நான் அரசுத் துறையில் பணியாற்றிவருகிறேன். சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தைத் தந்தது என்றால் எனக்கு ஏற்பட்டதோ பயங்கரமானது. தேர்தலுக்காக நான்கு கட்டப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. கடைசிப் பயிற்சி முடிந்ததும் அவரவர் பணிபுரிய வேண்டிய வாக்குச்சாவடி மையத்துக்குச் சென்று முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். என்னுடன் ஒரு பெண் அலுவலர், ஒரு மகளிர் காவலர், மூன்று ஆண் பணியாளர்கள் இருந்தனர். ஆண்களுக்கு ஒரு அறையும் பெண்களுக்கு ஒரு அறையும் ஒதுக்கப்பட்டது.
ஆண்கள் மூவரும் ஆசிரியர்கள். எங்களிடம் கடைக்குப் போகிறோம் என்று சொல்லிவிட்டு வெளியே சென்றனர். மூன்று மணி நேரம் கழித்துத்தான் வந்தனர். அதற்குள் நாங்களும் தேர்தல் அலுவலரும் அனைத்து முன்னேற்பாட்டு வேலைகளையும் முடித்துவிட்டோம். அந்த ஆசிரியர்களின் அறையில் உணவுப் பொட்டலங்கள் இருந்ததால் அதை எடுக்கச் சென்றோம். அவர்கள் குடிப்பதற்காகவே வெளியே சென்றனர் என்பது அப்போதுதான் புரிந்தது. அந்த அறைக்குள் நுழைய முடியாத அளவுக்கு நாற்றம் குமட்டியது. உணவுப் பொட்டலங்களை எடுத்துக்கொண்டு சட்டென வெளியே வந்துவிட்டோம். எங்கள் உடன் இருந்த பெண் காவலர், கதவைத் தாழிடும்படியும் எக்காரணத்தைக் கொண்டும் கதவைத் திறக்க வேண்டாம் எனவும் சொல்லிவிட்டு உறங்கினார்.
இரவு மணி பன்னிரெண்டைக் கடந்தும் அவர்கள் அறையில் உறங்காமல் வெளியில் படுத்து, போதையில் பிதற்றிக்கொண்டிருந்தனர். மறுநாள் விடிந்ததும் எங்கள் பணிகளைச் செவ்வனே முடித்துத் திரும்பினோம். ஆசிரியராகப் பணிபுரியும் இவர்களே இப்படிக் குடித்து, கும்மாளம் போட்டால் நாளைய சமுதாயம் என்னாவது? இவர்களிடம் படிக்கும் மாணவர்களுக்கு இவர்கள் எப்படி நல்லொழுக்கத்தைப் போதிப்பார்கள்?
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி.