பெண் இன்று

ஊடலை உடைத்த எலுமிச்சை!

செய்திப்பிரிவு

எனக்குத் திருமணமாகி பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. நெல்லிக்காயின் அடியாழத்தில் ஒளிந்திருக்கும் இனிப்பு போலத்தான் அவரது அன்பும்! எதற்கெடுத்தாலும் ஏதாவது பேசி என்னைக் கடுப்பேற்றுவார். ஆனால் நான் இல்லாத நேரங்களில் என் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் என்னைப் புகழ்ந்து பேசுவார். எதற்காகவும் நான் காயம்பட்டுவிடக் கூடாது என்பதில் என்னைவிட அதிக கவனத்தோடு இருப்பார். அதற்காக நாங்கள் ஆதர்ச தம்பதிகள் என்று நினைத்துவிடாதீர்கள். எங்களுக்கு இடையேயும் சண்டையும் கருத்து வேறுபாடுகளும் உண்டு. ஆனால் அதை நாங்கள் அன்பின் பெயரால் கடந்துவருவோம். அதுதான் இரண்டு மகள்கள் பிறந்த பிறகும் எங்கள் பிணைப்பை வலுப்படுத்துகிறது.

அன்றும் அப்படித்தான். காலையில் எதையோ பேசத் தொடங்கிப் பெரும் சண்டையில் முடிந்தது. இருவரும் முகம் திருப்பிக்கொண்டு அவரவர் அலுவலகங்களுக்குச் சென்றுவிட்டோம். ஒரு போன் இல்லை, தகவல் இல்லை. என்ன என்றால் என்ன என்ற ரீதியிலேயே இரண்டு நாட்கள் கழிந்தன. அவரது அமைதியை என்னால் தாங்க முடியவில்லை என்றாலும், நான் ஏன் பேச வேண்டும் என்ற வீம்புடன் இருந்தேன். மூன்றாவது நாள் நான் அலுவலகத்தில் இருந்தபோது, அவரிடமிருந்து வாட்ஸ்அப்பில் ஒரு படம் வந்தது. ஒரே காம்பில் காய்த்திருந்த கொடி எலுமிச்சையின் படம் அது. அதைப் பார்த்ததும் எனக்குப் பழைய நினைவுகள் மேலெழுந்தன. நாங்கள் இருவரும் என் அம்மா வீட்டுக்குச் சென்றபோது எடுத்த படம் அது. அந்த எலுமிச்சைகளைப் பார்த்ததுமே, ‘நம்மைப் போலவே சேர்ந்தே இருக்குதானே’ என்று அவர் காதலுடன் சொன்ன தருணம் கண் முன்னே வந்துபோனது. அப்புறம் என்ன… என் கோபம் போன இடமே தெரியவில்லை. இது மட்டுல்ல, இப்படித்தான் எப்போதும். எந்தப் பிணக்காக இருந்தாலும் என் மனப்போக்கைப் புரிந்துகொண்டு செயல்படுவதில், தோழனுக்கும் ஒரு படி மேலாக நடந்துகொள்வார் என்னவர். அன்று இரவு குழந்தைகளோடு நாங்கள் வெளியே சென்று சாப்பிட்டது இலவச இணைப்பு!

- நித்யா, சென்னை.

உங்க வீட்டில் எப்படி?

தோழிகளே, இதைப் படித்ததும் உங்கள் வீட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளக் கைகள் பரபரக்குமே கணவனே உங்கள் தோழனாக மாறிய தருணத்தை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்.

SCROLL FOR NEXT