திருமணம் முடிந்து பல மணி நேரம் கழித்தும் மண மக்களின் கைகளில் இருந்த பூங்கொத்து வாடவில்லை. விசாரித்தால் அது செயற்கைப் பூங்கொத்தாம். அசலைத் தோற்கடித்துவிடுகிற அழகுடன் மிளிர்ந்த அந்த மலர்கள் செயற்கையானவை என்றால் நம்பவே முடியவில்லை. அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சரண்யா வி.குமார்.
சரண்யா, கேரளாவில் பிறந்தவர். படிக்கும்போதே க்வில்லிங், ஃபேஷன் நகைகள், களிமண் நகைகள் போன்றவற்றில் தேர்ந்து விளங்கினார். திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்தவர், கணவரின் ஊக்கத்தால், சிங்கப்பூருக்குச் சென்று டெகோ கிளே எனப்படும் செயற்கைக் களிமண்ணில் அலங்காரப் பொருட்கள் செய்வது குறித்த பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றார். பயிற்சியின் ஐந்து நிலைகளில் தேர்ச்சிபெற்ற பிறகு பலவித அலங்காரப் பூந்தொட்டிகள், திருமணப் பூங்கொத்துகள், போட்டோ பிரேம்கள், மெழுகுவத்தி ஸ்டாண்ட்கள், பொம்மைகள், சுவர் மற்றும் வரவேற்பறை அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றைச் செய்து விற்பனை செய்கிறார்.
“புதுமை விரும்பிகளான இந்தக் காலத்து இளைஞர்களுக்குக் களிமண் பூங்கொத்துகள் பிடிக்குமா என்ற என் சந்தேகத்தைத் தங்கள் அமோக ஆதரவால் தகர்த்துவிட்டார்கள் வாடிக்கையாளர்கள். டெகோ கிளேவைப் பயன்படுத்தி விரும்பிய வடிவில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ரோஜா, மல்லிகை ஆகியவற்றை வைத்துச் செய்யப்படும் பூங்கொத்துகள் விரைவில் வாடிவிடும் என்பதால் நான் செய்கிற களிமண் பூங்கொத்துகளுக்குத் திருமண விழாக்களில் நிறைய வரவேற்பு இருக்கிறது.
மணமக்களின் உடைக்குப் பொருந்துகிற நிறங்களில் பூங்கொத்துகளைச் செய்வேன். சில சமயம் ஒரு பூங்கொத்தைச் செய்ய ஒரு வாரம்கூட ஆகும். ஆனால் என் படைப்புகள் ஒவ்வொன்றும் தனித்துவத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக அதிகக் கவனம் எடுக்கிறேன்” என்று சொல்கிறார் சரண்யா.
சரண்யா செய்கிற பூங்கொத்துகளின் தனித்தன்மையால் ஈர்க்கப்பட்ட பல ஐ.டி. நிறுவன ஊழியர்கள், பூங்கொத்துகள் பரிமாறிக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்! ஆர்வமுள்ளவர்களுக்குச் செயற்கை பூங்கொத்துகள் செய்யப் பயிற்சி அளித்துவரும் இவருக்கு, பெரிய விற்பனை நிறுவனம் தொடங்குவதுதான் வருங்காலத் திட்டம்.
“என் கணவர் விவேக், ஆன்லைன், ஃபேஸ்புக்கில் டிஜிட்டல் மார்கெட்டிங் செய்வதில் தொடங்கி பல்வேறு வழிகளிலும் எனக்கு ஊக்கமளித்துவருகிறார். சிறியதோ, பெரியதோ பெண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஏதாவது செய்து, சொந்தக் காலில் நிற்க வேண்டும். அதன் மூலம்தான் தங்களைக் கட்டுப்படுத்தும் கூட்டை விட்டு வெளியே வர முடியும்” என்கிறார் சரண்யா.