பெண் இன்று

என் பாதையில்: பயணத்திலும் பாதுகாப்பு இல்லையே!

செய்திப்பிரிவு

இந்தியா பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு என்பதை உலகுக்கு உணர்த்தும் நோக்கத்துடன் இந்தியா முழுவதும் சாகசப் பயணம் மேற்கொள்ளும் ஈஷா குப்தா என்னை வியக்கவைக்கிறார். தனியொரு பெண்ணாகப் பயணம் செய்யும் அவரது துணிச்சலையும் உறுதியையும் நான் மதிக்கிறேன். ஆனால் அவரைப் போலவே ஒவ்வொரு பெண்ணுக்கும் சுதந்திரமான, பாலியல் அச்சுறுத்தலும் சீண்டலும் இல்லாத பாதுகாப்பான பயணம் வாய்க்கிறதா?

பேருந்துப் பயணமோ, ரயில் பயணமோ ஒரு சராசரி இந்தியப் பெண்ணுக்குப் பாதுகாப்புணர்வைத் தருகிறதா? எனக்கு 24 வயது. கடந்த நான்கு ஆண்டுகளாக வேலைக்குச் செல்கிறேன். காலையில் எட்டு மணிக்குக் கிளம்பி இரவு 7.30க்குத்தான் வீடு திரும்புவேன். சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஓமலூர்வரை பயணம் செய்கிறேன். பெரும்பாலும் அரசுப் பேருந்தில்தான் செல்வேன். பேருந்தில் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில்கூட ஆண்கள் உட்கார்ந்துவிடுவார்கள். எவ்வளவு நெரிசலாக இருந்தாலும் யாரும் எழுந்து இடம்தர மாட்டார்கள். மாதவிடாய் நாட்களின்போது வலியுடன் பயணிக்கும் வேதனையை வார்த்தைகளால் விளக்க முடியாது.

நிற்கக்கூட இடம் இல்லாமல் நின்றுகொண்டிருப்பேன். கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் உரசிக்கொண்டும் இடித்துக்கொண்டும் நிற்கிற ஆண்களை என்ன செய்வது? ‘கொஞ்சம் தள்ளி நில்லுங்க’ என்று சொன்னால் போதும். ‘பஸ்ஸுன்னா கூட்டம் இருக்கத்தான் செய்யும். வேணும்னா ஆட்டோல போக வேண்டியதுதானே’ என்று பதில் வரும். சில ஆண்களின் பார்வை ஸ்கேன் செய்வது போல மேலிருந்து கீழ்வரை பாயும். உடம்பே கூசிப்போகும்.

ஒரு முறை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒருவனைத் தட்டிக் கேட்டேன். சக பயணிகள் அனைவரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர எதுவும் சொல்லவில்லை. ஆண்களை விடுங்கள், ஒரு பெண்கூட எனக்கு ஆதரவாகப் பேசவில்லை. தவறாக நடந்துகொள்ளும் ஆண்களை நடத்துநர் எதாவது கேட்டால், ‘இவ யாரு உன் அக்கா பொண்ணா’ என்று கேட்டு கேலி செய்யத் தொடங்கிவிடுவார்கள்.

பெண்களிடம் கேவலமாக நடந்து கொள்வதில் படித்தவர், படிக்காதவர் என்ற வேறுபாடு கிடையாது. பொம்மைக்குப் புடவை கட்டினால்கூடத் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கும் ஆண்கள் மலிந்திருக்கும் இந்தச் சமூகம், பெண்களுக்கு எத்தனை பாதுகாப்பானது?

- அனிதா, சேலம்.

நீங்க என்ன சொல்றீங்க?

எங்கேயும் எப்போதும் பெண்களைத் துரத்தும் தொல்லை களிலிருந்து விடுபடுவது எப்போது? வீடு, அலுவலகம், பொது இடங்கள், பயணம் செய்யும் வாகனங்கள் இப்படி எதுவுமே பெண்களுக்குப் பாதுகாப்பானதாக இல்லையென்றால் பெண்கள் எங்கே போவது? எப்படித் தங்களைத் தற்காத்துக்கொள்வது? உங்கள் அனுபவம் என்ன? கருத்து என்ன? பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம்.

SCROLL FOR NEXT