பெண் இன்று

போகிற போக்கில்: படித்துக் கொண்டே சம்பாதிக்கலாம்

பவானி மணியன்

கற்பனை வளமிருந்தால் கல்லூரியில் படிக்கும்போதே கார்பரேட் நிறுவனங்களை வாடிக்கையாளராக்கி, தொழில ்முனைவோராகலாம் என்பதை நிரூபிக்கிறார் உருஷா மெஹர்.

சென்னை இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் கட்டிட வடிவமைப்பு பிரிவில் படித்துவரும் உருஷா, கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் கலை கண்ணோடு பார்ப்பவர். தோழிக்குப் பிடித்த ஜீன்ஸ் பேன்ட் பழையதாகிவிட, அதில் ஏதாவது செய்து கொடு என்ற கேட்டிருக்கிறார். வழக்கமாக ஜீன்ஸ் துணியைப் பையாக மாற்றுவதில் விருப்பம் இல்லாமல், நோட்டுப் புத்தகங்களுக்கான அட்டையாக மாற்றியிருக்கிறார். தோழியிடம் மட்டுமல்லாமல், மற்றவர்களிடமும் ஏக வரவேற்பு.

செல்போன், பேனா போன்றவற்றையும் அதிலேயே வைத்துக்கொள்ளும்படி இருப்பதால் மாணவர்களும் விரும்புகின்றனர். தொடர்ந்து வண்ண பட்டர் பேப்பர்களைக் கொண்டு விதவிதமான அளவுகளில் நோட்புக்குகள் செய்தவர், பிரபலமான வாசகங்களை அட்டையில் வடிவமைத்துக் கொடுக்கிறார். எவர்சில்வர் வாளியில் காப்பர் பெயின்ட் அடித்து, அதில் 3-டி எம்போஸிங்கும் செய்து தருகிறார்.

- உருஷா மெஹர்

இன்ஸ்டாகிராம் ஆர்டர்கள்

உருஷாவின் வீட்டில் காணப்படும் அலங்காரப் பொருட்கள் ஒவ்வொன்றும் வேறொரு பொருளின் புதிய வடிவமாக இருக்கிறது. “என்னுடைய ஒவ்வொரு டிசைனுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. பரிசளிக்க வேண்டுமானால் என்னைக் கூப்பிடும் அளவுக்குப் பிரபலமாகிவிட்டேன். இன்ஸ்டாகிராமில் என் படைப்புகளைப் படமெடுத்து, பதிவேற்றினேன். இப்போது தொடர்ந்து ஆர்டர்கள் கிடைக்கின்றன. நாக்பூர், ஐதராபாத் தொடங்கி உள்ளூர் வாடிக்கையாளர்கள் என்று மாத வருமானம் நிறைவைத் தருகிறது. சமீபத்தில் நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்றபோது, ஒரு பெரிய நிறுவனத்தினர் என் படைப்புகளைப் பாராட்டி, ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றுமே தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதில் நான் செலுத்திய கவனம், இந்தப் பலனைப் பெற்றுத் தந்திருக்கிறது’’ என்பவருக்கு புராடக்ட் டிசைனராகும் கனவிருக்கிறது.

விருப்பமானவற்றில் தீவிர கவனம் செலுத்தினால், அது தானாகவே உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று தத்துவம் உதிர்க்கும் உருஷா, வளரும் தொழில்முனைவோராக அவரது கல்லூரியில் அடையாளப் படுத்தப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT