கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகை சேத்னா ராஜ் (22) உடல் எடையைக் குறைப்பதற்காகக் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் உடல் எடை குறைப்பு சார்ந்த அழுத்தங்கள் தொடர்பான விவாதங்களைக் கிளப்பியுள்ளது. உடல் எடை குறைப்பு சார்ந்த உளவியல் காரணிகள், உளவியல் அழுத்தங்களுக்கும் உடல் எடைக்கும் இருக்கும் தொடர்பு ஆகியவை குறித்து ஆகியவை குறித்து சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மனநல மருத்துவத் துறை உதவிப் பேராசிரியர் மருத்துவர் அபிராமி அவர்களிடம் பேசியதிலிருந்து சில பகுதிகள்:
“பொதுவாகப் பெண்கள் தோற்றம் சார்ந்து கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். நடிகைகள் உள்ளிட்ட சிலருக்குத் துறை சார்ந்த தேவைகளுக்காகத் தோற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அவர்களில் ஒரு சிலர் அறுவை சிகிச்சை, கடுமையான உணவுக் கட்டுப்பாடு போன்றவற்றை நாடுகிறார்கள். பொதுவாகவே ஒல்லியாக இருக்க வேண்டும் என்னும் கவனம் அதிகரித்திருக்கிறது.
சிறுவயதிலிருந்து வளரும் மனநிலை
சிலருக்கு இந்த எண்ணம் சிறுவயதிலிருந்தே மிகத் தீவிரமாக இருக்கும். ஒல்லியாகத்தான் இருப்பார்கள்; ஆனாலும் குண்டாகிவிடக் கூடாது என்னும் அச்சத்தில் சாப்பிடாமல் இருப்பார்கள். இது ஒரு எல்லை என்றால் இன்னொருபுறம் சிலர் சிறுவயதிலிருந்தே மிகவும் அதிகப்படியாகச் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். உயிரியல், உளவியல் காரணிகள், வளரும் சூழல், சமூகக் காரணிகள் எனப் பல விஷயங்கள் இதில் பங்காற்றுகின்றன. விரும்பியதைச் சாப்பிடுவதா, ‘அழகு’ என்று கருதப்படும் தோற்றத்துடன் இருப்பதா ஆகிய இரண்டில் சிறு வயதிலிருந்து ஒருவர் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதைப் பொறுத்து இது அமைகிறது. சினிமா, மாடலிங் உள்ளிட்ட காட்சித் துறைகளுக்குச் செல்கிறவர்கள் உடல் எடைக் குறைப்பு, சிவப்பு நிறம், தோல் பளபளப்பு ஆகியவற்றுக்காகப் பல வகையான மருத்துவத்தை நாடுகிறார்கள். ஒரு கட்டத்தில் இதற்கு அடிமை(addiction) ஆகிவிடுகிறார்கள். இந்த அழுத்தம் காரணமாக உடல்நிலை சரியில்லை என்றால்கூட kகடுமையான உடற்பயிற்சி செய்வது போன்ற ஆபத்தான நடவடிக்கைகளை மேற்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்.
விழிப்புணர்வும் வாய்ப்புகளும் அதிகரிக்க வேண்டும்
தொழில்ரீதியாக உடல் எடையைக் குறைத்தாக வேண்டும் என்பவர்கள் அதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இதுபோன்ற ஆறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் அனைவருக்கும் தீங்கு விளைவதில்லை. சிலர் நன்றாகவும் இருக்கிறார்கள். இது ஒரு வகையில் தனிமனித உரிமைதான். ஆனாலும், இவற்றின் ஆபத்து குறித்த விழிப்புணர்வைத்தான் அதிகரிக்க வேண்டும்.
மேலும், உடல் எடையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி தாண்டி அறுவை சிகிச்சைகள் வரை செல்ல வேண்டுமா என்கிற கேள்வி அனைவருக்கும் எழ வேண்டும். ஆரோக்கியமாக வாழ்வதுதான் முதன்மையானது. அதற்கே ஆபத்து என்னும்போது இதுபோன்ற சிகிச்சை முறைகள் தேவையா என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆபத்தான சிகிச்சையை மேற்கொண்டால்தான் ஒரு துறையில் நீடிக்க முடியும் என்றால் வேறு துறையை வேறு தொழில்களை நாடுவதற்கான தன்னம்பிக்கையைப் பெண்களுக்கு அதிகரிக்க வேண்டும். வாய்ப்புகளும் அதிகரிக்கப்பட வேண்டும். இதுபோன்ற விஷயங்களையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு முன்னகர வேண்டிய தேவை இருக்கிறது.
அவசரத் தீர்வுகள் ஆபத்தானவை
அடுத்ததாக உடல் எடைக் குறைப்பு சார்ந்து அறிவியலுக்கு முரணான பல தீர்வுகளும் சிகிச்சைகளும் முன்வைக்கப்படுகின்றன. ‘இந்த எண்ணெய்யைக் குடித்தால் உடல் எடை குறைந்துவிடும்’ என்றெல்லாம் விளம்பரப்படுத்துகிறார்கள். உடல் எடை குறைப்புக்கான அறுவை சிகிச்சை என்பது மேம்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றம். அதுவே இவ்வளவு ஆபத்துகளைக் கொண்டுவருகிறது. இந்த சிகிச்சைகளால் மரணம் மட்டுமல்ல. நீண்ட கால உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
தொழில்ரீதியான காரணங்களுக்கு மட்டுமல்லாமல் சாதாரணர்களும் உடல் எடையைக் குறைப்பதில் அதீத அவசரம் காண்பிக்கிறார்கள். திருமணத்துக்காக இரண்டு வாரங்களில் எடை குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அது தீவிர பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். குறுகிய காலத்தில் இழந்த எடையை பலர் மீண்டும் பெற்றுவிடுகிறார்கள். முன்பைவிட அதிக பருமனாகிவிடுகிறார்கள். மிகக் கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைபிடிப்பது, ஒரு வாரத்துக்கு மிகக் குறைவாக சாப்பிட்டுவிட்டு அடுத்த வாரத்தில் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது போன்ற நடவடிக்கைகள் எடையை அதிகரிப்பதோடு பல பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. எடைக் குறைப்பு என்பது நிதானமானதாகவும் அறிவியல்பூர்வமான செயல்பாடுகளை மட்டுமே உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
எடை என்பது நிரந்தரமானதல்ல
குண்டாக இருப்பவர்களைக் கேலி செய்வது நீண்டகாலமாக இருக்கிறது. இப்போது ஃபிட்னஸ் சார்ந்த கவனம் அதிகரிப்பதால் சற்று சதைப் பிடிப்புடன் இருந்தாலே கிண்டலுக்குள்ளாக்கப்படுகிறது. ஆனால், ஒருவர் சாப்பிடுவதும், எடையைக் குறைப்பதும் பிறருக்கானதாக இருக்கக் கூடாது. நம் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லையா என்பதை மருத்துவரீதியாக அறிந்துகொண்டு உடல் எடையைக் குறைப்பது அல்லது அதிகரிப்பது குறித்துத் தீர்மானிக்க வேண்டும். உடல் வாகு என்பது பலருக்கும் நிரந்தரமானதல்ல. இதைப் பருமனாக இருப்பவர்கள் மட்டுமல்ல, பிறரும் புரிந்துகொள்ள வேண்டும். ஒல்லியாக இருப்போர் நிரந்தரமாக ஒல்லியாக இருக்கப் போவதில்லை. மருந்துகளை உட்கொள்வது, வயது ஆகியவற்றின் காரணமாக எடை கூடலாம். ஒல்லியாக இருப்பதுதான் ஆரோக்கியமானது என்பதும் தவறு. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் 10 கிலோவரை எடை ஏற வேண்டும். இல்லையென்றால் அது குழந்தைக்கு ஆரோக்கியம் அல்ல. பாலூட்டும் பெண்கள் நிறைய ஆரோக்கியமான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். அப்போதும் உடல் எடை ஏறுவது குறித்து கவலைப்படக் கூடாது,. பிறகு எடையைக் குறைத்துக்கொள்ளலாம். சிலர் பரீட்சை நேரத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் படிப்பதால் அதனால் விளையும் மன அழுத்தம் காரணமாக நிறைய சாப்பிட்டு உடல் எடை கூடிவிடுவார்கள். அவர்கள் உடல் எடை ஏறுவது குறித்து கவனத்துடன் சாப்பிட மாட்டேன் என்று இருக்கத் தேவையில்லை. அதனால் அவர்கள் கல்வியும் பாதிக்கப்படும்.
எனவே, உடல் எடைக்காகப் பிறரைக் குறைசொல்வதற்கு முன்பு உடல் எடை சார்ந்த பிரச்சினைகள் எப்போதுவேண்டுமானாலும் நேரலாம் என்று யோசிக்க வேண்டும். எல்லோரும் கவனத்துடன் உடலை ஆரோக்கியத்துடன் பேண வேண்டும். அதற்கு அறிவியல்பூர்வமான வழிமுறைகளைக் கையாள வேண்டும்.”
தொகுப்பு - ச.கோபாலகிருஷ்ணன்
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription