங்கிலம், கன்னடம், இந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி, மார்வாடி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகள் இவருக்குத் தெரியும். இதனால் எந்த மொழி பேசினாலும் அவர்களிடம் எளிதில் இவரால் பழக முடிந்தது. வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் கவுன்சலிங் தர ஆரம்பித்தார்.

தளராத தன்னம்பிக்கை

கோவைக்கு வந்தவுடன் தன் கணவர் குருபிரசாத் துணையோடு மாற்றுத் திறனாளிகளான ஆனந்த் செல்வராஜ், சூரஜ்குமார், தினேஷ், டெல்பினா ஆகியோருடன் இணைந்து, ‘ஸ்வர்கா’என்ற அறக்கட்டளையைத் தொடங்கினார்.

இந்த அமைப்பு சார்பில் பள்ளிகள், கல்லூரிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லங்களுக்குச் சென்று, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குத் தன்னம்பிக்கை வகுப்புகளை நடத்தியிருக்கிறார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ உதவிகள், சக்கர நாற்காலி, சிறப்புக் குழந்தைகளுக்கான கல்விச் செலவு, வீடுகளில் காய்கறி வளர்ப்புக்கான பை வழங்குதல், சைக்கிள் போட்டி, இருசக்கர வாகனப் பேரணி, பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு, பொம்மை, மெழுகுவர்த்தி தயாரிப்பு பயிற்சிகள் உள்ளிட்ட பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்கள்.

“நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் மாற்றுத்திறனாளிகளையும் ஒதுக்கி வைப்பதும் அவர்களுக்காகப் பரிதாபப்படுவதும் அவர்களது வலியை அதிகரிக்கும். சக மனிதர்களாக அவர்களை ஏற்றுக்கொள்வதே அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும். தன்னம்பிக்கை இருந்தால் எந்த நிலையிலும் சாதிக்கலாம். நாங்கள் கேட்பதெல்லாம் ‘எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள்’ என்பதே. தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி, ஒலிம்பிக்கில் தங்கம் வென்று உலக அரங்கில் இந்தியாவின் புகழை நிலைநாட்டினார்” என்று மாற்றுத் திறனாளிகள் குறித்துப் பெருமிதத்துடன் சொல்கிறார் ஸ்வர்ணலதா.

கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல்வேறு துறைகளில் பிரகாசிக்கும் மாற்றுத் திறனாளிகளின் ஒளிப்படங்கள் கொண்ட காலண்டர்களைத் தயாரித்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை சேவைகளுக்குப் பயன்படுத்திவருகிறார்கள். நரம்புக் கோளாறால் பாதிக்கப்பட்டும் சாதனை படைத்த 12 பேரின் புகைப்படங்களுடன் கூடிய 2017-ம் ஆண்டு காலண்டரைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். மாற்றுத் திறனாளிகள் வெளியில் செல்லும்போது, இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு மிகுந்த சிரமப்படுவார்கள். இதற்காகக் கழிவறை, படுக்கை வசதியுடன் கூடிய ‘சாரதி’வேனை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மாற்றுத் திறனாளிகளின் தேவைகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்காகப் பல வகையிலும் செயல்பட்டுவரும் ஸ்வர்ணலதாவின் சேவையைப் பாராட்டி விருதுகளும் வாழ்த்துகளும் குவிகின்றன!

SCROLL FOR NEXT