பெண் இன்று

பெண் நூலகம்: ஆட்டிஸத்தை அன்பால் வெல்வோம்!

என்.கெளரி

‘அவளுக்கென்று ஓர் மனம் - ஐஸியின் டைரி குறிப்புகள் (2010 - 2015)’ என்ற இந்தப் புத்தகம் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ஐஸியின் (ஐஸ்வர்யா) உலகத்துக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. ஐஸியின் பெற்றோர்கள் கிரிஜா ஸ்ரீராமும், பா. ஸ்ரீராமும் இந்தப் புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார்கள். ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பற்றிய விழப்புணர்வையும் அவர்களைக் கண்ணியமாக நடத்த வேண்டியதன் அவசியத்தையும் ஐஸியின் டைரி குறிப்புகள் உணர்த்துகின்றன.

1981-ல் பிறந்த ஐஸிக்கு ஆட்டிஸம் பாதிப்பு இருப்பது மூன்று வயதில் கண்டறியப்பட்டது. அவருடைய பெற்றோரின் தொடர் முயற்சிகளின் காரணமாக, இன்று தன்னுடைய அன்றாடச் செயல்களை இயன்றவரை அவரே செய்துகொள்கிறார் என்பதை இந்தக் குறிப்புகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

ஐஸியின் டைரி, பிப்ரவரி 2, 2010-ம் தேதியில், “அப்பா ராம் ரிடைர் ஆகிவிட்டார்” என்பதிலிருந்து தொடங்குகிறது. அவரது கையெழுத்திலேயே டைரி குறிப்புகளை வெளியிட்டிருப்பது சிறப்பு. குறிப்புக்கு அருகிலேயே அச்சு வடிவத்தில் அதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. யோகா, ஜிக்ஸா புதிர்கள், எம்ப்ராய்டரி, போட்டோஷாப் ஓவியங்கள், பாடல்கள், சைக்ளிங், சுவையான உணவு வகைகள் என ஐஸியின் அன்றாட வாழ்க்கையில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் சுவாரஸ்யமானதாக இருக்கின்றன. அதிலும் ஐஸி ருசித்துச் சாப்பிட்ட உணவு வகைகள் பற்றிய விவரங்கள் இந்தக் குறிப்புகள் முழுவதும் நிரம்பியிருக்கின்றன.

சில வார்த்தைகளுக்கு அவற்றின் உச்சரிப்புக்கு ஏற்ற வகையில் ஆங்கிலத்தைக் கலந்து எழுதியிருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. ‘காFE’, ‘Fரேம்’, ‘Tரீட்’, ‘Fரண்ட்ஸ்’, ‘Oம்பொடி’, ‘FOர்க்’ போன்ற வார்த்தைகள் உதாரணம்.

காய்கறி நறுக்குவது, அதை மைக்ரோவேவ் அவனில் சமைப்பது, வாஷிங் மெஷினில் துணி துவைப்பது, காயவைப்பது போன்ற தான் செய்யும் அன்றாடச் செயல்களை ஐஸி உற்சாகத்துடன் விவரித்திருக்கிறார். ஆயிரம் துண்டு ஜிக்ஸா புதிர்களை அநாயாசமாக இணைத்து முடித்தவுடன், ‘ஐஸி மாதிரி யாராலேயும் பஸில்ஸ் போட முடியாது’ என ஒவ்வொரு முறை பெற்றோர்கள் பாராட்டுவதையும் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார். தனக்கு இருக்கும் ‘Partial Seizures’ பாதிப்பை அவரது பாணியில் இப்படி விவரிக்கிறார்:

“Fட்ஸ் வரும். தலை ஆடும். மயக்கம். படுத்து தூங்கிப்பேன்”. ஐஸியின் மகிழ்ச்சி, சங்கடங்கள், வலிகள் என எல்லாவற்றையும் இந்தப் புத்தகத்தில் காண முடிகிறது. ஆட்டிஸம் நிலையாளருக்கும் சுயத்தை வெளிப்படுத்திக்கொள்ளும் திறன் இருக்கிறது என்பதை இந்தப் புத்தகம் அக்கறையுடன் பதிவுசெய்கிறது. ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சுயமரியாதையை மதித்து அவர்களை அணுகுவதற்கான வழிகாட்டியாகவும் இந்தப் புத்தகம் விளங்குகிறது.

ஆட்டிஸக் குழந்தைகளைக் கையாள்வது பல சமயங்களில் கடினமானது என்றாலும், அன்போடும் அரவணைப்போடும் பொறுமையோடும் அணுகினால் அவர்களிடம் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் ஐஸி.

அவளுக்கென்று ஓர் மனம்(ஐஸியின் டைரி குறிப்புகள்) தொகுப்பு: கிரிஜா ஸ்ரீராம், பா. ஸ்ரீராம் விலை: ரூ. 250 வெளியீடு: அமரபாரதி, திருவண்ணாமலை தொடர்புக்கு: 9445870995

SCROLL FOR NEXT