பெண் இன்று

என் பாதையில்: நாற்பதுக்குப் பிறகு வாழ்க்கை இல்லையா?

செய்திப்பிரிவு

நான் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு, முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவி. பெண்கள் எப்போது ஆண்களுக்குச் சமமாக நடத்தப்படுவார்கள் என்கிற ஆதங்கம் எனக்கு எப்போதும் உண்டு. ஒரு நாள் நானும் என் அம்மாவும் பேசிக்கொண்டிருந்த போது திருமணம் பற்றிப் பேச்சு எழுந்தது. அப்போது என் அம்மா, “முன்பெல்லாம் பெண்களுக்கு 12-13 வயதிலேயே திருமணம் செய்துவைத்து விடுவார்கள். அதுதான் சரியான திருமண வயது. அப்போதுதான் சீக்கிரம் குழந்தைகள் பிறந்து, நமக்கு 35-40 வயதுக்குள் வாழ்க்கை முடிந்துவிடும்” என்றார். இதைக் கேட்டு நான் அதிர்ந்தேன். பால் மணம் மாறாத இளம் வயதிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்வது என்பதை நினைத்து அதிர்ந்தேன்.

ஏன் பெண்கள் விரைவில் மணம் முடிக்க வேண்டும்? பெண்ணுக்கு நாற்பது வயதுக்குப் பிறகு வாழ்கையே கிடையாதா? இன்று உலகம் முழுவதும் எத்தனையோ பெண்கள் வயது ஒரு தடையில்லை என்பதை உறுதி செய்யும் விதத்தில் பல சாதனைகள் நிகழ்த்திவரும்போதும் ஏன் இந்த மனநிலை அப்படியே உள்ளது?

ஏன் ஆண்களுக்கு இதுபோன்ற வயது வரம்பு இருப்பதில்லை? அவர்கள் மட்டும் படித்து, முடித்து, தனக்கென ஒரு பாதை அமைத்துக்கொண்ட பிறகு திருமணம் செய்துகொள்கிறார்கள். பெண்கள் மட்டும் பதிமூன்று வயதுக்குள் மண வாழ்வில் புகுந்துவிட வேண்டுமா? என்ன நியாயம் இது? இந்த நிலை எப்போது மாறும்?

- ச. தாரணி தேவி, தருமபுரி.

நீங்க என்ன சொல்றீங்க?

வாசகிகளே, மாணவி தாரணி தேவியின் கருத்துக்கு உங்கள் பதில் என்ன? உண்மையில் பெண்கள் என்றால் நாற்பது வயதுக்குள் எல்லாமே முடிந்துவிட வேண்டுமா? திருமணம் செய்வதும், குழந்தைகள் பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்குவதும் மட்டும்தான் பெண்களின் லட்சியமாக இருக்க வேண்டுமா? பெண்களுக்கென்று ஆசைகள், கனவுகள் எதுவும் இருக்கக் கூடாதா? ஓர் ஆணின் முன்னேற்றத்துக்கு திருமணம் எந்த வகையிலும் தடையாக இல்லாதபோது பெண்ணுக்கு மட்டும் அது ஏன் தடையாகிறது? உங்கள் கருத்து என்ன, அனுபவம் என்ன? எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம்.

SCROLL FOR NEXT