பெண் இன்று

வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்: உங்கள் பெயரில் ஓர் அலுவலகம்!

காம்கேர் கே.புவனேஸ்வரி

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு கண்காட்சி. மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்தார்கள். கொலு பொம்மைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், பருத்தி, பட்டு ஆடைகள், ஆபரணங்கள், சிறுதானிய உணவுப் பொருட்கள், நறுமணப் பொருட்கள், மண் பானைகள், தஞ்சாவூர் ஓவியங்கள் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

வியக்கவைக்கும் பெண் தொழில்முனைவோர்

அலுவலக ஃபைல்கள், அலங்கார கைப்பைகள், மொபைல் கவர்கள் அத்தனையும் பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் நேர்த்தியுடன் இருந்தன. மொறுமொறு காராசேவு, கைமுறுக்கு, தட்டை, சீடை போன்றவை ஹைலைட். பெண்கள், தங்கள் திறமையைக் கண்டறிந்து, அதற்கேற்ப பொருட்களைத் தயார் செய்து, கண்காட்சிகள் நடத்தி விற்பனை செய்கின்றனர். உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்களுக்கும் விற்பனை செய்துவருகின்றனர். இவர்களில் இளம் பெண்கள் முதல் வயதானவர்கள்வரை இருக்கிறார்கள் என்பது அவர்கள் தன்னம்பிக்கையைக் காட்டியது. இந்தக் குழுவில் உள்ள ஒவ்வொருவரையும் என்னால் தொழில் முனைவோராகவே பார்க்க முடிகிறது.

மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகமும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து நடத்திய தொழில்நுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கில் பங்கேற்றேன். அவர்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் விளம்பரப்படுத்துதல், விரிவுபடுத்துதல், வியாபாரப்படுத்துதல் பற்றி விளக்கினேன். ஆப்ஸ் மூலம் அவர்கள் தயாரிப்புகளை விற்பனை செய்யும் உத்தியையும் அறிமுகம் செய்து வைத்தேன்.

மகளிருக்கான ஆபரணங்களைத் தயாரிக்கும் சிலர், தங்கள் தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு விற்பனை செய்ததாகவும், ஒரு சிலர் தங்கள் தயாரிப்புகளை ஃபேஸ்புக், பிளாக், வாட்ஸ் அப் மூலம் பிரபலப்படுத்தி வருமானத்தை இருமடங்காக்கியதாகவும் சொன்னார்கள்.

இவர்களைப்போல உங்கள் திறமையை ஆன்லைனில் வெளிப்படுத்தி, வருமானத்தைப் பெருக்க ஆசையா? முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஆன்லைனில் அலுவலகம் அமைப்பதுதான். வெப்சைட்தான் ஆன்லைன் அலுவலகம்.

வங்கிகள், மின்வாரியம், ரயில், பஸ், விமான டிக்கெட் முன்பதிவு அலுவலகங்கள் போன்றவை நேரடியாகவும் இயங்கிவருகின்றன. ஆன்லைனிலும் இயங்கிவருகின்றன. இப்போது நாம் நேரடியாக அந்தந்த அலுவலகங்களுக்குச் சென்றும் அவற்றின் பயன்களைப் பெறுகிறோம். இருந்த இடத்தில் இருந்தே விரல் நுனியில் ஆன்லைனில் வெப்சைட்டுகள், ஆப்ஸ் மூலமும் பயனடைகிறோம். இனிவரும் காலத்தில் ஆன்லைனில் மட்டுமே இவற்றின் பயன்களை அனுபவிக்க முடியும் என்ற நிலை வரலாம்.

நமக்கென்று ஓர் இணையதளம்

உங்கள் இருப்பிடத்திலேயே உங்கள் தொழிலை விரிவுபடுத்த ஆன்லைனில் வெப்சைட்டுகளையும் சமூக வலைதளங்களையும் பயன்படுத்தலாம். நேரடியாக ஒரு கடையோ, அலுவலகமோ போட வேண்டும் என்றால் என்னெவெல்லாம் செய்வோம் என்பதைப் பட்டியலிடுங்கள்.

1. பொருத்தமான பெயரைத் தேர்ந்தெடுப்போம்.

2. எந்த இடத்தில் வியாபாரம் நன்றாக நடைபெறும் என்பதைக் கண்டறிந்து அங்கு வாடகைக்கு அறை எடுப்போம்.

3. தேவைக்கு ஏற்ப அந்த இடத்தை வடிவமைப்போம்.

4. பிட் நோட்டீஸ், வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என்று தேர்ந்தெடுத்து விளம்பரம் கொடுப்போம்.

ஆன்லைனில் வெப்சைட் அமைப்பதற்கும் இதே வழிமுறைகள்தான். நம் தொழிலுக்குப் பொருத்தமான பெயரைத் தேர்ந்தெடுப்பதைப் போல, வெப்சைட்டுக்கான பெயரையும் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணத்துக்கு www.companyname.com என்று ஒரு வெப்சைட்டை எடுத்துக்கொள்வோம். இதை டொமைன் நேம் (Domain Name) என்றும் சொல்லலாம். இதில் மூன்று பகுதிகள் இருப்பதை கவனியுங்கள்.

இதில் முதலாவதாக உள்ள www என்பது World Wide Web. இணையத்தில் உள்ள அத்தனை வெப்சைட்டுகளின் இனிஷியலும் இதுதான். எல்லாமே www என்றுதான் தொடங்கும். இரண்டாவது பகுதி நம் நிறுவனத்தின் பெயர். மூன்றாவது பகுதி, நாம் என்ன தொழில் செய்கிறோம் என்பதை வெளிப்படுத்தும். இங்கு .com என்பது வியாபார ரீதியாகச் செயல்படும் நிறுவனம் என்று பொருள்படும். அறக்கட்டளை, சேவை மனப்பான்மையுடன் இயங்கும் நிறுவனங்கள் .org என்று முடிவடையும். வீடியோக்களுக்கான வெப்சைட்டாக இருந்தால் .tv என்று முடிவடையும். இதுபோல ஏராளமான இணைப்புப் பெயர்கள் உள்ளன.

ஆன்லைனில் நாம் தேர்ந்தெடுத்துள்ள வெப்சைட் முகவரியின் பெயரை நமக்கே நமக்கானதாக மாற்றிக்கொள்ள அதை ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். .com, .org, .tv இப்படி ஒவ்வோர் இணைப்புப் பெயருக்கும் கட்டணம் வேறுபடும். ஒவ்வொரு வருடமும் கட்டணம் செலுத்தினால் மட்டுமே அந்த டொமைன் பெயரை நாம் தக்க வைத்துக்கொள்ள முடியும். இல்லை எனில் அந்தப் பெயரை வேறு யார் வேண்டுமானாலும் விலைக்கு வாங்கிவிடலாம்.

உங்கள் பெயர் சுஜாதா, வித்தியாசமாகப் படம் வரைந்து, அதை உடையில் பிரின்ட் செய்து தருவது உங்கள் திறமை என்றால், www.sujathaarts.com என்பதை உங்கள் வெப்சைட்டின் பெயராக அமைத்துக்கொள்ளலாம். வெறும் சுஜாதாவாக வீட்டுக்குள் வெளிப்பட்டு வந்த உங்கள் திறமை, சுஜாதாஆர்ட்ஸ் மூலம் இனி அகிலமெங்கும் பரவுவதோடு வருமானமும் கிடைக்கும்.

சரி, எங்கு யாரிடம் நம் வெப்சைட் பெயரை ரெஜிஸ்டர் செய்வது? அது அடுத்த இதழில்.

(சம்பாதிப்போம்)
கட்டுரையாளர், தனியார் மென்பொருள் நிறுவன நிர்வாக அதிகாரி
தொடர்புக்கு: compcare@hotmail.com

SCROLL FOR NEXT