பெண் இன்று

இது எங்க சுற்றுலா: மஞ்சள் பூக்கள் மலரும் மலை!

செய்திப்பிரிவு

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் லோனாவாலா என்னும் இயற்கை எழில் கொஞ்சும் இடத்துக்கு என் குடும்பத்தினருடன் பயணமானேன். லோனாவாலா புனேவிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் இருக்கிறது. நகரமயமாதலின் சாயல் இன்னும் அதிகம் விழாத சிறு நகரான லோனாவாலாவின் எளிமை என்னை வெகுவாகக் கவர்ந்தது. இதமான, மிதமான குளிருடன் கூடிய பருவநிலை, அழகிய வண்ணப் பூக்களுடன் திகழும் சிறிய மலைக் குன்றுகள், பரந்து விரிந்த ஏரிகள் என ஒவ்வொன்றும் கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சி! மலைப் பிரதேசமெங்கும் பூத்துக் குலுங்கிய சிறு மலர்களை இன்றைக்கெல்லாம் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

ஒரு மாலை நேரத்தை ஏகாந்தமாகக் கழிப்பதற்கு உகந்த அழகான, இயற்கைப் பிரதேசங்கள் மற்றும் தாவரக்காடுகளைப் பின்னணியாகக் கொண்டு ‘புஷி அணை’ அமைந்துள்ளது. இதன் அமைதியான சூழலும், ஸ்படிகம் போன்ற நீரும் மனதுக்கு இன்பம் அளிக்கின்றன.

லோனாவானாவில் பாரம்பரியம் மிக்க கோட்டைகளும் புராதனக் குகைகளும் உள்ளன. கார்லா குகையின் அருகிலேயே ஏக்வீராதேவி கோயில் அமைந்துள்ளது. கார்லா குகைகயைப் போலவே பாஜா குகைகள் அமைந்துள்ளன. மாலை வேளையில் சூரிய ஒளி நேரடியாகக் குகைக்குள் விழுவதால் அதன் நுட்பமான வேலைப்பாடுகள் நன்கு தெரிகின்றன. மிகப் பெரிய சைதன்யம், எளிமையான எண்கோணத் தூண்கள், அவற்றின் மீது அமைந்த அரை நீள்வட்டம் கூரை, மர வளைவுகள், வெளிப்புறச் சாளரங்கள், நுட்பமான சிற்பங்கள் என இவற்றின் அழகை வர்ணித்துக்கொண்டே போகலாம்.

மகாராஷ்டிர உணவான வடாபாவ், போஹா, மிசெல் போன்றவை, அம்மாநிலப் பெண்களின் சேலை கட்டும் பாங்கு, ஆண்கள் பலர் காந்தி குல்லாய் அணிந்து வெண்ணிற உடைகளில் வலம் வந்தது என ஒவ்வொன்றையும் ரசித்தேன். அங்கே மும்பையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் எனக்குத் தோழிகள் ஆகிவிட்டனர். நம் ஊரின் பில்டர் காபியின் சுவையையும் மணத்தையும் வானளாவப் புகழந்தனர். இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட லோனாவாலாவின் அழகு, மழைக்காலங்களில் பன்மடங்காகிவிடுகிறது!

- முருகேஸ்வரி ரவி, சென்னை.

SCROLL FOR NEXT