பெண் இன்று

போகிற போக்கில் : தோள் கொடுக்கும் தோழி

க்ருஷ்ணி

தனிமையை விரட்டத் தனக்குக் கிடைத்த உற்ற தோழியாகவே கைவினைக் கலைகளைப் பார்க்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த ரேணுகா கோகுல். குழந்தைகளிடம் சோப்பைக் கொடுத்தால் என்ன செய்வார்கள்? பெரும்பாலும் தண்ணீரில் கரைத்து சோப்புக் குமிழி ஊதி விளையாடுவார்கள். ஆனால் பள்ளிச் சிறுமியாக இருந்த ரேணுகாவோ சோப்பைக் கீறி விதவிதமான வடிவங்கள் செய்தார். வளர்ந்த பிறகு, கதைப் புத்தகங்களில் வருகிற ஓவியங்களை அச்சு பிசகாமல் வரைந்தார். திருமணமும், கணவரின் திடீர் மரணமும் ரேணுகாவிடம் இருந்த கலையார்வத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டன. பள்ளிப் படிப்புடன் மட்டுமே நிறுத்தியிருந்தவர், மகனை வளர்ப்பதற்காகத் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். கடைநிலைப் பணியாளராகச் சேர்ந்தவர், தன் திறமை மூலம் கணக்காளராக உயர்ந்தார்.

மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துச் சென்றுவிட, ரேணுகாவைத் தனிமை சூழ்ந்தது. அந்தத் தனிமையைக் கலைகளின் துணை கொண்டு சமாளிக்க உதவியிருக்கிறார் இவருடைய மகன்.

“எனக்கு நாற்பது வயதாகும்போது என் மகன் வெளிநாடு கிளம்பினான். நான் தனியா இருந்தா, மனச்சோர்வு வந்துடும்னு அவன்தான் என்னைக் கைவினைக் கலைகளைக் கத்துக்கச் சொன்னான். கணவரோட மரணத்துக்குப் பிறகு ஒவ்வொரு பைசாவையும் கணக்குப் பார்த்துத்தான் செலவழிப்பேன். எப்பவுமே சுருக்கமா வாழ்ந்து பழகிட்டதால கைவினைக் கலைகளுக்கான மூலப்பொருட்கள் வாங்க நிறைய செலவாகும்னு நான் மறுத்தேன். ஆனால், முற்றுப்புள்ளி வைத்திருந்த என் கலையார்வத்துக்கு என் மகன் வற்புறுத்தியதால் மீண்டும் உயிர்கொடுத்தேன். பலவிதமான ஓவியங்கள், கலைகள்னு நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன்” என்று சொல்லும் ரேணுகா, தொலைக்காட்சி மூலமாகவும் கணினி மூலமாகவுமே பல கலைகளைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.

ரேணுகாவின் படைப்புகளில் ரெடிமேட் கோலம், கவனம் ஈர்க்கிறது. மாங்காய், இருதயக் கமலம், சங்கு போன்ற வடிவங்களில் உள்ள கோலங்களைத் தேவையானபோது பயன்படுத்திவிட்டு, பத்திரப்படுத்திவைத்து மீண்டும் உபயோகிக்கலாம்.

“எனக்கு இப்போ 64 வயசாகுது. எப்பவும் ஏதாவது ஒரு கிராஃப்டைச் செய்யறதைப் பத்தியும் அதை எப்படி புதுமையா வடிவமைக்கலாம்னும் யோசிச்சுட்டு இருப்பேன். இந்தக் கலைகள்தான் என்னை உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கின்றன” என்கிறார் ரேணுகா கோகுல்.

படங்கள்: ஜெ. மனோகரன்

SCROLL FOR NEXT