புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி பாடகர்களான அஜய் சக்ரவர்த்தி, சந்தனா சக்ரவர்த்தி ஆகியோரின் இசைக் கருவில் உண்டான கவிதை கௌஷிகி.
பண்டிட் ஞான் பிரகாஷ் கோஷ் அவர்களின் அகாடமியிலும் ஐ.டி.சி. இசை ஆராய்ச்சி மையத்திலும் பட்டை தீட்டப்பட்டு இசை வானில் பிரகாசிக்கத் தொடங்கினார். ஹிந்துஸ்தானி இசையைத் தவிர கர்நாடக இசையிலும் இவருக்கு முறையான தேர்ச்சி உண்டு. இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவிடம் சில ஆண்டுகள் கர்நாடக இசைப் பயிற்சியைப் பெற்றிருக்கிறார் கௌஷிகி.
கௌஷிகி வெளியிட்ட `பியூர்’ என்னும் ஆல்பத்துக்காக அவருக்கு பிபிசி உலக இசை விருது வழங்கப்பட்டது. தவிர, சங்கீத் நாடக அகாடமி விருது, ஆதித்யா பிர்லா கலாகிரண் விருது, மிர்ச்சி மியூஸிக்கின் சிறந்த பெண் பாடகருக்கான விருது ஆகியவற்றையும் வென்றிருக்கிறார்.
டோவர் லேன் மாநாடு, இந்திய இசை ஆராய்ச்சி சம்மேளனம், கலிபோர்னியாவில் நடந்த இசைத் திருவிழா, லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த பரம்பரா போன்ற உலகப் புகழ்பெற்ற இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன் இசைத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கொல்கத்தாவின் முன்னணி தொலைக்காட்சிகளில் இசை தொடர்பான நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்திருக்கும் கௌஷிகி, பல இந்தித் திரைப்படங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்களின் இசையில் பின்னணி பாடியிருக்கிறார். சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஒரு தமிழ்ப் படத்தில் இவரின் குரலை ஒலிக்கவைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.
எஸ்.வி.ஏ. என்னும் தன்னார்வ அமைப்பின் மூலம் 8-25 வயதுவரை உள்ள இளைஞர்களிடம் இசை ஆர்வத்தை வளர்த்து, அவர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்து அவர்களைப் பரிபூர்ணமான கலைஞர்களாக இசை உலகுக்கு அளிக்கும் அரிய சேவையைச் செய்துவருகிறார்.
கௌஷிகியிடமிருந்து வெளிப்படும் பாட்டியாலா கார்னா பாணியிலான இசை, கரையில் ஒலியெழுப்பும் அலைகளைப் போன்றதல்ல, ஆழ்கடலைப் போன்றது.