பெண் இன்று

சேனல் சிப்ஸ்: ஊரும் உணவும்

மகராசன் மோகன்

ஊரும் உணவும்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சனிக்கிழமைதோறும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் ‘ஊரும் உணவும்’ சமையல் நிகழ்ச்சியை கலகலப்பாகத் தொகுத்து வழங்கிவருகிறார், இளம் சமையல் கலை நிபுணர் ஸ்ருதி நகுல். “சமையலில் பாட்டி, அம்மா இருவரும்தான் எனக்கு வழிகாட்டி. அந்தக் காதலால்தான் லண்டன் சென்று உணவு ஆராய்ச்சி தொடர்பான மேற்படிப்பை முடித்தேன். படிப்பு முடிந்து சென்னை திரும்பியதும் கல்லூரியில் கேட்டரிங் துறையில் பணி.

இப்போ தொலைக்காட்சி பக்கம் வந்தாச்சு. ஒரே இடத்தில் நின்னுக்கிட்டு சமையல் நிகழ்ச்சி நடத்துறது பழைய ஸ்டைல். அதிலிருந்து முற்றிலும் மாறி இந்த ‘ஊரும் உணவும்’ நிகழ்ச்சியை நடத்தறோம்” என்று சொல்கிறார் ஸ்ருதி. உணவின் சிறப்பை அதன் வரலாற்றோடு சொல்வது இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம். உணவு வகைகளைத் தேடி சம்பந்தப்பட்ட ஊர்களுக்கே பயணமாவது

மற்றொரு சிறப்பு

சினிமா ஆசை விஜய் தொலைக்காட்சியில் ‘கல்யாணம் முதல் காதல் வரை’, சன் தொலைக்காட்சியில் ‘வள்ளி’ ஆகிய தொடர்களில் நடித்துவரும் கவிதா, பதினைந்து ஆண்டுகள் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வெள்ளித்திரையில் முகம் காட்டும் எண்ணத்தில் கதை கேட்டுவருகிறார்.

“மாண்புமிகு மாணவன்’, ‘முகவரி’ என்று சினிமாவில் நடித்த அனுபவத்தோடுதான் சின்னத்திரைக்குள் வந்தேன். ‘சக்தி’, ‘அம்பிகை’, ‘ஆனந்தம்’ என்று சின்னத்திரையில் நான் நடித்த சீரியல் பட்டியல் பெருசு. சீரியலுக்குள் வந்த சில ஆண்டுகளில் மகள் லக்‌ஷனா பிறந்தாள், குழந்தை வளர்ப்பு, படிப்பு என்று அவளுக்காகவே நேரத்தைச் செலவழித்துவந்தேன்” என்று சொல்லும் கவிதா, தற்போது தன் மகள் ஓரளவு வளர்ந்துவிட்டதால் சின்னத்திரை, சினிமா இரண்டிலும் கவனம் செலுத்தத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்.

நகைச்சுவையே இலக்கு

ராஜ் மற்றும் யூ தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக அசத்திவரும் தர்ஷினி விரைவில் தன் தோழிகளுடன் சேர்ந்து ஜும்பா டான்ஸ் ஷோ ஒன்றைத் தயாரித்துவழங்கும் வேலையில் இறங்கியுள்ளார்.

“தற்போது இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நடன நிகழ்ச்சி இது. ‘நாதஸ்வரம்’ தொடருக்குப் பிறகு ஒரு வருடம் இடைவேளை எடுத்துக்கொண்டேன். இதற்கு முன் வில்லி அவதாரம் எடுத்ததால் இனி காமெடி, குணச்சித்திர வேடங்கள் ஏற்கும் எண்ணத்தில் இருக்கிறேன். அதற்கிடையே ஜும்பா நடன நிகழ்ச்சியை வழங்கும் வேலைகளும் நடந்துவருகின்றன!’’ என்கிறார் தர்ஷினி.

SCROLL FOR NEXT