பெண் இன்று

நிறங்களின் பேதம்: மெலனின் தேவதை

எஸ். சுஜாதா

உலகம் முழுவதும் உள்ள மனிதர்களின் நிறங்களை மையமாக வைத்து ஓர் ஒளிப்பட அணிவகுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மாடல்களில் கூஜ்யா டீவோப், அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக் கிறார். காரணம், அவரது அடர் கறுப்புத் தோல். செனகலைச் சேர்ந்த கூஜ்யா டீவோப், கருங்கற்சிலைப் போல வசீகரிக்கிறார்.

இதுவரை இப்படி ஒரு தனித்துவமான கறுப்புத் தோல் யாருக்கும் இருந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு இயற்கை இவருக்கு நிறத்தை வாரி வழங்கியிருக்கிறது. இவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் விதவிதமான படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுவருகிறார். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இவரைப் பின்தொடர்கிறார்கள்.

“நிற பேதங்களைப் பற்றிப் பேசுவதே அநாகரிகமானது. ஆனால் உலகம் முழுவதும் வெள்ளைத் தோல்தான் உயர்ந்தது என்ற கருத்தை சர்வதேச நிறுவனங்கள் வலுவாகப் பரப்பிவிட்டன. மேலும் பரப்பிவருகின்றன. அதனால்தான் கறுப்பு நிறம் தாழ்ந்தது அல்ல என்று பேச வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்கர்களின் அடையாளமே கறுப்புதான். ஆனால் இன்று ஆப்பிரிக்கர்களிடமே, கறுப்பு நிறம் தாழ்ந்தது என்ற கருத்து வலுப்பெற்றுவருகிறது. மெலனின் அதிகம் சுரப்பதால் அடர் வண்ணம் கிடைக்கிறது. என்னைப் பார்க்கும் எவரும் ஒரு கணம் திகைத்துப் போவார்கள்.

டார்க்கி, மெலனின் தேவதை, இரவின் மகள், நட்சத்திரங்களின் தாய் என்றெல்லாம் கிண்டல் செய்வார்கள். இன்றும் ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் என் படங்களுக்கு இதுபோன்ற பட்டங்கள் அதிகம் கிடைத்துவருகின்றன. ஆனால் அவற்றை எல்லாம் நான் நேர்மறையாக எடுத்துக்கொண்டேன். என் இன்ஸ்டாகிராம் கணக்கையே மெலனின் தேவதை என்ற பெயரில் வைத்துக்கொண்டேன். கிண்டல் செய்தவர்கள் எல்லாம், துவண்டு விழாத என்னைப் பார்த்து வெட்கப்பட்டிருக்கிறார்கள். என் நிறத்தைப் பற்றி வரும் எதிர்மறையான விமர்சனங்களை நான் ஒருபோதும் கண்டுகொள்வதில்லை. இந்த எண்ணம்தான் இன்று என்னைச் சிறப்பானவளாக மாற்றியிருக்கிறது!’’ என்கிறார் கூஜ்யா டீவோப்.

இன்று ஆப்பிரிக்கப் பெண்களின் முக்கியமான பிரச்சினையாக அவர்களின் நிறம் மாறியிருப்பதற்குக் காரணம், சிவப்பழகு க்ரீம் விற்பனை நிறுவனங்கள்தான். நைஜீரியாவில் 75% பெண்களும் டோகோவில் 59% பெண்களும் தென்னாப்பிரிக்காவில் 35% பெண்களும் தங்கள் நிறத்தை மாற்றுவதற்காகச் சிவப்பழகு க்ரீம்களைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

பெண்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அழுத்தத்தைக் கொடுத்து, அவர்களின் சுயமரியாதையைக் காலி செய்திருக்கின்றன சிவப்பழகு க்ரீம் விற்பனை நிறுவனங்கள். அடர் நிறப் பெண்களை, ஆண்கள் விரும்ப மாட்டார்கள் என்ற தவறான கருத்தையும் எப்படியோ பெண்களிடம் விதைத்துவிட்டன.

தலை முடி முதல் பாதம் வரை ஒரே நிறத்தைப் பெற்றுள்ள கூஜ்யா டீவோப், உலகம் நம்பி வந்த அத்தனை கற்பிதங்களையும் தவறு என்று நிரூபித்திருக்கிறார். அழகு முன்னிலைப்படுத்தப்படும் மாடலிங் துறையில், பிரான்ஸ் மற்றும் நியூயார்க் மாடலாக வலம்வருகிறார். சிந்தனையிலும் செயலிலும் ஆரோக்கியத்திலும்தான் அழகு இருக்கிறதே தவிர, நிறத்தில் இல்லை என்கிறார் இந்தப் பேரழகி!

SCROLL FOR NEXT