பெண் இன்று

இது எங்க சுற்றுலா: அக்கம் பக்கம் பார்க்கணும்!

செய்திப்பிரிவு

வாசகிகளின் சுற்றுலா அனுபவத்தைப் படித்ததும் சமீபத்தில் எனக்கு நேர்ந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது. நான் என் நண்பர்கள் மற்றும் அக்காவுடன் வியன்னா சென்றிருந்தேன். ஹோட்டலில் தங்க முடிவெடுத்து உள்ளே சென்றோம். அப்போது வாசலில் சிலர் என்னிடம் ஒரு முகவரியைக் காட்டி வழி கேட்டார்கள். நானே ஊருக்குப் புதுசுப்பான்னு சொன்னேன். ஹோட்டல் வரவேற்பறையில் சூட்கேஸ் மீது என்னுடைய ஹேண்ட்பேகை வைத்தபடி நின்றுகொண்டிருந்தேன். வெளியே முகவரியை விசாரித்த நபர்கள் உள்ளே வந்து என்னிடமும், என் நண்பர்களிடமும் அதே கேள்வியை மீண்டும் கேட்டார்கள். தெரியாதுன்னு இப்போதானே சொன்னோம்னு நானும் கறாராக பதில் சொன்னேன். பேசிவிட்டுப் பார்த்தால் என் கைப்பையைக் காணோம். உடனே அந்த ஹோட்டல் மேலாளர் மூலமாக சிசிடிவி கேமரா மூலம் பார்த்தபோது, முகவரி விசாரித்தவர்கள்தான் என் கைப்பையைத் திருடிச் சென்றிருக்கிறார்கள்.

அந்தப் பையில்தான் பாஸ்போர்ட், முக்கியமான படிவங்கள் எல்லாமே இருந்தன. அடுத்த நாள் இந்தியாவுக்குக் கிளம்ப வேண்டும் என்பதால் ரொம்ப பயந்துவிட்டேன். உடனே என் நண்பர்கள், ட்விட்டர் தளத்தில் பதிவிடு என்று சொன்னார்கள். திரைத் துறை நண்பர்கள் பலரும் எனக்கு போன் செய்து விசாரித்ததுடன் ஆறுதலும் சொன்னார்கள். ஹோட்டல் மேலாளரும், “பக்கத்தில்தான் இந்தியத் தூதரகம், கவலைப்படாதீங்க” என்று சொன்னார். மாலை காவல் துறையினர் வந்து விசாரித்துவிட்டுச் சென்றார்கள்.

இணையதளம் மூலம் என்னுடைய சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொண்டு வியன்னாவில் உள்ள இந்திய தூதரகத்துக்குச் சென்றேன். இந்தியாவுக்கு எப்போது விமானம் என்று கேட்டுவிட்டு, அவசர பாஸ்போர்ட்டை மாலை வந்து வாங்கிக்கொள்ளும்படி சொன்னார்கள். இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என நினைக்கவில்லை. ஒரே நாளில் பாஸ்போர்ட் கிடைத்து, இரவே நண்பர்களோடு சென்னைக்குக் கிளம்பிவிட்டேன்.

பணம் கொஞ்சம் இழந்தேன். ஆனால் உயிருக்கு ஆபத்தில்லை. துப்பாக்கி, கத்தி எல்லாம் வைத்து மிரட்டாமல், கைப்பையை மட்டும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். எங்கே சுற்றுலா சென்றாலும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை என் வியன்னா பயணம் உணர்த்தியது. வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் சுற்றுலாவாசிகள்தான் திருடர்களின் முதல் குறியாக இருப்பார்கள். கணவன் - மனைவியாக வந்து பேச்சு கொடுப்பார்கள். அவர்கள் கையில் இருக்கும் குழந்தை நம்மைப் பார்த்து சிரிக்கும். அப்படி நமது கவனத்தைச் சிதறடித்து, நம் கையில் இருப்பவற்றை எடுத்துச் சென்றுவிடுவார்கள். அதற்கு அவர்களுக்குப் பத்து நொடிகளே போதும். அதனால் எப்போதும் உஷாராக இருங்கள்.

- வித்யூலேகா (நடிகை), சென்னை.

SCROLL FOR NEXT