பெண் இன்று

ஈஷா குப்தா @ இந்திய சாலைகள்: மகாநதிக் கரையோரம்...

செய்திப்பிரிவு

(இந்தியா, பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு என்பதை உலகுக்கு உணர்த்தும் நோக்கத்துடன் சவால்கள் மிகுந்த இந்திய‌ச் சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் தனி ஒருவராக வலம் வருகிறார் ஈஷா குப்தா. 37 வயதான ஈஷா குப்தாவின் மோட்டார் சைக்கிள் அனுபவங்கள் தொடர்கின்றன.)

சென்னை மெரீனா கடற்கரையில் தொடங்கிய எனது பயணம் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், ஒடிஷா, மேற்கு வங்கம், பிஹார், ஜார்க்கண்ட் என ஒன்பது மாநிலங்களைக் கடந்து, 10-வது மாநிலமாக சத்தீஸ்கரில் அடியெடுத்து வைக்கிறேன். கடந்த 60 நாட்களில் எண்ணற்ற சவால்கள், சிக்கல்கள், த்ரில்லிங் அனுபவங்கள் என எல்லாவற்றையும் சமாளித்து 18 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்திருக்கிறேன்.

மாவோயிஸ்ட் நடமாட்டம், ராணுவக் கெடுபிடி, பழங்குடி ஆயுதக் குழுக்களின் செயல்பாடு, மோசமான சாலை, பாதுகாப்பற்ற காடு எனப் பல்வேறு காரணங்களால் பெரும்பாலான பைக்கர்கள் சத்தீஸ்கருக்குள் நுழைவதில்லை.

ஆபத்துகளும், அபாயங்களும், அடர் காடுகளும் நிறைந்த சத்தீஸ்கரில் தனியொரு பெண்ணாகப் பயணிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

இந்தியாவின் இன்னொரு முகம்

ஜார்க்கண்டிலிருந்து பிஷ்ரம்பூர் வழியாக 36 கோட்டைகள் நிறைந்த சத்தீஸ்கருக்குள் நுழைந்தேன். கடந்த‌ 2000-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி உதயமானது சத்தீஸ்கர். இந்திய வரைபடத்தில் சிவப்பு வண்ணத்தால் தீட்டப்பட்டிருக்கும் ‘சிவப்புப் பிராந்தியத்தின்’ மையப்புள்ளி சத்தீஸ்கர். உண்மையில் இந்தப் பகுதி இந்தியாவுக்குள் இருக்கும் இன்னொரு இந்தியா. சத்தீஸ்கரின் உண்மையான முகம் இந்தியர்களே அறியாதது.

இரும்பு ஆலைகள், உருக்கு ஆலைகள், மின்சார உற்பத்தி நிலையங்கள், கனிம வளத் தொழிற்சாலைகளால் சத்தீஸ்கர் நிரம்பி வழிகிறது. 16 ஆண்டுகளுக்கு முன்பு மொத்த நில‌ப் பரப்பில் 50 சதவீதம் வனமாக‌ இருந்த சத்தீஸ்கர், ‘வளர்ச்சிப் பாதையில்’ பயணிப்பதால் தற்போது 10 சதவீத வனத்தை இழந்து நிற்கிறது. இந்த வன கிராமங்களில் தனித்துவம் வாய்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த பழங்குடியினர் வாழ்கின்றனர். அரசுக்கும், தனியாருக்கும், ஆயுத குழுக்களுக்கும் இடையே நடக்கும் அறிவிக்கப்படாத யுத்தத்துக்கு அப்பாவிப் பழங்குடிக‌ள் பலியாகின்றனர். உலக மானுடவியலாளர்கள் உச்சிமுகரும் தொன்மையான பழங்குடிகள் தற்போது தங்கள் மண்ணை விட்டு அகதிகளாக வேற்று நகரங்களுக்கு இடம்பெயர்கின்றனர்.

புத்துணர்வூட்டிய ஓய்வு

பிஷ்ரம்பூரைக் கடந்து சூரஜ்பூரில் உள்ள என் தோழியின் வீட்டுக்குச் சென்றேன். அங்கு காலனியில் இருந்த அனைத்து குழந்தைகளும் அழகிய ரோஜாக்களைக் கொடுத்து என்னை வரவேற்றனர். தோழி மற்றும் அந்தக் குழந்தைகளின் அன்பான கட்டளையின்பேரில் எனது தொடர் பயணத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளித்தேன். என்னைவிடக் கடுமையாக ஓடிய மைக்கியை சர்வீஸ் செய்தேன். அந்த இரு நாட்களும் காலனியில் உள்ள பெண்கள், குழந்தைகளுடன் நிகழ்ந்த கலந்துரையாடலில் எனது பயண அனுபவம், பெண்களின் பாதுகாப்பு தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டேன். நிம்மதியான ஓய்வுக்குப் பிறகு, அதிகாலையில் புத்துணர்ச்சியுடன் கிளம்புகையில் தோழியின் தாய் ஒரு பை நிறைய தின்பண்டங்களை அன்புடன் கொடுத்தார்.

சூரஜ்பூரிலிருந்து 400 ஆண்டுகள் பழமையான பிலாஸ்பூர் நோக்கிப் பறந்தேன். அந்தக் காலத்தில் இங்கு வாழ்ந்த ‘பிலாஸ்’ என்ற மீனவப் பெண்ணின் நினைவாக இந்த ஊருக்கு ‘பிலாஸ்பூர்’ என‌ப் பெயரிடப்பட்டிருக்கிறது. அங்கிருந்து பச்சைப் புல்வெளியாகக் காணப்படும் பர்னவபரா நோக்கிப் பறந்தேன். அங்கு 1976-ம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனவிலங்கு சரணாலயம் நிறுவப்பட்டுள்ள‌து.

சத்தீஸ்கரின் தலைநகரான ராய்ப்பூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மதிய உணவை முடித்துவிட்டு, மகாநதிக் கரையோரமாகப் பயணித்தேன்.

தன்னந்தனியே தண்டகாரண்யா காட்டில்

அதிகாலை வேளையில் ராய்ப்பூரில் இருந்து இந்தியாவின் அபாயகரமான வனமான‌ தண்டகாரண்யா நோக்கிப் பயணித்தேன்.ராமாயணத்தில் ராமன், சீதை, லட்சுமணன் ஆகியோர் வாழ்ந்த வனப்பகுதியாக அது நம்பப்படுகிறது. சத்தீஸ்கரில் தொடங்கி மத்தியப் பிரதேசம், ஒடிஷா, மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம் வரை பரந்திருக்கிறது தண்டகாரண்யா காடு. ஆனால் இன்று தண்டகாரண்யா காடு பஸ்தாராகச் சுருங்கிவிட்டது. பஸ்தார் மாவட்டத்தின் எல்லையான ஜெக்டால்பூரில் நுழையும்போது ராணுவ செக் போஸ்ட்டில் தீவிரக் கண்காணிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

என்னைப் பற்றி முழுமையாக விசாரித்த ராணுவத்தினர் ஒரு டோக்கனைக் கொடுத்து அடுத்த செக் போஸ்டில் காட்டுமாறு கூறினர். பெரும் மலைகளும், அடர் வனமும், ஆழமான பள்ளத்தாக்குகளும், அருவிகளும் நிறைந்த ஜெக்டால்பூர் மிக அழகிய பிரதேசமாகக் காட்சியளித்தது.

(தொடர்ச்சி அடுத்த இதழில்), தொகுப்பு: இரா.வினோத்

SCROLL FOR NEXT