பெண் இன்று

முகங்கள்: இசையும் தமிழும்

என்.ராஜேஸ்வரி

எம்.ஏ. பாகீரதி ராணி மேரிக் கல்லூரியின் இசைத்துறைத் தலைவர், ஆராய்ச்சியாளர், பேச்சாளர், எழுத்தாளர், கர்நாடக இசைப் பாடகர், ஆராய்ச்சி நெறியாளர் என்று பன்முகத் திறமை கொண்டவர். இவரது இசை சேவைக்காக காஞ்சி சங்கர மடம் ‘மகா சுவாமிகள் விருது’ வழங்கியுள்ளது.

இசை மீது ஆர்வம் வந்தது எப்படி?

வயலினை முதன்முதலில் இந்துஸ்தானி இசையில் புகுத்தியவர், உலகப் புகழ் பெற்ற ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடலுக்கு இசையமைத்து, தங்க மெடலைப் பெற்றவர் பிரபல வயலின் மேதை பரூர் சுந்தரம் ஐயர். இவருடைய பேத்தி நான். அதனால் தானாகவே இசையில் ஆர்வம் வந்தது. என் உறவினர் சங்கு சுப்ரமணிய ஐயர், முதன்முதலில் பாரதியாரின் பாடல்களை வெளியிட்டவர். இவரிடம் பாரதியார் போட்ட மெட்டுகளிலேயே அவரது பாடல்களைக் கற்றுக்கொண்டேன்.

உங்கள் குரு யார்?

என் தந்தையிடம்தான் இசை பயின்றேன். முத்துஸ்வாமி தீட்சிதரின் அனைத்துப் பாடல்களையும் வி.வி. ஸ்ரீவத்சாவிடமும் வித்யா சங்கரிடம் சியாமா சாஸ்திரிகளின் கிருதிகளையும் கற்றுக்கொண்டேன். இசை நுணுக்கங்களை பரூர் வெங்கட்ராமன், லஷ்மண் தாஸ்ராவ், கல்பகம் ராமன் ஆகியோரிடமிருந்து பெற்றேன். மயிலை கபாலீஸ்வரர் கோயில் ஓதுவாரிடம் தேவாரங்களைப் பண் முறையில் கற்றுக்கொண்டேன்.

இசை வகுப்புகள் எடுப்பதுண்டா?

டிசம்பர் சீசன் நடக்கும்போது அமெரிக்காவின் ‘அயோவா’ பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் எடுத்துள்ளேன். அரசுப் பள்ளிகளுக்கு இசைப் பாடத் திட்டத்தை அமைத்துக் கொடுத்துள்ளேன்.

உங்கள் தமிழ்ப் பணி?

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிலையத்துக்காக ‘சேக்கிழாரும் இசைத் தமிழும்’ என்ற புத்தகம் எழுதினேன். கடந்த இருபத்தியெட்டு ஆண்டுகளாக, சென்னைத் தமிழிசைச் சங்கத்தில் தமிழ்ப் பண் ஆராய்ச்சி செய்துவருகிறேன்.

SCROLL FOR NEXT