பெண் இன்று

மாடித் தோட்டம்: வீட்டுக்குள் விளையும் ஆரோக்கியம்!

செய்திப்பிரிவு

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு, சில ஆண்டுகளுக்கு முன்புவரை கண்ணுக்குக் குளிர்ச்சியான தோட்டம் என்பது கனவாகவே இருந்தது. ஆனால் இன்று அந்தக் கனவை நனவாக்கியதுடன், ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் தருகிறது மாடித் தோட்டம் என்கிறார் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த வளர்மதி.

கன்னியாகுமரியில் பிறந்து வளர்ந்த வளர்மதி, திருமணத்துக்குப் பிறகு சென்னைக்கு வந்தார். தேங்காய் முதல் கீரைவரை வீட்டுத் தோட்டத்தில் பறித்தவருக்கு, அனைத்தையும் வெளியே வாங்க வேண்டிய நிலை. பத்து ஆண்டுகளுக்கு முன்பே மாடித் தோட்டம் அமைக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் வாடகை வீட்டில் மாடித் தோட்டம் அமைப்பது அவ்வளவு எளிதாக இல்லை.’

“ஒருமுறை பேபிகார்ன் சாப்பிட்டபோது, அனைவருக்கும் வாய்ப்புண் வந்துவிட்டது. சோளத்தை நுகர்ந்தபோது ரசாயன வாசனை அடித்தது. எனக்கு அப்போது அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும். பூச்சி கத்திரிக்காய்தான் உடலுக்கு நல்லது என்று புரியவைத்தார் மருத்துவர். இனியும் காய்களை வெளியே வாங்க வேண்டாம் என்று முடிவெடுத்தேன். பால்கனியில் துளசி, கீரைச் செடிகளை வளர்த்தேன். சொந்த வீட்டுக்கு வந்தபின், கணவர் உதவியுடன் காய்கறிகளைப் பயிர் செய்துவருகிறேன்” என்கிறார் வளர்மதி.

இவரது மாடித் தோட்டத்தில் புடலங்காய், பாகற்காய், அவரை, வெண்டை, தக்காளி, கத்திரி முதல் பொன்னாங்கண்ணி, பசலை, மணத்தக்காளி உள்ளிட்ட கீரை வகைகளும் இருக்கின்றன. டிரம்மில் வாழை மரமும் வளர்த்துவருகிறார். மஞ்சள் தனது விருப்பமான செடி என்று அறிமுகம் செய்துவிட்டு, அலங்காரப் பூச்செடிகளுக்கு இடையே இருக்கும் புற்களை நீக்கியபடியே பேசுகிறார்.

“வீட்டுக்கழிவுகள் அனைத்தையும் உரமாக்கிச் செடிகளுக்கு இடுகிறேன். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை அரைத்து, வடிகட்டி, பூச்சிக் கொல்லியாகத் தெளிக்கிறேன். மாட்டுச்சாணம், மண்புழு உரம், மீன் கரைசல், பழக் கரைசல்தான் பயன்படுத்துகிறேன். இதனால் செடிகள் நன்றாகப் பூக்கின்றன. காய்கறி விளைச்சலும் நன்றாக இருக்கிறது. ஜுன் முதல் அக்டோபர்வரை, நவம்பர் முதல் மார்ச்வரை அனைத்துக் காய்களையும் கோடையில் கீரை வகைகளையும் விதைக்கலாம்” என்று சொல்லும் வளர்மதியைப் பார்த்து, அவரது தோழிகள் 40 பேர் மாடித் தோட்டம் அமைத்துள்ளனர்.

“நான் யார் வீட்டுக்குப் போனாலும் இனிப்பு, காரம் வாங்கிச் செல்லாமல், வீட்டில் விளைந்த காய்களை எடுத்துச் செல்வேன். எங்களின் தேவை போக, மீதமுள்ள காய்களை நண்பர்களுக்குப் பகிர்ந்தளிக்கிறேன். இதனால், அவர்களுக்கும் மாடித் தோட்டத்தில் ஆர்வம் வந்திருக்கிறது. நாங்களே பயிரிடுகிற காய்கறிகளைச் சாப்பிட்டுவருவதால், காய் வாங்கும் செலவு குறைகிறது. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு மாதம் ரூ.2,000 மிச்சம் பிடிப்பது பெரிய சாதனைதானே! தினமும் ஒரு மணி நேரம் தோட்டத்தில் செலவிட்டால், ஆரோக்கியத்தோடு பணமும் மிச்சமாகும்” என்கிறார் வளர்மதி.

SCROLL FOR NEXT