ஒரு பெண்ணுக்குத் திருமணத்துக்குப் பிறகு குடும்பம் மட்டும்தான் வாழ்க்கை என்பது பலரது நினைப்பு. இப்படியான சிந்தனைகள் மலிந்திருக்கிற சமூகத்தில், குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, தன் கனவுகளையும் நிறைவேற்றியிருக்கிறார் உஷா ரமேஷ். சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த இவர், கைவினைப் பொருட்கள் செய்வதில் வல்லவர். ஆடைகளிலும் பலவிதமான வேலைப்பாடுகளைச் செய்து அசத்துவார். எதிலுமே புதுமையைப் புகுத்துவது இவரது பாணி.
விருதாச்சலத்தில் பிறந்து, வளர்ந்த உஷா ரமேஷ், ஆறு வயதிலேயே கைவினைப் பொருட்களைச் செய்யத் தொடங்கிவிட்டார். கல்லூரி படிக்கும்போது ஃபேஷன் நகைகள் செய்து, தனக்கெனத் தனி தோழிகள் வட்டத்தை உருவாக்கிக்கொண்டார். திருமணம் முடிந்து சென்னை வந்தார். குடும்பப் பொறுப்புகள், குழந்தைகள் வளர்ப்பு என்று காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு நாட்கள் நகர்ந்தாலும், கிடைக்கிற கொஞ்ச நேரத்தையும் கைவினைப் பொருட்கள் செய்வதில் செலவிட்டார்.
வழிகாட்டிய மும்பை பெண்கள்
“எனக்குப் பிடித்த கைவினைக் கலையை என் தொழில்முனைவோர் கனவுக்கான அடித்தளமாகப் பயன்படுத்த காரணம் மும்பை பெண்கள்தான். ஒரு முறை மும்பை சென்றிருந்தபோது அங்கிருக்கும் பெரும்பாலான இல்லத்தரசிகள் வீட்டிலிருந்தபடியே ஏதாவது சிறுதொழில் செய்வதைப் பார்த்தேன். சமையலறை பொருட்களை விற்பது, துணிகளில் வேலைப்பாடு செய்வது, ஓவியம் வரைவது இப்படி அவர்களுக்கு எது கைவருமோ அதைச் செய்தனர். அதைப் பார்த்தபோதுதான் எனக்கும் தொழில்முனைவோராகும் எண்ணம் வலுவானது” என்று சொல்கிறார் உஷா.
இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளின் எம்ப்ராய்டரி வேலைப்பாடு வகைகளை இவர் கற்றுவைத்திருக்கிறார். பல்வேறு மாநிலங்களின் ஓவிய பாணிகளும் உஷாவுக்கு அத்துப்படி. ஃபேஷன் நகைகளில் காலத்துக்கு ஏற்ற மாதிரி புதுப்புது விஷயங்களைப் புகுத்திவிடுகிறார். கரி ஓவியம், ஊசி ஓவியம், காபி ஓவியம் போன்றவை இவரது தனிச்சிறப்புகள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று கைவினைக் கலை குறித்துப் பயிற்சியளித்த அனுபவமும் இவருக்கு உண்டு. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாகக் கைவினைக் கலையில் ஈடுபட்டுவரும் இவர், பயிற்சி வகுப்புகளையும் நடத்துகிறார்.
தானியங்கள், விதைகளை வைத்து நகை செய்வது இவரது சமீபத்திய முயற்சி.
“நெல், கோதுமை, காராமணி, பூசணி விதை இப்படி பல்வேறு பொருட்களை வைத்து நகைகள் செய்கிறேன். குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் தருவதுடன், அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் ஏற்றதாக இருக்கின்றன இந்த நகைகள். தானிய வகைகள் என்பதால் உடைந்துவிடுமோ, பூச்சி அரித்துவிடுமோ என்ற கவலை தேவையில்லை. அப்படி எதுவும் ஏற்படாத வகையில்தான் இவற்றை வடிவமைக்கிறேன்” என்று சொல்கிறார் உஷா.
தன் கைவினைக் கலையார்வத்துக்கும் குடும்பப் பொறுப்புக்கும் இடையே நேர்த்தியான கோடு வரைந்து அதற்கேற்ப பணிகளைத் திட்டமிடுகிறார் உஷா. அதுவே அவரை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்கிறது!
உஷா ரமேஷ்