பெண் இன்று

சட்டமே துணை: வரதட்சணை எனும் சமூக வன்முறை

பி.எஸ்.அஜிதா

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு மேடைகளில் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், வரதட்சணைக் கொடுமைகள் பற்றிப் பேசுவதைக் கேட்டிருப்போம். இன்றும் இந்தியாவில் நூற்றுக்குத் தொண்ணூறு திருமணங்களில் வரதட்சணை இடம்பெறுகிறது. ஆனால் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. வடிவங்கள் மாறியுள்ளனவே தவிர, வரதட்சணை மாறவே இல்லை.

நாசூக்கு வரதட்சணை

சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. அண்ணன், தம்பியைவிடப் படிப்பில் சுட்டி. நல்ல பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. படிப்பை முடிக்கும் முன்பே மிகப் பெரிய நிறுவனத்தில் வேலையும் கிடைத்தது. அவள் அப்பாவின் பணி ஓய்வின்போது கிடைத்த பணம், மகாலட்சுமியின் இரண்டாண்டு சம்பளம்!

வரன் பார்த்தனர். மாப்பிள்ளை கல்லூரி ஆசிரியர். இன்னும் சில ஆண்டுகளில் விரிவுரையாளர் ஆகிவிட்டால், மாதச் சம்பளமே ஒரு லட்சத்துக்கும் மேல் என்று சொன்னபோது, மகாலட்சுமியின் பெற்றோருக்கு மகிழ்ச்சி. உடனே திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

“நீங்கதான் திருமணத்தை நடத்தணும். உங்க மகளுக்கு எவ்வளவு நகை போட விரும்பறீங்களோ, அவ்வளவு போடுங்க. என் பெண்ணுக்கு 50 சவரன் கொடுத்தேன். தனிக் குடித்தனம் வைக்கப்போவதால் வீட்டுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொடுப்பது உங்க விருப்பம்” என்ற நான்கு வாக்கியங்களில் பெண் வீட்டாருக்கு வைத்த செலவு 25 லட்சம் ரூபாய்.

தங்களால் இவ்வளவு செலவு செய்ய இயலாது என்றும் தானும் படித்து நல்ல வேலையில் இருக்கும் போது, எதற்காக இந்த வரதட்சணை என்றும் கேள்வி கேட்டார் மகாலட்சுமி. நாசூக்காக வரதட்சணை கேட்பதை அராஜகமாகவும் நியாயமற்றதாகவும் பார்த்தார். ஆனால் அவருடைய பெற்றோர், “நல்ல பையன், நல்ல வேலையில் இருக்கிறான். அதனால் பரவாயில்லை” என்றனர்.

திருமணம் நடந்தது. கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் புகுந்த வீட்டுக்குள் நுழைந்த பின்னர்தான், கணவனுக்கு வேலையில்லை என்பதும் முனைவர் பட்டம் பெற்ற பின்னர்தான் வேலை கிடைக்கும் என்பதும் தெரியவந்தது. அதுவரை மகாலட்சுமி சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றும், வேலை கிடைக்கும்வரை கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.

புகுந்த வீட்டின் புதிய முகம்

திருமணத்துக்கு முன் அன்பு வார்த்தைகளை மட்டுமே பேசிய கணவன், திருமணமான பிறகு தனக்குப் பெற்றோர்தான் முக்கியம், அவர்கள் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் வாழ்ந்தால் உன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றார். மகாலட்சுமி பெற்றோரிடம் சொல்வதா, வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே, கரு உண்டாகவில்லை என்ற பிரச்சினை கிளம்பிவிட்டது.

“ஒண்ணுக்கும் உதவாதவளை நம் தலையில் கட்டிட்டாங்க. இவளைப் பெத்தவங்களைச் சொல்லணும்” என்றபோது மகாலட்சுமியால் தாங்க முடியவில்லை.

“வேலையில் இருப்பதாக ஏமாற்றி, திருமணமும் பண்ணிக்கிட்டு, இப்ப என் மேல குறை வேறயா? என் சம்பாத்தியத்தில் வாழ்ந்துகொண்டு, என்னையும் என்னைப் பெத்தவங்களையும் எப்படிக் கீழ்த்தரமா பேசலாம்? உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா?’’ என்று வெகுண்டெழுந்தார்.

“என்னடா பார்த்துக்கிட்டிருக்கே? நம்ம குடும்பத்தை ஃபிராடுங்கறா… நாலு அடி போடுடா” என்று சொன்ன மாமியார், தானே ஓங்கி அறைந்தும்விட்டார்.

இந்த இழிநிலையை மகாலட்சுமியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இனியும் சேர்ந்து வாழ முடியாது என்று நினைத்தார். அப்போது அவருடைய அப்பாவின் உடல் நலம் குன்றிய செய்தி வந்தது. முடிவைத் தள்ளிவைத்தார் மகாலட்சுமி. வீட்டு வேலை, அலுவலக வேலை என்று தன்னைக் கரைத்துக்கொண்டு, பத்து மாதங்களைக் கடத்தினார்.

விடியலைத் தந்த உறுதி

புதிய வீடு ஒன்றைக் கணவன் பெயரில் வாங்கி, மாதத் தவணையைக் கட்டும்படி சொன்னார் மாமியார். அந்தச் சண்டையில் வீட்டை விட்டு வெளியேறினார் மகாலட்சுமி. அவர்களுடைய பேராசைக்கும் வன்முறைகளுக்கும் அளவே இல்லை என்று முடிவான பின்னர், அவர்கள் செய்த குற்றங்களை மன்னிக்க முடியாது என்று காவல் நிலையம் சென்றார்.

கணவன், மாமியார், மாமனார் மீது புகார் கொடுத்தார். வரதட்சணைக் கொடுமைகளைக் கேள்விக்குள்ளாக்கி, இந்திய தண்டனைச் சட்டம் 498-ஏ பிரிவில் வழக்கு தொடுத்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனை என்பதால், வழக்கு நடக்கும்போதே பலவகையில் மிரட்டலும் சமாதானத்துக்கான அழைப்புகளும் வந்தன. எதையும் மகாலட்சுமி ஏற்கவில்லை.

அந்த உறுதிதான் மகாலட்சுமிக்கு விடியலைத் தந்தது. நான்கு ஆண்டுகள் சிரமங்களைச் சந்தித்தபோதும், சென்ற வாரம் மூவருக்கும் நீதிமன்றம் தண்டனை அளித்தது. மகாலட்சுமிக்கு இழந்த சுயமரியாதையைத் திரும்பப் பெற்றது போலிருந்தது. வன்முறைக்கு எதிராகத் துணிந்து நடவடிக்கை எடுத்ததை மகாலட்சுமியின் பெற்றோரும் ஏற்றுக்கொண்டனர்.

வரதட்சணை, பணம் மட்டுமின்றி, மனதாலும் உடலாலும் கொடுமைப்படுத்தப்பட்டாலும் 498ஏ பிரிவில் வழக்குப் பதிவு செய்யலாம். அதற்குத் தேவைப்படுவதெல்லாம் உறுதியும் தெளிவும்தான்.

கட்டுரையாளர், வழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

SCROLL FOR NEXT