பெண் இன்று

வானவில் பெண்கள்: அறுபதுக்குப் பிறகும் வெல்லலாம் விருது!

ப.ஸ்வாதி

இந்தியக் குடும்பங்களைப் பொறுத்தவரை அறுபது வயது என்பது, வாழ்க்கையில் அனைத்துக் கடமைகளையும் முடித்துவிட்டு ஆய்ந்து, ஓய்ந்து உட்காரும் வயது. அப்படி ஓய்வைத் தேட வேண்டிய வயதில் ஓடி ஓடி விளையாடி, பரிசுகளைக் குவிக்கிறார் சித்ரகலா. மூத்தோருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடக்கிற இடத்தில் சித்ரகலாவை நாம் பார்க்கலாம். கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு மேலாக விளையாட்டுத் துறையில் ஈடுபட்டுவரும் இவரிடம் சில நிமிடம் பேசிக்கொண்டிருந்தாலே போதும். நம்மையும் அவரது உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

மெல்லிய குரல் மட்டும் வயதைப் பிரதிபலிக்க, விளையாட்டுக் களத்தில் வேறு முகம் காட்டுகிறார் சித்ரகலா. கோயம்புத்தூரைச் சேர்ந்த இவருக்குப் பள்ளி நாட்களிலிருந்தே விளையாட்டின் மீது ஆர்வம் அதிகம். காரணம் இவருடைய அம்மாவும் மாமாவும். சித்ரகலாவின் அம்மாவும் விளையாட்டுத் துறையில் ஈடுபாடு கொண்டவர். அம்மாவின் வழியில் மகளும் விளையாட்டின் மீது ஆர்வம் காட்ட, மகளுக்கு வீட்டிலேயே பயிற்சியளித்தார் சித்ரகலாவின் அம்மா. பயிற்சியும் ஆர்வமும் சரியான புள்ளியில் ஒருங்கிணைய, எந்தவொரு தடையும் இல்லாமல் வெற்றி இவரைத் தேடி வந்தது.

சோர்வில்லை துயரில்லை

1975-ம் ஆண்டு தொடங்கி, இன்றுவரை விளையாடிக் கொண்டிருக்கிறார். 1975-ல் தேசிய அளவில் செஸ் சாம்பியன், 1980-ல் ஸ்லோ சைக்கிள் போட்டியில் வெற்றி, 1981-ல் துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப் பதக்கம் என வெற்றிகளைக் குவித்து வருகிறார். இந்த ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் இந்தோரில் நடந்த தேசிய அளவிலான பில்லியர்ட்ஸ் போட்டியில் பங்கேற்று, இரண்டாம் சுற்றுவரை முன்னேறியுள்ளார்.

1975-ல் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொள்ள என்.சி.சி. மாணவியான சித்ரகலாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அப்போது நடந்த ரயில் போராட்டங்களால் அவரால் அணிவகுப்பில் கலத்துகொள்ள முடியவில்லை. அந்த ஏக்கத்தை விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற வெற்றி மீட்டுத் தந்ததாகக் குறிப்பிடுகிறார்.

கல்லூரி முடித்த பிறகு திருமணம் நடந்தது. குடும்பம், குழந்தைகள் என்றான பிறகு விளையாட்டுக்குப் போதுமான நேரம் ஒதுக்க முடியவில்லை. திருமணத்தைத் தன் விளையாட்டு ஆர்வத்துக்கு ஏற்பட்ட தடையாக ஒருபோதும் இவர் நினைக்கவில்லை. விளையாட்டின் மீதான தன் ஆர்வத்தையும் இவர் குறைத்துக்கொள்ளவில்லை. குழந்தைகள் ஓரளவு வளர்ந்த பிறகு, தன் ஆர்வத்துக்குச் செயல்வடிவம் கொடுத்தார். போட்டிகளில் உற்சாகத்துடன் பங்கெடுத்த சித்ரகலாவுக்கு, அவரது குடும்பம் பக்க பலமாக நின்றது. அதுவே அவரை வெற்றிகளை நோக்கி உந்தித் தள்ளியது.

உதவி செய்வதே மகிழ்ச்சி

விளையாட்டில் மட்டுமல்ல, அடுத்தவருக்கு உதவுவதிலும் இவருக்கு ஆர்வம் அதிகம். போர் நேரங்களிலும் இயற்கைச் சீற்றங்களின் போதும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்திருக்கிறார்.

“என் கண்ணெதிரில் யாராவது கஷ்டப்பட்டால் என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். நான் எங்கு சென்றாலும் பையில் சில போர்வைகளை வைத்துக்கொள்வேன். தெருவில் இருக்கும் மக்களுக்கு அவற்றைக் கொடுப்பேன். என்னால் பெரிய பெரிய உதவிகளைச் செய்ய முடியவில்லை என்றாலும் இது போன்ற சின்ன உதவிகளைச் செய்வதில் எனக்கு மகிழ்ச்சி” என்று சொல்கிறார் சித்ரகலா.

மனதுக்கு வயதில்லை

நடந்தால் மூச்சு வாங்குகிறது, படி ஏறினால் மூட்டு வலிக்கிறது என்று பலரும் புகார்ப் பட்டியல் வாசிக்கும் அறுபத்தியோரு வயதில், உடலைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் சித்ரகலா. அந்த ரகசியத்தை நம்மிடமும் பகிர்ந்துகொள்கிறார்.

“தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். சிறு வயதிலிருந்தே இப்படிச் செய்து வந்தால், மெனோபாஸ் காலம் வரும்போது பெண்களுக்குச் சிரமம் இருக்காது. அனைத்தையும்விட முக்கியம், மனதை எப்போதும் உற்சாகத்துடன் வைத்திருக்க வேண்டும். வயது ஒரு தடையே இல்லை, எந்த வயதிலும் நாம் சாதிக்கலாம் என்று நம்ப வேண்டும்” என்று சொல்லும் சித்ரகலா, ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு மணி நேரம்வரை பயிற்சி செய்கிறார்.

“இப்போது துப்பாக்கிச் சுடுதல், பில்லியர்ட்ஸ் போட்டிகளுக்குப் பயிற்சி எடுத்துவருகிறேன். நான் பங்கேற்று வெற்றிபெற வேண்டிய போட்டிகள் இன்னும் மிச்சம் இருக்கின்றன” என்று சொல்லும் போதே அறுபது வயது முகத்தில் இருபது வயதின் பிரகாசம்!

SCROLL FOR NEXT