பெண்களுக்கு பணத்தை மிச்சப்படுத்துவது என்பது கைவந்த கலை. மும்பையில் இந்தி சினிமாவில் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் பணியை எடுத்துக் கொண்டால் சுமார் 40% பெண்கள் தான். தற்போது தமிழ் சினிமாவிலும் அப்பணியில் சில பெண்கள் பணியாற்றிவருகிறார்கள். அதில் முக்கியமானவர் பவித்ரா. '2.0' படத்தில் பகுதிநேர பணியாளராக பணியாற்றி வருபவரிடம் உரையாடியதிலிருந்து..
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் பணியைப் பற்றிச் சொல்லுங்கள்...
தயாரிப்பாளர் படத்தின் பொருட்செலவுக்கு என ஒரு முதலீட்டை ஒதுக்கியிருப்பார். அந்த முதலீட்டுக்குள் இயக்குநரின் கனவுகளை நனவாக்குவதே என் பணி. ஒரு இடத்தில் படப்பிடிப்பு நடக்கும் போது, அங்கு பொருட்செலவை எப்படியெல்லாம் குறைக்கலாம் என சிந்திக்க வேண்டும். அதே நேரத்தில் இயக்குநர் படைப்பின் மீது வைத்திருக்கும் கனவுகளையும் சிதைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். படத்தில் பணிபுரியும் நடிகர்கள் மற்றும் வேலையாட்கள் அனைவரிடமும் பேசி, ஒதுக்கப்பட்டு இருக்கும் பணத்துக்குள் படப்பிடிப்பை முடித்துக் கொடுக்க வேண்டும்.
'2.0' படத்தில் இயக்குநர் ஷங்கர் சாரிடம் பணியாற்றி வருகிறேன். இதில் ஷங்கர் சார் நினைக்கும் விஷயங்களை அனைத்தையுமே நான் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். தயாரிப்பாளர் தரப்பில் என் போன்ற ஒரு பணியாளர் இருப்பார். அவர்களோடு பேசி ஷங்கர் சாரின் விஷயங்களை நிறைவேற்றி கொடுப்பது தான் என் பணி. இதற்கு முன்பு இயக்குநர் விஜய் சாரிடம் 'இது என்ன மாயம்' மற்றும் 'சுட்டகதை' உள்ளிட்ட படங்களில் பணியாற்றி இருக்கிறேன்.
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராக நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
நிறைய மனிதர்களை மட்டுமன்றி அவர்களுடைய உணர்வுகள், அனுபவம், சிறு சிறு ஈகோ உள்ளிட்ட அனைத்தையும் நான் கையாள வேண்டும். தயாரிப்பு என்பதே ஆண்கள் சார்ந்த உலகம் தான். ஒரு குறும்படத்தில் பணிபுரியும் போது மானவ் மேனன் சார் தான் "நீ அழகாக மக்களை கையாள்கிறாய். நீ ஏன் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராக பணிபுரியத் தொடங்க கூடாது" என சொல்லி என்னைத் இத்துறைக்குள் வர வைத்தார்.
எனது பணியில் எவ்வளவு பணத்தை மிச்சப்படுத்துகிறோமோ, அது தயாரிப்பாளருக்கு லாபம். அப்போது தான் தயாரிப்பாளருக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்கும் திறமை நமக்கு இருக்கிறது என நினைத்தேன். விளம்பர படங்கள், நிகழ்ச்சிகள், படத்தயாரிப்பு என நிறைய செய்திருக்கிறேன். அனைத்துக்குமே தயாரிப்பு என்பது ஒன்று தான். நாட்கள் மட்டுமே மாறும். எனது பணியில் இருப்பவர்கள் பலர் கோபப்பட்டு வேலை வாங்குவார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. பணிபுரிபவர்களின் வயது, அனுபவம் உள்ளிட்டவற்றை மனதில் வைத்து பேசி பணிகளை வாங்கினால் எந்தவொரு மனக்கசப்பும் இருக்காது.
திரையுலகம் என்பது முழுக்க ஆண்கள் சார்ந்தது. நீங்கள் பணிகளை வாங்கும் போது, ஆண்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்?
அனைவருமே என்னிடம் அன்போடும், மரியாதையோடும் நடந்துக் கொள்வார்கள். ஏனென்றால் திறமைகளை மதிக்கிறார்கள். தனிஆளாக பார்த்தால் நம்மிடம் திறமை இருந்தால் மட்டுமே மதிப்பார்கள். பகுதி நேர பணியாளராக எனக்கு தொடர்ச்சியாக பணிகள் வந்துக் கொண்டே இருக்கிறது. சவால்கள் நிறைய இருக்கிறது. சவால்களை தொடர்ச்சியாக தாண்டினால் மட்டுமே சாதனையை அடைய முடியும் என்பது தான் என் பாணி. துன்பங்கள் என்பது என் பணியில் இதுவரை நான் எதிர்கொண்டே இல்லை. யாருமே பவித்ரா வளரக்கூடாது என நினைத்ததில்லை.
படப்பிடிப்பு என்றாலே இரவு நேரமும் இருக்கும். உங்கள் குடும்பத்தின் ஆதரவு எப்படியிருக்கிறது?
எனக்கு முழு பலமே என் குடும்பத்தினரின் ஆதரவு தான். சின்ன வயதிலிருந்தே என்னுடைய பணிகளை நானே பார்த்துக் கொள்வேன். வெளியே போ, கற்றுக் கொள் அதில் தவறு ஏற்பட்டால் கூட அதிலிருந்து நீ கற்றுக் கொள்ளலாம் என்று குடும்பத்தினர் சொல்லுவார்கள். இதுவரை நான் யாரையும் சார்ந்து இருந்ததில்லை. எனக்கு கிடைத்த கணவர் தீபக்கும் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். என்னை சுற்றியிருப்பவர்கள் அனைவருமே என்னுடைய வளர்ச்சியைத் தான் முக்கியமாக கருதுகிறார்கள்.
இரவில் வெளியே போக வேண்டிய சூழல் ஏற்பட்டால் ஆட்டோ, கார் ஏதாவது ஒன்று புக் செய்து கிளம்பிவிடுவேன். இரவில் ரொம்ப தாமதமாக இருந்தால் அலுவலக கார் இருக்கும். அதில் போவேன். ரொம்ப தாமதமாகும் நேரத்தில் ஆட்டோவில் பயணிக்க மாட்டேன். இதுவரை நான் தனியாக சொல்லும் போது எந்தவொரு பிரச்சினையும் சந்தித்ததில்லை. நாம் எப்படி மற்றவர்களிடம் நடந்து கொள்கிறோமோ, அப்படித் தான் மற்றவர்கள் நம்மிடம் நடந்து கொள்வார்கள்.
பெண்கள் பெரியவளாக ஆனவுடன், வீட்டிலேயே சில நாட்கள் வைத்திருந்து திருமணம் செய்து வைக்கும் சூழல் இப்போதும் நிலவுகிறது. அவ்வாறு இருக்கும் பெண்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
அந்த சூழல் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. பெற்றொர்கள் அனைவருமே கல்வி ரொம்ப முக்கியம் என்பதை உணர்ந்து பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்துவிட்டார்கள். கனவுகள் என்பது பெற்றோர்களிடம் மட்டும் இருந்தால் போதாது. பெண் குழந்தைகளும் கனவுகளை பெரிதாக்கிக் கொள்ள வேண்டும். யாராலும் எதுவும் முடியாது என்பதே இந்த உலகில் இல்லை. விளையாட்டு, அரசியல், சினிமா என எந்தவொரு துறையாக இருந்தாலும் பெண்கள் ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய ஆசையை மனதுக்குள் மட்டும் வைத்திருப்பது தப்பு. எனக்கு இதனை செய்ய வேண்டும் என முன்வர வேண்டும். பெண்களின் பாதுகாப்பு, கவனம் எல்லாமே அவர்களது கையில் தான் இருக்கிறது. பெண்களுக்கு சுதந்திரம் மட்டும் கொடுத்துப் பாருங்கள், அவர்கள் கண்டிப்பாக முன்னேற்ற பாதையில் தான் இருப்பார்கள்.