பெண் இன்று

கணவனே தோழன்: அன்பால் என்னை மீட்டெடுத்தவர்!

செய்திப்பிரிவு

எங்கள் திருமணம் நடந்த போது என் கணவருக்கு நாற்பது வயது, எனக்கு 39. திருமணம்தான் தாமதமாகி விட்டது குழந்தையை சீக்கிரம் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டோம். சென்னையில் தனியார் பள்ளியில் பணிபுரிந்த கணவருடன் வளாகக் குடியிருப்பில் தங்கியிருந்தோம். பேச்சுத் துணைக்குக்கூட ஆள் இல்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து நான் கருத்தரித்தபோது, எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மூன்றாம் மாதம் டாக்டர் பரிசோதித்து விட்டு, குழந்தை உண்டாகவே இல்லை என்று சொன்னதும் அதிர்ந்துபோனோம்.

அடுத்த சில மாதங்களிலேயே மீண்டும் கருவுற்றேன். ஒரு நாள் இரவு சாப்பிட்ட பிறகு பள்ளி மைதானத்தில் காற்றோட்டமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென வயிறு வலித்தது. உடல் உஷ்ணமாக இருக்குமென நினைத்து அடிவயிற்றில் விளக்கெண்ணெய் தடவினோம். என் கணவர் வெந்தயப் பொடியை மோரில் கலக்கிக் குடிக்கச் சொன்னார். வலி கொஞ்சமும் குறையவில்லை. கழிவறைக்கு அழைத்துச் சென்று, கூச்சப்படாமல் அருகிலேயே நின்று கொண்டார். திரும்பி வந்தும் வலியில் புரண்டேன்.

வெளிப்பட்ட ரத்தக் கசிவு அந்த உண்மையை எனக்கு உணர்த்தியது. “மறுபடியும் மோசம் போயிட்டோமே” என கணவரைக் கட்டிப் பிடித்து அழுதேன். தண்ணீர் கொண்டு வந்து, என்னையும், தரையையும் சுத்தப்படுத்தினார். காபி போட்டுக் கொடுத்து, விசிறியபடி தான் தூங்காமல் என்னைத் தூங்க வைத்தார். அன்று இரவு சோகத்தில் எனக்குத் தோழராகி, தோள் கொடுத்துத் தேற்றியவர் அவர் தான்.

காலை சுடுநீர் வைத்து, குளிக்கவைத்து, மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று ஆறுதலும் சொன்னார். அவர் வார்த்தைப்படி மறுபடியும் கருவுற்றேன். வளைகாப்புக்குத் தாய் வீடு செல்லும்வரை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார். எனக்கும் அவருக்கும் நிறைய வேறுபாடுகள். நான் நிறைய பேசுவேன், அவர் மெளன சாமியார். நான் செலவாளி, அவர் சிக்கனவாதி. பிரச்சினைகளை நான் தேடிச் சென்றால், அவர் தீர்த்து வைப்பவர். இத்தனை வேறுபாடுகளையும் கடந்து 15 ஆண்டுகளாக இணைபிரியாத தம்பதியாக இருப்பதற்கு என் கணவரின் அன்பும், தோழமையான அணுகுமுறைதான் காரணம். என் மீதான அவரது அக்கறையின் சாட்சியான எங்கள் மகள் இப்போது ஏழாம் வகுப்பு படிக்கிறாள்!

- மல்லிகா அன்பழகன், சென்னை

உங்க வீட்டில் எப்படி?

தோழிகளே, இதைப் படித்ததும் உங்கள் வீட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளக் கைகள் பரபரக்குமே, கணவனே உங்கள் தோழனாக மாறிய தருணத்தை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்.

SCROLL FOR NEXT