பெண் இன்று

ஈர நிலத்தில் இரு பெண்கள்

செய்திப்பிரிவு

ரு அம்மா, அவருடைய மகள், கூரையால் வேயப்பட்ட ரம்மியமான வீடு. தனித் தீவுபோல் இருக்கும் அதைச் சுற்றிலும் பசுமை போர்த்தியதுபோல் பரந்து விரிந்த தோட்டம். வீட்டின் பின்புறத்தில் நிறைந்தோடும் ஆறு. இப்படியொரு இடம் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுவே சொர்க்கம்.
அப்படி ஒரு இடத்தில்தான் பின்ஸியும் நமியும் வாழ்கிறார்கள். அவர்களின் அன்றாட வாழ்க்கையோடு நம்மையும் ஒன்றச் செய்துவிடுகிறது லைஃப் இன் வெட்லேண்ட் (Life in wetland) என்கிற மலையாள யூடியூப் அலைவரிசை.
கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த யூடியூப் அலைவரிசை, தொடங்கிய ஒரே ஆண்டில் நான்கு லட்சம் சந்தாதாரர்களைப் பெற்றிருக்கிறது. பின்ஸி, அவருடைய மகள் நமி இவர்கள் இருவரின் அன்றாட வாழ்க்கையைப் பதிவுசெய்கிறது இந்த அலைவரிசை.
காலையில் எழுந்தது முதல் அடுப்பை மூட்டிச் சமையலுக்குத் தேவையான பொருட்களை ஏற்பாடு செய்வதிலிருந்து பின்ஸியின் நாள் தொடங்குகிறது. படகில் பள்ளிக்குச் செல்லும் மகள் நமி, அம்மாவுக்கு ஒத்தாசையாக இருக்கிறார். இயற்கையோடு இயைந்த இவர்களின் அழகிய வாழ்க்கையைப் பின்னணி இசையோடு அற்புதமாகப் பதிவுசெய்கிறது இந்த யூடியூப் அலைவரிசை.


தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேறியிருக்கும் இந்தக் காலத்திலும் இன்னமும் மின்சார வசதிகூடக் கிடைக்கப் பெறாத கேரளத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இவர்கள் வசிக்கிறார்கள். திருச்சூர் மாவட்டம் மதிலகம் கிராமத்தில் வசிக்கும் இவர்களின் எளிய வாழ்க்கை நகரத்தில் எல்லா வசதிகளும் கிடைக்கப் பெற்றும் அமைதியை இழந்து ஓடிக்கொண்டிருக்கும் நமக்குச் சற்றே பொறாமையை ஏற்படுத்துகிறது.


விறகடுப்பு, சமையல் முதல் சாப்பிடும் தட்டு வரை மண்ணாலான பாத்திரங்கள், மூங்கிலால் செய்யப்பட்ட தண்ணீர்க் கோப்பைகள். இவற்றைக் கொண்டே வீட்டில் இருப்பவர்களுக்குத் தேவையான உணவை எந்தவித அசதியுமின்றித் தயாரித்துவிடுகிறார் பின்ஸி. வீட்டைச் சுற்றியிருக்கும் அவர்களின் தோட்டத்திலிருந்தே சமையலுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் கிடைத்துவிடுகின்றன. ஆற்றில் கிடைக்கிற மீன்களையும் நண்டுகளையும் வைத்தே இறைச்சித் தேவையைச் சமாளிக்கிறார்கள் பின்ஸியும் நமியும். அத்தியாவசியத் தேவைகளுக்குத் தனியாளாக ஆற்றில் படகைச் செலுத்திக்கொண்டு சந்தைக்குச் சென்றுவருகிறார் பின்ஸி. இவை அனைத்தையும் கேமராவின் கண்கொண்டு அரூபமாக நின்று ஒளிப்பதிவு செய்கிறார் பின்ஸியின் கணவர்.


ஒரு நாள் புட்டு - கடலைக் கறி, அடுத்த நாள் பலாப்பழப் பாயசம், வேறொரு நாள் மரவள்ளிக்கிழங்கில் மற்றொரு பலகாரம் என்று நாள் முழுவதும் சமைப்பதும் பின்னர் அதை வீட்டு முற்றத்தில் இருக்கும் சாப்பாட்டு மேஜையில் வைத்து இருவரும் சாப்பிடுவதுமாக அவர்களின் பொழுது கடந்து செல்கிறது.


பாரம்பரிய உணவு வகைகளை மறந்துவிட்ட ஒரு புதிய தலைமுறையில், மண்ணும் காற்றும் நீரும் மாசுபட்டுவிட்ட நகரத்தின் சுற்றுச்சூழலிலில் வசிக்கும் நமக்கு இந்த ஈரநிலத்தின் குளுமையும் கேமராவின் வழியே ஈர்க்கவைக்கும் பின்ஸியின் சமையல் மணமும் இயற்கையுடனான தற்சார்பு வாழ்வைக் கைவிட்டுவிட்ட குற்றவுணர்வை நமக்கு ஏற்படுத்துகின்றன.
வீடியோவைக் காண: https://www.youtube.com/watch?v=qTYsS_yiRIk

SCROLL FOR NEXT